தலாக் தலாக் தலாக் (2)

"அம்ஜத், என்ன அப்டிப் பாக்காத. நீ பாக்கறதப் பாத்தா, நாந்தான் ஆயிஷாவுக்கு அந்த ஒரு நாள் மாப்பிள்ளயா இருக்கணும்னு சொல்ற மாதிரி இருக்கு. அல்லா, நம்மால முடியாதப்பா. ஆள வுடு, நா கௌம்பறேன்.”

விருட்டென்று எழுந்து நின்ற அலியின் தோள்களைப் பற்றி அழுத்தி அமர்த்தினான் அம்ஜத்.

"அலி, அலி, ஒன்ன விட்டா இந்த விஷயத்ல எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு யாருமே இல்ல நண்பா. யாரோ முன்னே பின்னே தெரியாத அயோக்யன் ஒருத்தன் என்னோட ஆயிஷாவ அனுபவிச்சிட்டுப் போறத நா எப்டி சகிச்சிக்க முடியும் அலி.”

"அதுக்கு? அவள அனுபவிக்க என்ன நீ நிர்பந்திக்கிறியா? ஆயிஷாவ நா ஸிஸ்டர் மாதிரிப் பாக்றேன்னு ஒனக்குத் தெரியாதா அம்ஜத்?”

"அட, ஆபத்துக்குப் பாவமில்லடா அலி. ஹஸீனா, நீ சொல்லும்மா. என்னம்மா நீயும் என்ன அப்டிப் பாக்கற. ஒன்னோட உயிர்த்தோழிக்காக ஒம்புருஷன நீ ஒரெயொரு நைட்டுக்கு விட்டுக் குடுக்கத்தான் வேணும்மா. அதோட, இந்தப் பயலையும் ஒன்னோட தோழியையும் நீ தான் சம்மதிக்க வக்யணும்.”

அம்ஜத், அலியின் தோள்களைப் பற்றியிருந்த கைகளை எடுத்து, ஹஸினாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

"ப்ளீஸ் தங்கச்சி. எனக்கும் ஆயிஷாவுக்கும் புது வாழ்வு குடுக்கிறது ஒங்கைலதாம்மா இருக்கு. ஒன்னோட தோழி எவனோ ஒருத்தன் கூட படுக்கையப் பகிர்ந்துக்கிறது ஒனக்கே அருவறுப்பாத் தானே இருக்கு. அலியப் பார். அழகு இருக்கு, அறிவு இருக்கு, அந்தஸ்து இருக்கு. நல்லவன், நாணயமானவன், நாகரீகமானவன். அலின்னு சொன்னா ஆயிஷாவும் கொஞ்சம் கீழ எறங்கி வருவா. ரொம்ப யோசிக்க மாட்டா. அவளுக்கு நா வேணுமில்லியா! அவள சம்மதிக்க வச்சிரலாம். அது ஒன்னால தான் முடியும் ஹஸீனா. ப்ளீஸ்ம்மா. ஓக்கே சொல்லும்மா. நாலு மனைவிகளக் கட்டிக்கிர்றதுக்கு இஸ்லாத்ல அனுமதியிருக்கு. ஆயிஷாவ நிக்காஹ் செஞ்சிக்கிட்டு ஒடனே அலி அவளுக்குத் தலாக் சொல்லிருவான். கொஞ்சம் பெரிய மனசு பண்ணும்மா.”

ஹஸீனா சலனமில்லாமலிருந்தாள். பிறகு, அருகிலிருந்த அலியைத் திரும்பிப் பார்த்தாள். அலி அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான். பொறுமையிழந்து அம்ஜத் திரும்பவும் கெஞ்சினான். "சரின்னு சொல்லு ஹஸீனா. நீ சொன்னா அலி கேப்பான். ஆயிஷாவும் கேப்பா.”

"அதப்பத்தி இன்ஷா அல்லாஹ் நா யோசிக்கிறேன், கொஞ்சம் டைம் குடுங்கண்ணே" என்றாள் ஹஸீனா.

"இத்தனை ப்ரச்சனைக்கும் காரணமான, பாவச் சின்னமான அந்த மொட்டக் கடுதாசியக் கொஞ்சம் குடுங்களேன் அண்ணே, நானும் அதக் கொஞ்சம் பாக்கறேன்.”

சட்டைப் பாக்கெட்டில் நாலாய் மடித்து வைத்திருந்த கடிதத்தை எடுத்து நிமிர்த்தி அம்ஜத், ஹஸீனாவிடம் நீட்டினான்.

வெறுப்புடன் ஹஸீனா கடிதத்தை வாசித்துப் பார்த்தாள். அருகில் அலி, அக்கறையில்லாமல் இருந்தான். ஒரு முறைக்கு ரெண்டு முறை கடிதத்தை வாசித்துவிட்டு அம்ஜதிடம் திருப்பிக் கொடுத்த பிறகு, ஹஸீனாவும் அலியும் கிளம்பினார்கள்.

காரில், டிரைவர் ஸீட்டில் ஹஸீனா.

பக்கத்திலிருந்த அலியிடம் பேச்சுக் கொடுத்தாள், அவன் பக்கம் திரும்பாமலேயே. "நீ சொன்னா அலி கேப்பான்னாங்களே அண்ணன், நா சொன்னாத்தான் நீங்கக் கேப்பீங்களாக்கும்?”

