"தப்புப் பண்ணிட்டேன் தங்கச்சி" என்று கண்கலங்கினான் அம்ஜத், ஹஸீனாவைப் பார்த்ததும்.
"எவனோ ஒரு பாவி எழுதின மொட்டக் கடுதாசிய உண்மைன்னு நம்பி அவசரப்பட்டுட்டேன். அநியாயமா என்னோட ஆயிஷாவ இழந்துட்டேன்”.
ரெண்டு கைகளாலும் தலையைப் பற்றியபடி அம்ஜத் ஸோஃபாவில் தொம்மென்று உட்கார்ந்தான். அவனுக்கு எதிர்த்த ஸோஃபாவில் ஹஸீனாவும் அலியும் அமர்ந்தார்கள்.
கொஞ்ச நேரம் நிலவிய சங்கடமான மௌனத்தைக் கலைத்தாள் ஹஸீனா.
"அல்லாவால அனுமதிக்கப்பட்ட காரியங்கள்ளயே அல்லா வெறுக்கிற காரியம் விவாகரத்துதான்னு ஹதீஸ் இருக்குண்ணே. அந்த வெறுக்கத்தக்கக் காரியத்த நீங்க எப்டிச் செஞ்சீங்க. அதுவும் ஆயிஷா மாதிரி ஒரு உத்தமமான பொண்ண, நடத்தை சரியில்லன்னு அபாண்டமா குத்தஞ் சொல்லித் தலாக் சொல்லிட்டீங்க. நீங்க செஞ்ச பாவ காரியத்துக்கு ஆயிசுக்கும் ஒங்க மூஞ்சில முழிக்கக் கூடாதுன்னு இருந்தேன். இவங்க தான் சொன்னாங்க, நீங்க ஆயிஷவோட திரும்ப சேந்து வாழப் பிரியப்படறீங்க, அதப்பத்திப் பேசத்தான் எங்க ரெண்டு பேரையும் வரச் சொல்றீங்கன்னு. சரி, ஒரு ப்ராயச்சித்தத்துக்கு, ஒரு நல்ல காரியத்துக்கு நம்மாலான ஒத்தாசையச் செய்வோமேன்னுதான் நாங்க ரெண்டு பேரும் பொறப்பட்டு வந்தோம்.”
"ஆனா ஹஸீனா, அந்த ப்ராயச்சித்தத்துக்கு, அந்த நல்ல காரியத்துக்கு, எத்தனத் தடங்கல் இருக்கு தெரியுமா? எத்தன கண்டங்களக் கடக்க வேண்டியிருக்கு தெரியுமா?”
"இதுல தடங்கல் என்ன இருக்கு, கண்டங்களக் கடக்க என்ன இருக்கு அண்ணே? நீங்க அவளத் தலாக் சொன்னது தப்புன்னு உணர்ந்துட்டீங்க. திரும்பவும் ஆயிஷா கூட சேந்து வாழணும்னு மனப்பூர்வமா விரும்பறீங்க. அவளும் ஒங்களக் கணவனாத் திரும்ப அடையணும்னு தினமும் அஞ்சு நேரம் அல்லாவ வேண்டிட்டிருக்கா. அப்புறம் என்ன, ரெண்டு பேரும் திரும்பவும் நிக்காஹ் பண்ணிக்க வேண்டியது தான அண்ணே?”
"அது அவ்ளவு ஈஸியில்ல ஹஸீனா. தலாக் சொல்லி விலக்கப்பட்ட பொண்ணும் அவ புருஷனும் திரும்பவும் சேந்து வாழணும்னு விரும்பினா, அந்தப் பொண்ணு இன்னொரு ஆம்பளக்கி நிக்காஹ் பண்ணி வக்யப்பட்டு, அப்புறம் அந்த ஆம்பளயால தலாக் சொல்லப்பட்ட பின்னால தான் ஒரிஜினல் புருஷனத் திரும்பவும் கல்யாணம் பண்ணிக்க முடியும்.”
