தருணம் (9)

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

காத்துக் கொண்டிருக்கும் உல்லாசபுரி

கோபிகிருஷ்ணன்

யாரையும் மாற்ற முயலாமல் இருப்பது ஒரு சௌகரியமான சித்தாந்தம். இதன் அடிப்படையில்தான் திரு பாண்டுரங்கன் அவர்களைக் குடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளாமல் போயிருக்கிறது. மேலும், போதையில் இருக்கும்போது திரு பாண்டுரங்கன் அவர்களின் மனம் மிக மிக விசாலமடைந்து விடுவதாலும் ஒரு தினுசான உன்னத நிலையையும் எய்திவிடுவதாலும் குடி அவருக்கு நல்லதையே செய்கிறது என்று வேறு எண்ண வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த நிலையில் அவர் ஒரு கனிவுப் பிழம்பாகவும் பரிவின் வட்ட ஒளியாகவும் பரிமளித்துக் கொண்டிருப்பவர்.

ஒரு முன்னிரவு, கூடுதல் நேரப் பணியில் ஆழ்ந்திருந்த இடத்தில் அவரது திடீர்ப் பிரவேசம் நிகழ்ந்தது. நான் அவரைச் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் கொஞ்சம் திகைத்துப் போகும்படி நேர்ந்துவிட்டது. தரம் வாய்ந்த விஸ்கியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
“வாருங்கள்! வேலையைத் தூக்கிப் போடுங்கள். வாழ்க்கையையும் கொஞ்சம் அனுபவியுங்கள்!” என்று கூவினார் பாண்டு. "எனக்குத் தெரிந்த முறையில் நான் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன்" என்றேன் பலவீனமாக.

"என்ன அனுபவிக்கிறீர்கள்? நான் பார்க்கும்போதெல்லாம் வேலைதான் செய்து கொண்டிருக்கிறீர்கள். சதா வேலை செய்தால் மனம் குழம்பிப் போய் விடும்" என்றார் பாண்டு. மனம் பிசகியவர்களை வேலையில் ஈடுபடுத்துவதே ஒரு வகை உளவியல் சிகிச்சை என்றும் வேலை செய்தால் மனம் பிறழாது என்றும் நான் போதுமான சுவாதீனத்துடன்தான் இருக்கிறேன் என்றும் சொல்லிப் பார்த்தேன்.

பாண்டுவுக்குச் சற்று எரிச்சல் வந்திருக்க வேண்டும். "உங்களது உளவியலைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள்" என்றார் உரக்க. “அதெல்லாம் அவ்வளவு சுலப சாத்தியமல்ல” என்று அவரிடம் எடுத்துரைத்தேன்.

"என் நினைவு சரியென்றால் நீங்கள் ஒரு பி.ஏ. சரியா?" என்று கேட்டார் திடீரென்று. நான் "ஆம்" என்றேன்.

"நீங்கள் மேற்கொண்டு படித்திருக்க வேண்டும்" என்று புத்திமதி சொன்னார். பிறகு அவர் தனது துறையைக் குறிப்பிட்டு அதில் நான் ஒரு டிப்ளொமொ பண்ணியிருக்கலாம் என்று கூறினார். நான் என்னுடைய சக துறையில் செய்திருந்த முதல் டிப்ளொமோவைக் குறிப்பிட்டேன். அவர் ஏன் அவ்வளவு ஆச்சரியப்பட்டுப் போனார் என்பது புரியவில்லை. கிட்டத்தட்ட குதித்தார் என்றே சொல்ல வேண்டும்.

"ஆ, எனக்கு ஏன் இது முதலிலேயே தெரியாமல் போயிற்று?! நான் உங்களை ‘பிட்ஸ்பர்க்’க்குக்கு அனுப்பியிருப்பேன்" என்றார். எனக்கு வெளிநாடு போவது அவ்வளவாக ஒத்துக்கொள்ளாத விஷயம் என்றும் இங்கேயே எனக்கு சக மனிதர்களுடன் ஒத்துப்போவது சில வேளை மகா சிரமமாகி விடுகிறதென்றும் சொன்னேன்.

"குறைந்தது இங்கேயே உங்களை ஒரு பெரிய பதவியில் இருக்க வைத்திருப்பேன்" என்று சங்கடப்பட்டுக் கொண்டார். ‘பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு நான்’ உணர்வு அதிகமாகச் சேர்ந்துகொள்ளும் குதூகலத்தில் கீழே இருப்பவர்களைக் காலில் போட்டு அவர்கள் துவம்சம் செய்துகொண்டிருப்பதையும், நல்ல வேளை நான் உயர் பதவியில் இல்லாதிருப்பது மனிதகுலத்துக்கு நல்லது என்றும் அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதாயிற்று.

