மண்காற்று (2)
படைப்பு: கண்மணி குணசேகரன்
தொகுப்பு: எஸ்.ஷங்கரநாராயணன்
முன்பகுதி: தருணம் (5.1)
அய்யனாரு கோயிலு ஆலமரத்துச் சருவ வாரி செம்பு லிங்கத்தாத்தாக் கொல்லையில எறச்சிட்டு, குருவங் குப்பாத்தாங்க வூட்டுப் பனமரத்த சொயிட்டுது. படபடன்னு அடிக்குது. பனமட்ட, காய்ஞ்ச பனமட்ட ஒன்னு புடிவுட்டுப் போச்சி போல்ருக்கு. காத்துக்குப் புழுங்குதுன்னு விசிறிக்கிட்டு வருது அந்தரத்துல. மேற்க சுத்திக்கிட்டு வந்தது, பட்டுன்னு மொளாக் கொல்லிப் பக்கம் திரும்பனதும் எனக்கு ஆட்டம் கண்டு போச்சி. பூவும் பிஞ்சும், நொழஞ்சுதுனா தலமயிரப் பிடிச்சி ஆட்றாப்ல ஆட்டி, பொன அடிச்சி, பயங்கர வேகத்துல சுத்திக்கிட்டு வந்துடும். மொளாக்கொல்லிக்கிட்ட வந்து லேசா வடக்கே திரும்பினதுந்தான் எனக்கு ஏறன வெஷமெல்லாம் எறங்குச்சி. இருந்தாலும் களத்துல நொழைஞ்சிட்டுது. காய்ஞ்சிக்கிட்டு இருந்த மொளாய வாரிச் சொயிட்டு விசுறுச்சி. நெல்ல வேள, களத்தச் சுத்தி தொவர மெளா போட்ருந்ததால தப்பிச்சுது. மொளாய சூரவுட்டுட்டு மாமரத்துப் பக்கம் போனதும்தான் எனக்குக் கூழ் ஞாபகம் வந்தது.
கண்ணுமூடி தொறக்கறதங்காட்டியும் ஓடி, வாளிய மூடறதாங்காட்டியும் வேல வுட்டுட்டுது. கூழ் பூரா தூசியும் துப்புமாக் கெடக்குது. அறியா புள்ளிவோ கப்பல் மாதிரி பெரிய மாஞ்சருவு ஒன்னு மெதக்குது. இந்தத் தூசி துப்ப பாத்தப்பறம் மோசமாப் பசிக்குது. பாத்தா ஒன்னுங் கத நடக்காது. வெரலால தூசுத் துப்பத் தள்ளிச் சாய்ச்சிட்டு, வரப்புல ஒக்காந்து முட்டி மேல சாய்ச்சி வச்சிக்கிட்டு ஒரு பச்ச மொளாயக் கடிச்சி சத்தமா முழுங்கனன். கப கபன்னு எரியுது வவுறு. நெருப்பு மேலே தண்ணி பாயற மாதிரி முட்டிமேல வச்ச வாளியை வாயில வச்சி ஒரே இழுப்பா இழுத்து, நிமுந்தன். சுருங்கன வயிறு விரிஞ்சதும், மடங்கன எடத்துல வேர்வ உப்பு கோடு கோடாத் தெரியுது. இந்தப் புடி போதும்; இன்னங் கொறப் பொழுதுக்கு மாடு ஓட்டத் தாங்கும். வாயத் துண்டால தொடச்சிக்கிட்டு நிமுந்தா, எதுர்ல விசுவநாதன் பெலாங்கன்னு தல மட்டும் கொடை சுத்தற மாதிரி அந்தரத்துல சுத்துது.
பாவம்! எம்மாங் கஷ்டப்பட்டு வச்சி, கழி நட்டு, முள்ளு வச்சிப் பின்னிருந்தான்! தலய மட்டும் தனியா திருவி எடுத்துக்கிட்டுப் பூட்டுது. சாயந்திரம் வந்து பாத்தான்னா வாயிலியும் வவுத்திலியும் குத்திப்பான். அவங் கன்னுக்குப் பக்கத்துலதான் ‘பெரிய்ட்டு மாமரம்’. ஒட்டு ரகம். சும்மா புடிபுடின்னு புடிச்சிருக்கு. கிட்ட நெருங்கணும் காத்து! ஊரு ஆளுவோ மாதிரிதான் காத்தும் இருக்குமாட்ருக்கு. இல்லாதவன், வாய்க்கி செத்தவன், இவனுவளப் பார்த்துதான் மெரட்டுவானுவோ; கூரையைப் பிரிப்பானுவோ; தாலி கட்ன மாதிரி பொண்டாட்டிங்க கையப் புடிச்சி இழுப்பானுவோ. இருக்கறவன், ஆளு பட உள்ளவனக் கண்டா பாம்பு படத்தைப் போட்டுட்டுப் போற மாதிரி கமுக்கமாப் பூடுவானுவோ. பாவம் விசுவநாதன்! தல கூடன கன்னு பூட்டுது. இனி அதுமாதிரி வச்சி உண்டாக்க ரெண்டு மூணு வருஷம் ஆவும்.