"அப்டி ஒரு சம்பரதாயம் இருக்கா இதுல!" என்று ஹஸீனா யோசனையில் ஆழ்ந்தாள்.
தான் எதிர்பார்த்த அதிர்வு ஹஸீனாவிடம் நிகழாதது அம்ஜதுக்கு உணர்த்தியது, தான் சொன்னதை அவள் முழுமையாய்ப் புரிந்து கொள்ளவில்லையென்பதை. அவன் அவளுக்கு உணர்த்தத் தலைப்பட்டான்.
"தங்கச்சி, நா சொன்னத நீ முழுசாப் புரிஞ்சிக்கலன்னு நெனக்கிறேன். அந்த டெம்ப்பரரி நிக்காஹ், ஜஸ்ட் சம்பரதாயம் இல்லம்மா. அந்தக் கல்யாணம் பூரணத்துவ மடையணும். அதாவது, அந்தப் பொண்ணு அந்த மாப்பிள்ள கூடப் படுத்துக்கணும். அதாவது, the marriage has to be consummated. They must have intercourse."
"வாட்?" டென்று துடித்து எழுந்து நின்றாள் ஹஸீனா. “என்ன அண்ணே சொல்றீங்க நீங்க!”
"ஆமா தங்கச்சி. அப்டித்தான் நம்ம மார்க்கம் சொல்லுதாம். நா நம்மப் பேஷ் இமாம்ட்டக் கூடக் கேட்டேன். அவரும் அப்டித்தான் சொல்றார். அதான் எனக்கு ரொம்ப வேதனையா இருக்கும்மா. I have done a great blunder, sister."
"இது கொடுமை அண்ணே. தான் மனசார விரும்பற புருஷன் ஒருத்தன் இருக்க, ஒரு பொண்ணு எவனோ ஒரு அந்நிய ஆம்பளயோட படுத்துக்கணும், செக்ஸ் வச்சுக்கணும்னு நிர்பந்திக்கிறது காட்டுமிராண்டித்தனம். ஆத்திர அவசரத்ல தப்பு செய்றது ஆம்பள, நரகத்த அனுபவிக்கிறது பொம்பளையா? Why should a woman undergo torture for a man s blunder?”
"கொடுமையோ, காட்டுமிராண்டித்தனமோ, இதெல்லாம் தெரிஞ்சிருந்துங்கூட மடையன் நா அவசரப்பட்டுட்டேனே தங்கச்சி. இப்ப வேற வழியே இல்லியேம்மா, நா என்ன செய்றது!”
கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்க, கன்னங்கள் அதிர, நின்று கொண்டிருக்க முடியாமல் ஹஸீனா ஸோஃபாவில் விழுந்தாள்.
பக்கத்திலிருந்த அலி, அவள் கையைப்பற்றி அழுத்தி, சாந்தப் படுத்துகிற முயற்சியிலிருந்தான்.
எதிரில் அம்ஜத், தலை கவிழ்ந்து இருந்தான். உணர்ச்சிகள் கொஞ்சம் தணிந்த பிறகு ஹஸீனா பேசினாள்.
"அண்ணே, ஆயிஷா ஒங்களோட ஒய்ஃப் மட்டுமில்ல. எனக்கு உயிர்த்தோழியும் கூட. இப்டியொரு அசிங்கத்த அவ அனுபவிக்கிறத என்னால யோசிச்சிப் பாக்கவே முடியல அண்ணே. ஒங்க அவசர புத்தியினால இப்டியொரு கேவலத்துக்கு அவளத் தள்ளிட்டீங்களே அண்ணே!”
"என்னோட ஆயிஷாவ எவனோ ஒருத்தனுக்கு வலியப் பெண்டாளக் குடுக்கப் போறோமேங்கறது எனக்கு மட்டும் வேதனையாயும், கொடுமையாயும் இல்லியா ஹஸீனா? ஆனா வேற வழியே இல்லியேம்மா! எனக்கு ஆயிஷா திரும்ப வேணும், அவளுக்கும் நா வேணும். அதுக்கு இந்த ரூட்ல தானேம்மா போயாகணும். நீ தான் ஹஸீனா ஆயிஷாவப் பாத்துப் பக்குவமா எடுத்துச் சொல்லணும். இந்த ஏற்பாட்டுக்கு அருவறுப்புப் பட்டுக்கிட்டு அவ எந்த விபரீதமான முடிவுக்கும் போயிரக்கூடாது. ஆயிஷா இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல தங்கச்சி.”