இப்படி உயர் இலக்குகள் இல்லாமல் இருப்பது கொடுமை என்றும் இது ஒரு தேக்கம் என்றும் இந்த மனநிலை அபாயகரமானது என்றும் பாண்டு சொன்னார். இப்பொழுது அவரது வலது கரம் என் தோள்பட்டைகளை அரை ஆரமாக வளைத்திருந்தது. வாஞ்சை, மனித நேயம், தோழமை உணர்வு! அனைத்துக்கும் மேலாக சுவாசத்தில் இதமான விஸ்கி மணம்!

"நான் வாழ்ந்து முடிந்த ஒரு வாழ்க்கையின் நீட்சியில் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய வயதில் இது இயல்பானதுதான்" என்றேன். "உங்களுக்குக் குழந்தை இருக்கிறது. நீங்கள் மரணத்தைப் பற்றியெல்லாம் நினைக்கக்கூடாது" என்றார் பாண்டு மிக மிகப் பதட்டத்துடன். "நான் நினைக்காமலிருக்கும் பட்சத்திலும் அது சம்பவிக்கும்" என்றேன்.

"நீங்கள் வாழ்க்கையில் மிகவும் நொந்து போயிருக்கிறீர்கள். நான் சொன்ன டிப்ளொமோவைப் பண்ணுங்கள். நான் நல்ல ஒரு வேலை வாங்கித் தருவேன்" என்றார் பாண்டு தான் சொன்னதை மீண்டும் வலியுறுத்தியவாறு. எனக்குப் பட்டப்படிப்புகள் மேல் சமீபத்தில் உருவாகியிருந்த நம்பிக்கையின்மையைக் காரணரீதியில் அவருக்கு விளக்கினேன். ஆனாலும் பாண்டு தன் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. ஏறத்தாழ ஒரு சங்கல்பம்! தான் கூறியதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

இப்படி ஒரு முக்கால் மணி நேரம் கழிந்திருக்கும். பிறகு பாண்டு நினைவு திரும்பியவராக, வந்த விஷயத்தை நினைவூட்டிக்கொண்டு "சரி, இப்பொழுது எல்லாவற்றையும் விடுங்கள். நான் உங்களை அருமையான ஒரு விருந்துக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். சில அதிமுக்கியமான நண்பர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்" என்றார். வாழ்க்கையில் யாரும் முக்கியமானவர்கள் இல்லை என்றும் இந்தப் பிரபஞ்ச ஓட்டத்தில் அனைவரும் பகடைகள் என்றும் நான் விருந்துண்ணும் மனநிலையில் இல்லை என்றும் மறுத்துப் பார்த்தேன். ஆனால் பாண்டு பின்வாங்குவதாக இல்லை.
அலுவலக அறையை மூடிவிட்டு, பாண்டுவுடன் கிளம்ப வேண்டியதாயிற்று. அவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கொண்டேன். பக்கத்து பங்களாவிலிருந்து ஒரு குடும்பக் கும்பல் எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தது. அதில் கட்டை மீசையுடன் ஓங்குதாங்கான ஒருவர் தென்பட்டார். அவருக்கு வயது நாற்பத்து ஐந்து இருக்கலாம். வாகனத்தின் முன் பகுதியில் உட்கார்ந்திருந்த பாண்டுவுக்குப் பிரபஞ்ச ரீதியிலான தோழமை உணர்வு கரைபுரண்டிருக்க வேண்டும்; மீசைக்காரரை "ஹலோ அங்கிள்" என்று வரவேற்றார். இலக்கானவர் சிறிது தயங்கிப் பிறகு ‘ஹலோ’வைத் திருப்பியளித்து விட்டு வாகனத்துக்கு அருகில் வந்தார். "நீங்கள் என்னை எப்படி அங்கிள் என்று கூப்பிடலாம்? எனக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதானே இருக்கும்?" என்று கேட்டார் கோபாவேசத்துடன். ஆனால் பாண்டு சிறிதும் தளரவில்லை. "என்னை நினைவில்லையா? நான் … சார்ந்தவன்" என்று தன் நிறுவனத்தின் பெயரைச் சத்தமாகக் கூவி நாசப்படுத்தினார். "நீங்கள் யாரென்றே தெரியவில்லை" என்று மீசைக்காரர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். "உங்களுக்கு ஒருகால் மறந்திருக்கும்" என்றார் பாண்டு ஈனஸ்வரத்தில். மீசைக்காரர் விடாப்பிடியாக, அங்கிள் என்ற சொற்பிரயோகத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார், மீண்டும் ஒரு முறை. பிறகு சூழலில் தொய்வும் சலிப்பும் தோன்றின. மிகுந்த அசௌகரியத்துடன் மோட்டார் சைக்கிள் ஒருவாறு கிளம்பிற்று.

பாண்டு என்னை அழைத்துச் செல்லவிருக்கும் சொர்க்கபுரியை நினைத்து நான் குழம்பியவாறிருந்
தேன்.

–தொடரும்…

About The Author