"என்ன, கிண்டல் பண்றியா? இந்த விஷயத்ல நீ சொன்னாலும் நா கேக்க மாட்டேன். யார் சொன்னாலும் கேக்க மாட்டேன்.”

"நிச்சயமா?”

"நிச்சயமா.”

"ஆயிஷா மேல ஒங்களுக்கு ஒரு கண்ணு இருந்தது, இருக்குங்கிறது உண்மை தானே?”

"ஒளராத. ரோடப்பாத்து வண்டிய ஓட்டு.” "ஆயிஷாவ அடையணும், ஒரு தடவையாவது அவள அனுபவிக்கணும்னு ஒங்களுக்கு ஆசை இருந்ததில்லன்னு அல்லா மேல சத்யம் பண்ணிச் சொல்லுங்க?”

"அல்லா மேல எல்லாம் சத்யம் பண்ணக் கூடாது. ஒனக்கு மூள மழுங்கிருச்சி, வாய மூடிக்கிட்டு வா.”

"ஒங்களுக்கு அழகு, அறிவு, அந்தஸ்து எல்லாம் எக்கச்சக்கமா இருக்கறதா அடுக்கிக்கிட்டே போனாங்களே அண்ணன்!”

"அதுக்கென்ன இப்ப?”

"அதுக்கு ஒண்ணுமில்ல. அடுத்த படியா சொன்னாங்களே, நல்லவன், நாணயமானவன், நாகரீகமானவன்னு, அங்க தான் ஒதக்கிது.”

"ஏன், நா நல்லவனில்லியா, நாணயமானவனில்லியா, நாகரீகமானவனில்லியா?”

"நல்லவர், நாணயமானவர், நாகரீகமானவர் மொட்டக்கடுதாசி எழுதலாமோ?”

"ஏய், என்ன பினாத்ற, அறஞ்சன்னா பல்லு கில்லு எல்லாம் பேந்துரும் தெரியுமா.”

"கையக் கொஞ்சம் மடக்கி வைய்ங்க சார். உணர்ச்சி வசப்படாதீங்க. ஆயிஷாவோட ஒரே ஒரு நைட்டாவது இருந்துரணும்னு ஒங்களுக்கு இருந்த வெறியில நீங்க அம்ஜத் அண்ணனோட அவசரப் புத்திய பயன்படுத்திக்கிட்டீங்க. ஆயிஷாவோட நடத்தையப் பத்தி ஒரு கதை கட்டி மொட்டக் கடுதாசி ஒண்ணட் டைப் பண்ணி அண்ணனுக்கு அனுப்பிச்சீங்க. ஆத்திரத்ல அண்ணன் ஸிம்ப்பிளா மூணு தலாக் சொல்லி ஆயிஷாவக் கழட்டி விட்ருவார், அப்புறம் தன்னோட தப்பை ரியலைஸ் பண்ணி ஆயிஷாவோட திரும்பவும் வாழணும்னு வேகமாயிருப்பார்,

திரும்பவும் அவள நிக்காஹ் பண்ணனும்னா ஆயிஷா இன்னொருத்தன நிக்காஹ் செஞ்சு ஒரு தடவையாவது செக்ஸ் வச்சிக்கணும்ங்கற கண்டிஷன், எல்லாமே ஒங்களுக்குத் தெரியும். அந்த ஒரு நாள் மாப்பிள்ளையா இருக்க அவரோட பெஸ்ட் ஃப்ரண்டான ஒங்கள, அழகு அறிவு அந்தஸ்து எல்லாம் உள்ள ஒங்களத் தான் அண்ணன் விரும்புவார்ங்கறது ஒங்கக் கணக்கு. இந்த நிமிஷம் வரக்யும் ஒங்கக் கணக்குக் கரெக்ட். Am I correct?

"யேய் சனியனே, வண்டியத் திருப்பு. இப்பவே அம்ஜதப் பாத்து என்னால ஏலாது, வேற ஆளப்பார்றான்னு சொல்லிட்டு வந்துர்றேன்.”

"அவசரப் படாதீங்க டாளிங். அந்த மொட்டக் கடுதாசிய நா படிச்சிப் பாத்தேனே.”

"ஸோ?”

"அது கம்ப்யூட்டர்ல டைப் பண்ணின கடிதம்.”

"ம்.”

"அதுல ஒரு டைப்பிங் மிஸ்ட்டேக் இருக்கு. அத அப்டியே விட்டிருக்கலாம். விட்டுராம, பேனாவால திருத்தியிருக்கீங்க, ஒங்கக் கையெழுத்துல.”

இறுதி வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்ததோடு ஹஸீனா காரை ஓரங்கட்டி பிரேக்கை அழுத்தினாள். பிறகு பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிக் கணவனின் முகத்தைப் பார்வையால் ஊடுருவினாள். காரின் ஏஸிப் பனியிலும் அலியின் முகம் பூராவும் வியர்வை வியாபித்திருந்தது.

நிதானமாய் ஹஸீனா அவனைக் கேட்டாள்: "என்ன, வண்டியத் திருப்பட்டுமா?”

கவிதை உறவு, ஃபிப்ரவரி 2009.

About The Author