வலுவான பொழுதுபோக்கு ஊடகமாகத் திரைப்படம் திகழ்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த பொழுதுபோக்கு சாதனத்தை வைத்தே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயமாக ஆகி விட்டது.
இந்தப் பின்னணியில் பொழுதுபோக்கு மற்றும் பிரச்சார சாதனமாக ஆகி உள்ள திரைப்படங்களில் கதை அம்சம் எப்படி முன்னால் இருந்தது, தற்போது எப்படி உள்ளது என்பதை (தீர்க்கமாக அலசி ஆராய இடம் போதுமானதாக இல்லாததால்) மேலோட்டமாகப் பார்க்க முனைவோம்.
கதை வேறு, திரைக்கதை வேறு என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் படிக்கின்ற கதை பிரமாதமானதாக இருந்தாலும் வெகு ஜன ஊடகத்தில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்குத் தகுந்த மெருகு, அதில் தொழில்துறை ரீதியாக இருக்க வேண்டும். இதற்கு உதவி புரிவதே திரைக்கதையின் நோக்கம். ஒவ்வொரு ஷாட் ரீதியாக கதை நகர்ந்து பார்ப்பவர்களைக் கவர வேண்டும்; வணிக நோக்கில் போட்ட முதலை முதலில் திருப்பித் தந்து பின்னர் லாபம் ஈட்டித் தர வேண்டும்.
தமிழ்ப்படங்களின் மொத்தப் பார்வையாளர்கள் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள்! இவர்கள் ஏ,பி,சி மையங்கள் எனப்படும் பெரும் நகர் முதல் குக்கிராமம் வரை பரவி உள்ளனர்.
இவர்களுக்கு 150 நிமிடங்களில் ஒரு கதை, பாடல்கள், கவர்ச்சிகரமான நடனங்கள், நல்ல நகைச்சுவை, கனவில் மட்டுமே அனுபவிக்கக்கூடிய மதிப்பிடமுடியாத ஆடை ஆபரணங்கள், நேர்த்தியான இடங்கள் ஆகியவற்றை அழகான கதாநாயகன், நாயகி வாயிலாகக் காண்பிக்க வேண்டும். இது வணிக ரீதியிலான வெற்றிக்கான் முக்கிய அடிப்படைத் தேவை என்றாகிவிட்டது.
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் புராணக் கதைகள் கொடி கட்டிப் பறந்தன. பின்னர் ஐம்பதுகளிலிருந்து சரித்திர, சமூகக் கதைகள் திரைப்படங்களில் இடம் பெற ஆரம்பித்தன.
இந்தக் கால கட்டத்தில் சினிமா மட்டுமே வலுவான ஒரே பொழுது போக்கு சாதனமாக இருந்தது. ஆகவே, பெண்கள் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்க குடும்பக் கதைகள் ஏராளமாக வெளிவந்தன.
அண்ணன் -தங்கை உறவைச் சித்தரிக்க ஒரு ‘பாசமலர்’, கள்ளம் கபடமில்லாத ரங்கன், குடும்பத்திற்காகத் தன்னையே இழந்து பாடுபடும் ‘படிக்காத மேதை’, உடல் அளவில் ஊனமாக இருந்தாலும் மன அளவில் ஊனமில்லா பாத்திரத்தைக் கொண்ட ‘பாகப் பிரிவினை’ எனக் கதைகள் வலுவாக அமைந்து தமிழகத்தையே உருக வைத்தன.
பின்னர் வந்த பாலசந்தர் யுகத்தில் வித்தியாசமான எண்ணங்கள் படங்களில் அவரது உத்தியில் இடம் பெற ஆரம்பித்தன. சர்வர் சுந்தரம் முதல் சிந்து பைரவி வரை வித்தியாசங்கள் எத்தனையோ! கதை வலுவாக இருக்க, வசனம் அதற்கு உறுதுணையாக இருக்க, நடிப்பு சிறப்பாக அமைய பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்தக் கால கட்டத்தில் ஒரு படம் நூறு நாட்கள் ஓடினால் வெற்றிப் படம்தான்.
