மனுஷன் மாதிரியும் இருந்திருக்கிறது, சாமி மாதிரியும் இருந்திருக்கிறது. கண்ணைக் கசக்கிவிட்டுக் கொண்டு தன் கையிலேயே கிள்ளிப் பார்த்திருக்கிறார். உத்துப்பார்த்ததில் வந்த உருவத்தின் கால் பூமியில் படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.
"என்ன பாக்கிறெ. ஏம் பேரு முனியப்பா. காட்டில் அலைஞ்சு அலைஞ்சு சோர்ந்து வருது. இனி எனக்குன்னு ஒரு எடமும் சனமும் வேணும். என்னை ஒரு பச்சைப் பானையில் அடைச்சி ஒன் ஊருக்குக் கொண்டு போ. ஒன் ஊருக்கு ஒரு கொறையும் வராமப் பாத்துக்கிறேன்"னு சொன்னதாம்.
பச்சைப் பானையைத் தலையில் வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டேயிருந்தாராம் அந்த ஆள். பொழுது சாய்கிற நேரம், ஊருணிக்கு நேரே இந்தப் பொட்டலுக்குள் வரும்போது பானைக்குள்ளிருந்து முனியசாமி ‘எனக்கு தண்ணி தவிக்குது. எறக்கிவிடு’ என்றதாம். எறக்கி வைத்துவிட்டு ஊருணிக்குள் போய்த் துண்டை தண்ணீரில் நனைத்து எடுத்து வந்து பானைக்குள் பிழிந்து ஊற்றினாராம். தண்ணீரைக் குடித்ததும் முனியசாமி கேட்டதாம் "அந்தா தெரியுதே அதுதானே ஒன் ஊர்?" ஆமா, என்றாராம் இந்த ஆள்.
அப்போது முனியசாமி சொன்னதாம், "என்னை இங்கேயே விட்டுவிடு. என் கோலத்தில் எனக்கு ஒரு சிலை வை. என் சிலைக்குப் பின்னால் எனக்கொரு அரசமரக் கன்றை ஊன்றிவை. அந்த அரசமரம்தான் எனக்குக் குடையும் கோபுரமும். பின்னால் என் மகிமை தெரிந்து எனக்குக் கூரை போட்டுக் கோபுரம் கட்டிப் பிரகாரம் கட்ட வேண்டாம். நான் நாடு காடெல்லாம் சுற்றித் திரிய வேண்டும். எனக்கு உண்டான பூசை காரியங்களுக்கு நீயும் உன் வம்சமும்தான் பொறுப்பு. ஒனக்கும் உன் வம்சத்திற்கும் இனி ஒரு குறையும் இல்லை."
அதன்படி நட்டு வளர்ந்ததுதான் அந்தப் பெரிய மரம்; வைத்துக் கும்பிடுவதுதான் அந்தப் பெரிய சிலை.
முனியப்பாவின் மகிமை வர வர அக்கம் பக்கமெல்லாம் பரவி தூர தூரத்து நகரங்களிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து வழிபட ஆரம்பித்தார்கள் இருபத்தாறு கிராமங்கள் கூடி முனியப்பாவிற்கு எருதுகட்டு எடுத்தார்கள்; மதுக்குடம் தூக்கினார்கள். பொங்கல் வைப்பதும் ஆடு வெட்டுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் அமளிப்பட்டு வந்தது. கூழுப்பிள்ளை வம்சத்திற்கும் ஊருக்குள் இதனால் ஒரு மரியாதை இருந்து வந்தது.
ஆனால் கொஞ்ச காலமாகவே நிலைமைகள் ஒழுங்காயில்லை. ஊருக்குள் பஸ் வந்துவிட்டது. பிள்ளைகள் டவுனுக்குப் போய் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். படித்த வெடலைகள் முன்பெல்லாம் மதுரை மெட்ராஸ் என்று வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். இப்போது படிக்கிறவர்களுக்கு எந்த ஊர்ப்பக்கமும் வேலை கிடைக்கவில்லையாம். வேலை கிடைக்கவில்லையென்றால் என்ன? பேசாமல் அவன் அப்பன் பாட்டன் இருந்தது போல இருந்து பேசினது போல் பேசி அனுபவித்ததுபோல் அனுபவித்துச் சாகவேண்டியதுதானே. இப்போது திரிகிற பயல்களுக்கு உடம்பெல்லாம் கிருத்துவம். எல்லாச் சாதிக்காரப்பயல்களும் சேர்ந்து சங்கம் வைக்கிறான்களாம்.
தொலையட்டும். இந்தப் பயல்கள் சிகரெட் குடிக்கவும் பீடி குடிக்கவும் இந்த ஊரில் ஒதுக்கமாய் ஒரு இடம் கூடவா இல்லாமல் போய்விட்டது? முனியப்பா கோயில் முன்னால் அரசமரத்தடிக் காத்தில் பீடி குடித்தால்தான் பய புள்ளைகளுக்கு சொர்க்கம் தெரியிறதாம்.