"இப்பக் காதல் வசனம் பேசறீங்க. தலாக் சொல்லும் போது இது ஏன் தோணாமப் போச்சுண்ணே.”
"அதான் புத்தி கெட்டுப்போய்ட்டேனேம்மா. அதுக்குத் தானேம்மா இப்ப சித்ரவத அனுபவிக்கிறேன்.”
"நீங்க அனுபவிக்கிறது ஒண்ணும் சித்ரவத இல்ல. ஆயிஷா அனுபவிக்கப் போறது தான் சித்ரவத. முன்னே
பின்னே தெரியாத ஒரு ஆம்பள கூட படுத்து… ஐயே, நெனச்சுப் பாக்கவே முடியல.”
"சாரா அபுபக்கர்னு ஒரு கன்னட ரைட்டர் எழுதின நாவல் ஒண்ணு நேத்து வாசிச்சேன் தங்கச்சி.”
"அது ரொம்ப முக்யமா இப்ப?”
"சொல்றேன் கேளு. தலாக் பத்தின கதை தான். நம்மப் பிரச்சனை மாதிரியே ஒரு ஸிச்சுவேஷன். அந்தப் பொண்ணு, தன் புருஷனோட திரும்ப சேந்து வாழணும்ங்கறதுக்காக, அந்த ஒரு நாள் நிக்காவுக்கு சம்மதிக்கிறா. நிக்காஹ் அன்னிக்கி ராத்திரி, தன்னோட "மாப்பிள்ள" யார்னு பாக்கணும்னு, விருந்து நடக்கறப்ப எட்டிப் பாக்கறா. அந்த மாப்ள ஒரு அசிங்கமான உருவம். டீஸன்ட்டா சாப்பிடக்கூடத் தெரியாத காட்டான். இவளுக்குக் குமட்டிக்கிட்டு வருது. இந்த அருவறுப்பான ஜென்மத்தோடயா இன்னிக்கி நைட் நா படுத்துக்ணும்னு நெனச்சு அழுவுறா. அப்புறம், ராத்திரியோட ராத்திரியாக் காணாமப் போயிர்றா. அடுத்த நாள் ஆத்தங்கரைல அவளோட பொணம் கெடக்கு. இந்த மாதிரி ஒரு முடிவு என்னோட ஆயிஷாவுக்கு வந்துரக்கூடாது தங்கச்சி. அதனால…. ”
"அதனால?”
"அதனால நீ இன்னொரு உதவியும் எனக்கு செய்யணும் தங்கச்சி. நீ மட்டுமில்ல, நீங்க ரெண்டு பேரும். அதுக்குத்தான் ஒங்க ரெண்டு பேரையும் சேந்து இன்னிக்கி வரச் சொன்னேன்.”
அம்ஜதின் பார்வை அலியின் மேல் பதிந்து நிற்கவும், அலி கலவரமானான்.
(மீதி அடுத்த இதழில்)
இந்த கதை சரியான இஸ்லாமிய சட்டப்பிரகாரம் எழுதப்பட்டதாக இல்லை. ஆகவே இத்தகைய கதைகளை பிரசுரித்து முஸ்லிம்களின் மனதை நோகடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தலாக் கூடாது என்ற செய்தி தேவைதான் அதற்காக பெண்களைக் கேவலப்படுத்த வேண்டாம். இச்லாம் இப்படிச்சொல்வதாக த் தெரியவில்லை.இது முசுலீம் மனதை மட்டுமல்ல பெண்களின் மனதையும் புண் படுத்துகிறது.
this story is ridiculous, unacceptable and should be condemned.