இதுக்கு மின்னாடிலாம் சூரக்காத்து வந்துருக்கு. கோழி சேக்கரிக்கறாப்ல வரும். சும்மா அப்பிடி இப்பிடி கண்ணாம்பு சுத்தற மாதிரி சுத்திட்டுப் பூடும். என்னாத்துக்கு அறிகுறியோ, இம்மாங் கொடும பண்ணுது. யோசன பண்ணிக்கிட்டு இருக்கும்போதே காத்து நேரா நண்டு வூட்டுக் கெணத்துப் பக்கம் போச்சி. எவனோ துணி காய வச்சிருக்காம் போல்ருக்கு. அப்பிடியே சுருட்டி கெணத்துக்கு மேல ரெண்டு சுத்து சுத்தி கெணத்துல அழுத்திட்டுது துணிய.
இப்பிடிதான் நாலஞ்சி வருஷத்துக்கு மின்னால கேசவன் ஊரு ஏரில துணி தொவைச்சி கரமேல காயப் போட்ருக்கான். இந்த மாதிரிதான் சூரக்காத்து வந்துட்டுதாம். துணி தொவைச்சுக்கிட்டு இருந்தவன் ஓடியாந்து துணிவுள சுருட்டறதாங்காட்டியும் நொழஞ்சிட்டுது. எந்தத் துணியப் புடிப்பான்; சுருட்டுவான்! அது அது மண்ணப் பூசிக்கிச்சி. ரெண்டு மூண பக்கத்து ஓடயில கொண்டு போயி முள்ளுல வச்சி அழுத்திடுது. ஆனா ஒரு வேட்டிய மட்டும் உடுலியாம். அந்தரத்துல பறக்குதாம். "அய்யோ வேட்டி, அய்யோ வேட்டி"ன்னு கத்தறானாம் கேசவன். கோயில்ல ஒக்காந்திருந்தவங்க எல்லாம் எனுமோ ஏதோன்னுட்டு வெளிய ஓடியாந்து பார்த்தா கத்துக்கிட்டியே கேசவன் ஓடறானாம். கதயில வர்ற மாயக்கம்பளம் மாதிரி பறந்து போவுதாம் வேட்டி. யாராலதான் என்னா செய்ய முடியும்? காத்துக்கு காதா இருக்கு, போட்டுடுன்னா போடறதுக்கு? கேசவன் கத்திக்கிட்டியே ஓடறான். அவந்தொலைக்கறது எல்லாம் ரெட்டிவூட்டுத் துணிமணிதாம். "என்னா சொல்வாங்களோ, வேட்டி போனதுக்கு!" பாக்கறவங்களுக்கு சிரிப்பாவும் இருக்கு; கேசவனப் பாத்தா பாவமாவும் இருக்காம்.
அதும் பிறகு கொளஞ்சி சைக்கிள் எடுத்துக்கிட்டு ரோட்டு மேலயே போயி, வேட்டிய அடி நடத்தறானாம். அங்க இங்க இருக்கற சனமெல்லாம் வேட்டிய வேடிக்க பாக்குதுவோ. தண்ணியில உட்டு அலசவும் புழியவும் ஒதறுவுமாப் போவுதாம் மேல. கடைசியில இருளக்குறிச்சி ஏரிக்கரையில இருக்கற இலுப்ப மரத்துல சிக்கி நின்னிச்சாம். ஏறி எடுத்தாந்து பாத்தா வெள்ளவெளேர்னு தொவைச்ச வேட்டி சேவேர்னு இருக்குதாம் புழுதி அண்டி.
அதுமாதிரிதான் இப்ப துணிய கெணத்துக்குள்ளப் போட்டுட்டுப் பூட்டுது. கெணத்துல ஆளுவ இருக்கறானுவுளா இல்லியான்னு தெரியில. அதுக்குள்ள காத்து கெழக்காலப் பக்கமா நவுந்து ஏரிக்கரைக்கும் இங்காண்ட இருக்கற ஒரு பெரிய முந்திரி மரத்துல நொழஞ்சி சரசரன்னு சருவ அள்ளிக் கெடாசுது அந்தரத்துல. உள்ள கொட்ட பொறுக்கிக்கிட்டு இருந்த இரண்டு பேரு எனுமோ ஏதோன்னு வெளிய ஓடியாறாங்க. ஆடி மாசத்துல பறக்கற ஈசலப் புடிக்கறதுக்கு வட்டம் போடற குருவிவுளாட்டம் தெரியுது, அந்தரத்துல இந்த முந்திரிச் சருவுலாம் சுத்தறது.