கோயில் அரசமரத்தின் அடிமண், மழை அரிப்பில் பெயர்ந்து கிடந்ததைப் பார்க்க கூழுப்பிள்ளை ஒரு நாள் மத்தியானம் கோயில் பக்கம் போனார். இந்த வெட்டிச் சோற்றுக் கூட்டம் மர நிழலில் ராஜாக்கள் மாதிரி உட்கார்ந்திருந்தது. ஒரு கையில் பீடி என்ன மறுகையில் புஸ்தகமென்ன. உலகத்தையே பிடிக்கப் போவதுபோல் சவடால் பேச்சுகளென்ன. பக்கத்தில் தட்டை மட்டுந்தான் நீட்டுவேங்கிற கிறுக்கன் வேறு சீலைப்பேன் பத்தி பேய்க் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறான். கூழுப்பிள்ளைக்குக் கோபம் வந்தால் சாமி வந்துவிடும். "நாத்தப்பயல்களா. இதை என்ன சாமின்னு நெனச்சு இங்கெ ஒக்காந்து காலித்தனம் பண்றீங்க? அடேய்…. அடேய் இது துடியான தெய்வம்டா, கண் அவிஞ்சு போகும்டா… ஓடுங்கடா…" என்றார். பட்டாளம் நகரவில்லை. பீடிகளை மறைத்துக் கொண்டு மரியாதையாய் உட்கார்ந்து அவரைப் பார்த்துச் சிரித்தது.
சிரிக்கச் சிரிக்க கூழுப்பிள்ளை கொப்பளித்துப் போனார். "முனியய்யாவையாடா எளப்பமா நெனைக்கிறீய. மரியாதையாச் சொல்றேன். ஓடிப்போயிருங்க. திங்கற வாய்க்கு இனிமே சோறு கெடைக்காது."
பாண்டியாப்பிள்ளை மகன் பதில் சொல்றான். "எங்களுக்குச் சோறு கெடைக்காமப் போறதிருக்கட்டும். ஒங்களுக்கு ரொம்ப வேண்டியவர்தானே முனியய்யா. ஏன் இன்னும் கூழாக் குடிக்கிறீய? ஒங்களுக்குச் சோறு தரவே ஏழு தலைமொறைக்கும் இதாலெ முடியலெ, எங்க சோத்தைத்தானா பறிச்சிரும். ஆய்க்குடியிலெ, மழை பெய்ஞ்சிருக்கு. ஏரைக் கட்டிக்கிட்டு உழுகப் போங்க மாமா. அப்பத்தான் கூழாவது ஒழுங்காகக் கெடைக்கும்."
கூழுப்பிள்ளைக்கு உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்தது. பயல்களை விட்டு விட்டுப் பக்கத்தில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கிறுக்கனைப் பார்த்தார். பல்லை நற நறவெனக் கடித்துக் கொண்டே ஒரு சுள்ளியை எடுத்து அவனை இன்ன இடமென்று பாராமல் விளாச ஆரம்பித்தார்.
இப்போதும் அந்த பாண்டியாப்பிள்ளை மகன்தான் வந்து கையைப் பிடித்துக் கொள்கிறான். பெரிய மனுஷன் மாதிரி அழுத்தமாய்ச் சொன்னான். "அனாவசியமா அசலூர்க்காரனை அடிக்காதீய." பிடித்த கையை உதறிவிட்டுக் கிறுக்கனின் அழுக்கு மூட்டை தகர டப்பா எல்லாவற்றையும் எடுத்துக் கூழுப்பிள்ளை மூலைக்கு ஒன்றாயெறிந்தார். "இந்த கிறுக்கன் இனிமேல இங்கே" வந்து படுத்தால் ஒண்ணு முனியய்யா அடிக்கோணும், இல்லெ நான் இவனைக் கொலை பண்ணணும்" என்று சொல்லிக் கொண்டே கை காலை வேகம் வேகமாய் உதறிக் கொண்டு நடந்தார். பயல்களோடு நேரடியாக இதற்குமேல் மோதினால் ஊருக்குள் பிரச்சனைகள் வந்துவிடும் என்று கிறுக்கன் மேல் எல்லாவற்றையும் காட்டி விட்டுப்போனார்.
தூக்கம் கலைந்துபோய், கிறுக்கன் அழுக்கு மூட்டையையும் தகரடப்பாவையும் அலுமினியத் தட்டையும் எடுத்து வந்து தலைமாட்டில் வைத்துக்கொண்டு மறுபடி தூங்க ஆரம்பித்தான். அதுவரை நடந்ததை அப்போதே ஒரு கொட்டாவி விட்டு முடித்துக் குறட்டையும் விட்டபோது ‘வெட்டிச் சோறுகள்’ ரஸித்து சிரித்து விட்டுக் கிளம்பின.