காதல் கதைகளை மையமாகக் கொண்ட படங்கள் ஏராளமாக வந்து வெற்றி பெற்றன. கல்யாணப் பரிசு (ஜெமினி) முதல் ஏராளமான சிவாஜி மற்றும் எம்ஜிஆர் படங்கள் குடும்பப் பின்னணியிலான காதல் ஃபார்முலாவில் வந்து வெற்றி நடை போட்டன.
பின்னர் வந்த பாரதிராஜா யுகத்தில் மண் வாசனை கமகமத்தது. பதினாறு வயதிலே என்ன நடக்கும் என்பதை கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் ரஜினியும் காண்பித்தபோது மலைத்துப் போனோம். இந்த பரம்பரையில் வந்த பாக்யராஜ் கதை சொல்லும் பாணியில் தனக்கென தனியான ஒரு இடத்தை வகுத்துக் கொண்டார். பாலக்காட்டு மாதவனாக அவர் அம்பிகாவுடன் நடித்தது ரசனைக்குரிய நல்ல கதையை மையமாகக் கொண்டுதான்!
இடையே ஏ.பி. நாகராஜன் யாருமே செய்யத் துணியாத காரியத்தைச் செய்து சாதனை படைத்தார். சரஸ்வதி சபதம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் என அவர் பிரம்மாண்டக் காட்சிகளையும் கூர்மையான வசனங்களையும் வாரி வழங்கினார்; மக்கள் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
சரித்திரப் படங்களான வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன் என இயல்பான கதை கொண்ட படங்களும் வெற்றி நடை போட்டன.
ஆனால், எண்பதுகளில் வந்த தொலைக்காட்சி சிறு குழந்தை போல கள்ளம் கபடமற்று முதலில் காட்சி அளித்தாலும், ஒலியும் ஒளியும் காட்சியிலிருந்து அசுர வேகத்தில் வளர்ந்து சினிமாவைக் குரல்வளையில் பிடிக்க ஆரம்பித்தது.
திரைப்படங்களுக்கான முக்கிய மாட்னி ஷோ ஆதரவாளர்களான தாய்க்குலம் தொலைக்காட்சிப் பெட்டியில் வீட்டிலிருந்தே தம் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர்.
விளைவு – நீண்ட சீரியல்கள் பெண்களை மையமாகக் கொண்டு தோன்ற ஆரம்பித்தன. வாரத்திற்கு சுமார் ஐந்து தொலைக்காட்சி சேனல்களிலிருந்து எண்பது சீரியல்கள்! எதைப் பார்ப்பது, எதை விடுவது – தாய்க்குலம் கலங்கிப் போனது.
இந்தக் கலக்கத்தில் பலியானது – திரைப்படங்களில் குடும்பக் கதைகள். பத்திரிக்கைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும்.
ஆக, திரைப்படத் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய ஆடியன்ஸாக- பார்வையாளர்களாக இருப்பது இளைஞர் குழாமே. இவர்களை ஈர்க்க காதல் கதைகளால் மட்டுமே முடியும் என்ற (தவறான) எண்ணத்தால் தற்போது தமிழ் திரையுலகம் கதையின்றி தடுமாறித் தவிக்கிறது. காதலை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ எவ்வளவு கேவலப்படுத்துமோ அவ்வளவு கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சென்று கொண்டிருக்கின்றன. ஒரு படம் பத்து நாட்கள் ஓடினாலே பத்து நாட்கள் என்பதை கொட்டையாக நூறு என்பது போலப் போஸ்டரில் போட்டு மகிழ்கிறார்கள்!
பிதாமகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அந்நியன், சந்திரமுகி என வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்ட படங்கள் வெற்றியைத் தந்தாலும் சங்கர், பாலா, ரஜினி, கமல் போன்றோரின் கடின உழைப்பும் காலம் காலமாக அவர்களோடு ஒட்டி இருக்கும் இமேஜும் ஓரளவு இவற்றின் வெற்றியின் பின்னணியில் உள்ளன.
மணிரத்னத்தின் மௌனமான ராகங்களும் ரோஜாக்களும் இளம் தென்றலாக நல்ல கதைகளோடு அவ்வப்பொழுது வீசுவதால்தான் தமிழ் சினிமா இன்னும் பிழைக்கிறது.