மரமட்ட அதிகமா இல்லாததால இங்கேர்ந்து பாக்கப் பாக்க எனுமோ மாதிரி இருக்கு. சன நடமாட்டமில்லாம ஏரிக்கும் அங்காண்ட முந்திரியிலதான் அதிகமா இருக்கும். நானு திரும்பி மொளாக் கொல்லியப் பாத்தன். சூரக்காத்தப் பாத்துக்கிட்டு இருக்கற சூரவுட்டுடப் போவுது. ஒண்ணியும் காணம். மறுபடியும் கெழக்கத் திரும்பனன்.
முந்திரியப் பதம் பாத்துட்டு, காத்து லேசா வடக்க காட்னாப்ல கெழக்க நவுந்துது. ஏரிமோட்டப் பக்கம் அப்பிடியே கீழ எறக்கத்துல இருக்கற நொச்சிச் செடியலாம் ஒரு சொயிட்டு சொயிட்டி மாவரைச்சிட்டு ஏரிக்கர மேல ஏறும். ஏரி மோடு படு உதிரப் பொட்ட. நடப்பாட்டையில வேற மாவு மாதிரி கெடக்கும் பொட்ட மண்ணு. காத்து சுத்த செவப்பா மாறும். காத்து ஏரி மோட்டு எறக்கத்த நெருங்கிக்கிட்டு இருக்கும்போதே, உச்சி மோட்ல அங்காண்டேர்ந்து ஒரு வெறுவு கத்த ஏறறது தெரிஞ்சதும் எனக்குப் பக்குன்னு பூட்டுது. "எவனோ மாட்டிக்கிட்டான். அங்காண்ட எறக்கத்துலேர்ந்து ஏரிமோட்ல எறங்கவும், இங்காண்டேர்ந்து காத்து நொய்மண்ண மூஞ்சிக்கு நேரா சொயிட்டி அடிக்கவும் கண்ணும் தொறக்கமுடியாது; கத்தயையும் புடிக்க முடியாது. கொடுமதான்."
இப்பிடி சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, ஆளு இல்ல, பொம்பள சனமாட்ருக்கு. ஏரிமோட்ல ஏறவும், அதுக்கு மேல சூரக் காத்து எதுக்கொண்டு போகவும் சரியா இருந்துது. காத்தப் பாத்துட்டு தெவைச்சி நின்னு, கத்தய கெட்டியா இறுக்கிப் புடிக்குது. இருந்தாலும் காத்து மோசம்.
நடுச்சொழல்ல மாட்டிக்கிச்சாச்ச பொம்பள. அப்பிடியே ஒரு சுத்து சுத்தி ஒசரத் தூக்கிச்சி. என்னா பண்ணுவா பாவம்! வெறுவுக் கத்தயத் தூக்குவாளா. முட்டிக்கு மேல ஏறன பொடவயப் புடிப்பாளா! வெறுவ வுட்டுட்டு பொடவயப் புடிச்சி கீழ அழுத்தனா. கத்த வெறுவு அங்காண்ட தாக்குப் பள்ளத்துக்குப் பூட்டுது.
சும்மாடு நழுவி, கொண்ட அவுத்துக்கிட்டு காத்துல பறக்குது. இடுப்புல இருக்கறது அவுத்துக்கும் போல்ருக்கு. முந்தானிய காத்து இழுக்குது. காட்லேர்ந்து ஒடிச்சித் தூக்கியாந்த வெறுவு. அதோட காத்து சுத்தித் தூக்னப்ப சனம் இருந்திருந்தா எம்மாம் அசிங்கம்! எலவுட்ட மரமாட்டம் நின்னவ, எனுமோ மண்ணவாரி உடறாப்ல காத்து போன பக்கமா கைய நீட்டி ஆட்றா.
இங்கேர்ந்து பாக்கறதுக்கு, ஏரிமோட்டுமேல கைய ஆட்றதுதான் தெரியுது. என்னா பேசறான்னு, காதுல வுழுல. ஆனா "சாண்டக் குடிச்சவங் காத்த! காடு ஏலம் உட்டு கொட்ட பொறுக்கத்தான் யாரும் கூப்புடுலன்னு, நாலு வெறுவு ஒடிச்சாந்துனாச்சும் வித்து வவுத்தக் கழுவலாம்னு பாக்கறன் இந்த மொட்ட வெயிலுல. இது கூட ஒனக்குப் பொறுக்காம ஏம்பாவத்துல காயறுத்துட்டு என்னப் பங்கப்படுத்திட்டுப் போற…" இப்பிடிதான் பேசிக்கிட்டு நிக்கிறான்னு மட்டும் நெனச்சிக்கிட்டு ஏந்திரிச்சி ஏரிமோட்டப் பக்கம் போனன். போயி அந்த வெறுவக் கத்தயத் தூக்கி வுட்டுட்டு வரலாம், பாவம்!
(அடுத்த இதழில் தருணம் 6 – கி.ராஜநாராயணன்)
“