மறு மறு நாட்களில் வழக்கம்போல் கிறுக்கன் ‘கஞ்சீ’ என்று வீட்டுவாசல்களுக்கு வருவதும், மற்ற நேரமெல்லாம் முனியப்பா கோயில் அரசமரத்தடியில் தூங்குவதும் நிற்கவில்லை. இளவட்டங்கள் அவனிடம் கூழுப்பிள்ளை பற்றி வேடிக்கையாய் எதாவது கேட்டால் சம்மந்தமில்லாமல் பேசிவிட்டு ஓடிவிடுகிறான். கூழுப்பிள்ளை மட்டும் கையில் கம்போடு அவனை விரட்டி விரட்டிப் பார்த்தார். ஆனால் அவன் வேறு இடத்தில் படுப்பதாக இல்லை; வேறு ஊருக்கும் போவதாக இல்லை.
ஒரு நாள் சாயங்காலம் வடக்குப் பக்கமாயிருந்து காற்று பலமாய் ஊருக்குள் வீச ஆரம்பித்தது. முதலில் யாருக்கும் அது பெரியதாய்த் தோன்றவில்லை. நேரம் ஆக ஆகக் காற்று உக்கிரம் அடைந்தது. பிரி போட்டுக் கட்டிய வைக்கோல் படப்புகளும் கூரைகளிலிருந்து ஓலைகளும் லேசாய்ப் பறக்கப்பார்த்தன. வைக்கோல் படப்புக்கு மேல் காற்றுக்கு அணைவாய் வாசல்கல்லைத் தூக்கி ஏற்றிக் கொண்டிருந்தார் கூழுப்பிள்ளை.
கீரந்தையிலிருந்து கோயில் பாதை வழியாய்க் காற்றில் அல்லாடி வந்த ஒரு ஆள் தலைவிரி கோலமாய் அந்நேரம் கத்திக் கொண்டு தெருவில் போனார். "காத்துக்குக் கோயில் அரசமரம் வேரோடு ஆடுது. கீழே அந்தக் கிறுக்கன் படுத்திருக்கான். காத்திலே மரம் விழுந்தால் சாமி என்ன ஆகுமோ. ஆள் என்ன ஆவானோ? என்னக் கிட்டப் போகப் பயமாயிருந்திச்சு. ரோட்டிலே பாத்துட்டு ஓடியாறேன்."
ஏத்திக்கொண்டிருந்த வாசல்கல்லைக் கீழே போட்டு விட்டுக் கூழுப்பிள்ளை தார்ப் பாச்சாகக் கட்டிக்கொண்டு கோயிலைப் பார்த்து ஓடினார். அவர் ஓடுவதைப் பார்த்துப் பின்னால் ஆட்கள் திரண்டு காற்றுக்கு மீறி ஓடி வந்தார்கள்.
கோயிலுக்கு சமீபத்தில் முதலில் கூழுப்பிள்ளைதான் வந்து கொண்டிருந்தார். அத்துவானப் பொட்டலில் காற்றை மறிக்க ஒரு சுவரில்லை. கோயிலடி அரசமரத்தைத் தவிர ஒருசெடி கொடியுமில்லை. அரச மரம் வில்லாய் வளைந்து ஆடியது. வேர்ப் பக்கங்கள் விரிந்து வெளியே வந்து கொண்டிருந்தன.
கூழுப்பிள்ளை கண்ணாலேயே பார்த்தார். அந்தக் கிறுக்கன் அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து அழுக்கு மூட்டையையும் தகர டப்பாவையும் அலுமினியத் தட்டையும் தூக்கிக் கொண்டு மரத்தடியை விட்டு இருபது அடி நடந்திருப்பான். சட சடவென்று அரசமரம் வேரோடு தூரோடு முனியசாமி சிலை மேல் விழுந்தது. கூழுப்பிள்ளை கிட்டவந்து பதறப் பதறப் பார்க்கிறார். சின்னச் சின்னக் கற்களாய்ச் சிலை பரவிக்கிடந்தது. ஊர் ஜனம் கூடி விட்டது. கூழுப்பிள்ளைக்குக் கண்கள் பொங்கி வந்தன. "கிறுக்கன் தப்பிச்சுட்டான், சாமி போயிருச்சே."
இப்போதும் பாண்டியாப்பிள்ளை மகன்தான் பதில் சொன்னான். "அவன்கிட்ட சீவன் இருந்துச்சு. காத்து ஒறைக்கவும் எந்திரிச்சு நடந்திட்டான்."
(அடுத்த இதழில் தருணம் 3 – மீரான் மைதீன்)
“