நவீன யுகத்தில் தொழில் நுட்பம் க்ராபிக்ஸ் வழியிலும் ஒளிப்பதிவு, இசை நுணுக்கம் வழியிலும் தன் விந்தைகளைக் காட்டவே கதை வலுவாக இருந்தால் மேலும் அதிக வலுவையும் பொலிவையும் பெறும் ஆச்சரியம் நிகழ்கிறது.
ஆனால், பத்துப் படங்களில் ஒன்றுதான் தேறுகிறது என்ற விகிதாசாரத்தை வைத்துப் பார்த்தால் தற்காலத் தமிழ்ப் படங்களில் கதை அம்சம் குன்றி வலுவிழந்து பொலிவிழந்து குழந்தைகள், பெண்கள், வயதானோர், இளைஞர்கள் ஆகியோரின் ஒட்டு மொத்த ஆதரவையும் பெறவில்லை என்ற முடிவுக்கு வர வேண்டி உள்ளது.
தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் சினிமா ஃபார்முலா சுருக்கமானது – சின்னக் கதை, அழகிய நடிகைகள், குத்துப் பாட்டு, வெட்டும் வசனம், ஆங்காங்கே சின்னக் காமெடி, இடுப்பசைவு நடனம், உதட்டசைவில் ஒட்டும் சில உச்சரிப்புப் பாட்டுக்கள், இன்ன பிறதான்!
ஒரு பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கிலம் ஏன் அருகில் உள்ள மலையாளப் படங்களில் காணும் மனித உணர்வை, நெருடும் உறவுகளின் மேன்மையை, காதல், பசி, ஏழ்மை, போர் போன்றவற்றின் அடிப்படையில் மனிதத்தில் ஏற்படும் மாறுதல்களைத் தமிழ்ப் படங்கள் அதிகமாகத் தந்ததில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை!
இதற்கு தமிழர்களின் திறமையின்மை ஒரு காரணம் இல்லை. பலத்த முதலீட்டில் வெளிப்படும் வணிக ரீதியிலான படங்கள் லாபத்தை ஈட்ட வேண்டுமென்றால் எட்டுக் கோடித் தமிழர்களின் ரசனை இப்படித்தான் என்று தாங்களாகவே சினிமா மாயத்தைத் தமிழ்த் திரையுலகத்தினர் ஒரு வரையறைக்கு உட்படுத்தி அந்த விதிமுறைகளுக்குள்ளேயே ஆடு புலி ஆட்டம் ஆடி சில சமயம் ஜெயித்தும் பல சமயம் வெட்டும் படுவதுதான் காரணம் ஆகிறது!
காலம் கண் திறந்தால், புதிய திறமைகள் வெளிப்பட்டால் தமிழ்த் திரைப்படங்களிலும் நல்ல கதைகளை நாம் காணக் கூடும்! பொறுத்திருப்போம்; காலம் மாறும்!
தமிழே பேசத்தெரியாத நடிகைகள், காசு கொடுத்து விருதுகளை வாங்கும் நடிகர்கள், சதா நிகழ்காலத்து இரட்டை அர்த்த வசனங்களாலும் ஆபாச நடனங்களாலும் தனது நிகழ்ச்சிகளை நிரப்பும் தொலைகாட்சிகள், மிகப்பெரிய ஊடக கலையாக இருக்க வேண்டிய சினிமாவை வெறும் பொழுது போக்காகிய வணிக பத்திரிகைகள், வெற்று விளம்பரங்களால் தரமில்லாதவற்றை வைத்து காசாக்கும் தயாரிப்பளர்கள் என்று எவரையும் நான் இகழப்போவதில்லை.
ஏனென்றால் இங்கு எல்லாமே வியாபாரம்.
Mஎர்cஅன்டிலெ ஏர…
சினிமா என்பது ஒரு பொழுது போக்கு என்பதை விடுத்து அதில் வன்முறை, ஆபாசம், அருவருக்க வைக்கும் வசனம் போன்றவை தேவைதானா என்பதை சினிமா சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல மக்களும் நன்றாக சிந்திக்க வேண்டும்