பார்க்கும்போது பதறவைக்கிறது!
கேட்கும்போதே அதிரவைக்கிறது!
நாளும், நாளும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வாகிவிட்டன தற்கொலைகள்!
உலகில், தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிற்குத்தான் முதலிடம்! சென்றஆண்டு, இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 1,35,585! இது அதிரவைக்கும் புள்ளிவிபரம்! தற்கொலை செய்து கொள்வதற்கு விரக்தி, வேதனை, கைவிடப்பட்ட நிராதரவு நிலை, தோல்வியில் துவண்டு போதல், பொய்த்துப்போன நம்பிக்கை…. போன்ற பற்பல உணர்வுகள் காரணமாகின்றன.
படித்துப் பதைபதைத்த செய்திகள் இவை:
காதல் தோல்வியால், குடும்பவன் முறையால், தேர்வில் தோல்வியுற்றதால், வறுமைக் கொடுமையால், குடும்பகௌரவம் தொலைந்ததால்… இப்படி எத்தனை எத்தனையோ காரணங்களுக்காக, ஒரு நொடியில் எடுத்த முடிவினால் எத்தனை எத்தனை தற்கொலைகள் நிகழ்கின்றன!
தற்கொலை செய்துகொள்கிறவர்கள் கோழைகள் எனவும், இல்லை, தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்குத் துணிச்சல் பெற்றவர்களெனவும் இருவிதமாக மனோதத்துவ நிபுணர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் தற்கொலை செய்துகொள்கிறவர்கள் தண்டனைக்குரியவர்களா? அல்லது சந்தர்ப்பங்களுக்குப் பலியானவர்களா?
தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்கள் மரணத்திலிருந்து தப்பிவிட்டால் அவர்களைச் சட்டம் நிச்சயமாகத் தண்டிக்கும்! மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தில், பெண் ஒருவர், தன் உயிருக்கு உயிராக நேசித்த தோழி தற்கொலை செய்துகொண்டதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது காவல்துறை அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிகழ்ச்சி, தற்போதைய தற்கொலைச் சட்டங்களை மாற்றவேண்டிய அவசியத்தைப் பற்றிய ஒரு விவாதத்தைத் துவக்கியது.
தற்கொலைமுயற்சியில் ஈடுபடுபவர்கள் குற்றம் புரிந்தவர்கள் இல்லை; உதவி தேவைப்படுபவர்கள்! ஆனால், இப்போதுள்ள சட்டமோ அவர்களைக் குற்றவாளிகளென முத்திரை இடுகிறது. இது என்ன முரண்பாடு? இந்தியக் குற்றவியல் சட்டம் 309- ஆவது பிரிவின்படித் தற்கொலை தண்டிக்கப்படவேண்டிய குற்றம்! இந்தச் சட்டத்தின்படி, தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்கள் ஓராண்டுக்கால சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டையுமோ அனுபவிக்கவேண்டும்.
1987ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம், "அரசியல் அமைப்புவிதிகளின்படி வாழ்வதற்கு உரிமை இருப்பதைப்போல ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் உரிமை உண்டு" என்று குற்றவியல் சட்டம்309-ஐ நிராகரித்தது. உச்சநீதிமன்றமும் 1994ஆம் ஆண்டு இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் 1996ஆம் ஆண்டு, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒன்று இந்த முடிவை நிராகரித்து, "இந்திய அரசியல் சட்டப்படி, வாழ்வதற்கான உரிமை உண்டே தவிர உயிரை நீக்கிக் கொள்வதற்கில்லை" என்று கூறியது. குற்றவியல் சட்டத்தின் 309-ஆவது பிரிவு தற்கொலையைக் குற்றமாகக் கருதுவது அரசியல் அமைப்பின்படி செல்லத்தக்கது என்றும் கூறியது! ஆனால் சட்ட ஆணைக்குழு 2008ஆம் ஆண்டில், தற்கொலையைக் குற்றமாகக் கருதக்கூடாதென்று பரிந்துரை செய்தது. "தாங்கமுடியாத குடும்பப்பிரச்சினைகளாலோ, மனஉளைச்சல்களாலோ, மிகவும் வேண்டிய ஒருவரை இழந்துவிட்டதாலோ துயருற்று உயிரை மாய்த்துக்கொள்ள முயல்பவர்களை ஒரு புரிதலோடு அணுகாமல் தண்டிப்பது நியாயமற்றது" என்றும் வலியுறுத்தியது.
கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம், அருணா ஷன்பாக் என்பவரின் வழக்கில், குற்றவியல் சட்டம் 309-ஐ நீக்கும்படிச் சொல்லியது. உச்சநீதிமன்ற நீதிபதிகட்ஜு அவர்கள் "இந்தச் சட்டம் அரசியல் அமைப்பின்படிச் செல்லுமென்றாலும் காலத்திற்கு ஒவ்வாதது. தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு உதவியும் ஆறுதலும் தேவையேயன்றித் தண்டனையில்லை" என்று கருத்து தெரிவித்தார்.
சஞ்சய் பகாடியா, ஹரிஷ் ஷெட்டி போன்ற புகழ்பெற்ற உளவியல் வல்லுநர்கள் "தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களைத் தண்டனை என்று மேலும் அச்சுறுத்துவது அவர்களுக்கு மேலும் அதிகமான மனஉளைச்சலைத் தரும்!" என்று கூறுகிறார்கள்.
இந்திய அரசோ "இந்தியக் குற்றவியல் சட்டம் மிகவும் முக்கியமான விதிகளைக் கொண்டது, அதில் அவ்வப்போது தற்காலிகத் திருத்தங்கள் செய்வது சரியில்லை; அடுத்தமுறை, ஒட்டுமொத்தமாகக் குற்றவியல் சட்டத்தைத் திருத்துகையில் இந்தத் தற்கொலை பற்றிய சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரலாம்" என்று சொல்லி வந்தது.
ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டுகிற உடல்நிலை, சமூக நிராகரிப்பு போன்ற காரணங்களே தற்கொலைக்குக் காரணமாகின்றன. இந்தக் காரணங்களை ஆராயாமல் தண்டனை விதிப்பது அரசியல் சட்டம் 14ஆவது விதிக்குப் புறம்பானது!
அண்மைக்காலமாக, நடுவண் அரசின் நல்வாழ்வு அமைச்சரவை தற்கொலையைக் குற்றமாகக் கருதக்கூடாது என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. புதிதாகக் கொண்டுவரப்படும் உளநலப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவின் கீழ், தற்கொலை என்பது தண்டிக்கப்படவேண்டிய குற்றமில்லை என்று திருத்தம் கொண்டுவரப் பரிந்துரை செய்வது வரவேற்கத்தக்க ஒன்று.
தற்கொலை, சட்டரீதியாகத் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றா? இல்லை. உளவியல் ரீதியாக அணுகப்படவேண்டிய ஒன்று! மனம் சோர்வடைந்து, என்ன செய்வதென்று புரியாமல் தவித்து இந்த அதீதமான முடிவைத் தேடுபவர்களுக்கு அரவணைப்பே தேவை. சட்டத்தின் இரக்கமற்ற இரும்புக்கரங்கள் அல்ல!
(நன்றி: ‘பாடம்’ மாத இதழ்)
“