வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.
சரபோஜிபுரம்
–சா. கந்தசாமி
தேவபட்டணம் கடல் அலைகளும் தாழம்புதர்களும் கொண்டது. அங்கு படகுகளோ கட்டுமரமோ கூடக் கிடையாது. எப்பொழுதாவது நேரங்கெட்ட நேரத்தில் ஒரு கட்டுமரம் வரும். அவசர அவசரமாக இரண்டொரு ஆட்கள் கீழே இறங்கி ஓடித் தாழம்புதரில் மறைந்து போய் விடுவார்கள். அப்புறம் கட்டுமரமும் கடல் அலைகளுக்குள் மறைந்து போய்விடும். பிறகு சின்னச் சின்ன நண்டுகள் ஈரமணலில் குழிபறித்துக் கொண்டிருக்கும். ஆனால் அமைதியான தேவபட்டணம் திடீரென்று மாறிவிட்டது. பெரிய பெரிய லாரிகள் மணலில் ‘விர் விர்’ என்று சென்றன. லாரி நிறைய ஆட்கள். அதோடு அந்த ஆட்கள் எல்லாம் இந்தப் பக்கத்து ஆட்கள் மாதிரியும் இல்லை. அவர்கள் வேறு ஆட்கள். முகத்திலிருந்தும் பேச்சில் இருந்தும் தெரிந்தது.
லாரியில் இருந்து இறங்கிய மிலிட்டரி ஆட்கள் தாழம்புதரை ஒட்டிக் கூடாரம் அடித்தார்கள். கொம்பு நட்டு, கயிறு கட்டி வேலி கட்டினார்கள். வாசலில் ஒரு ஆள் துப்பாக்கியும் கையுமாக. மீதி ஆட்கள் எல்லாம் என்ன ஆனார்கள், எங்கே போய் மறைந்து போனார்கள்?
பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து நான்கைந்து பேர்களாக லாரியிலோ, ஜீப்பிலோ ஏறிக்கொண்டு சென்றார்கள். மிலிட்டரி லாரிகளையும், ஆட்களையும் பார்த்து ஜனங்கள் பயந்துதான் போய் விட்டார்கள் என்பது அந்தப் பக்கம் யாரும் தலைகாட்டாததில் இருந்து தெரிந்தது.
ஆனால் மிலிட்டரி ஆட்களும் வெளியில் வரவில்லை. உள்ளுக்குள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஊர் கேட்டுக் கொண்டிருந்தபோது கலியபெருமாள் இரைக்க இரைக்க ஓடிவந்தான். கேம்பு வேலி பக்கம் போன தன்னைத் துப்பாக்கியினால் மிலிட்டரிக்காரன் சுட வந்ததாகச் சொன்னான். "நீ ஏன்டை அங்க போன?" என்று அவன் தலையில் ஒரு தட்டுத் தட்டினான் டீக்கடை பக்கிரி.
"சும்மா அண்ணே" என்றான் கலியபெருமாள்.
"சும்மா கிம்மா போனா, சுட்டுத்தான் போட்டுடுவாங்க" என்றான்.
இது நடந்து ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு இரண்டு லாரியில் ஆட்கள் வந்து இறங்கினார்கள். ஒரு லாரி உள்ளே இருந்து வெளியில் சென்றது. மாலை நேரத்தில் கேம்பில் இருந்து மிலிட்டரி ஆட்கள் கைலி கட்டிக் கொண்டு, பைஜாமா போட்டுக் கொண்டு வெளியில் சென்றார்கள். வெளியில் என்றால் தேவபட்டணத்தில் இருந்து நாலாவது கிலோ மீட்டரில் இருக்கும் சரபோஜிபுரத்திற்குத்தான்.
சரபோஜிபுரம் ஏற்பட்டது பற்றிக் கூட ஒரு வரலாறு உண்டு. தஞ்சாவூர் அரண்மனையில் இருந்து வைதீஸ்வரன் கோயிலுக்குப் புறப்பட்ட தஞ்சாவூர் ராஜா சரபோஜி ஓர் இரவுப் பொழுதைக் கழித்ததால் அது சரபோஜிபுரமாகி விட்டது. ராஜா இரவைக் கழித்த பெரிய வீடு பாழடைந்து கிடக்கிறது. அதில்தான் சரபோஜிராஜா, தன் ஆறு காதலிகளோடு இரவு முழுவதும் இருந்தார் என்பார்கள். அந்த வீட்டைப் பார்த்தால் அதை நம்பலாம் என்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் ராஜா ஆனந்தமாக இரவைப் போக்கிய வீட்டில் இருந்து கதவு, ஜன்னல் எல்லாம் போய்விட்டன. பின்பக்கத்தை அண்ணாமலை உடையார் இடித்து, செங்கல்லை எடுத்துக்கொண்டு போய் வீடு கட்டிக் கொண்டு விட்டார். எஞ்சி இருக்கும் வாசல் பக்கத்தில் பக்கிரிசாமி ‘அன்னை தேநீர் விடுதி’ வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். தலைக்கு மேலே மகாத்மா காந்தி, ராஜாஜி, நேரு படம். அப்புறம் கடையில் வெற்றிலைப் பாக்கு, பீடி, சிகரெட், நிரோத் எல்லாம் உண்டு.
மிலிட்டரி நடமாட்டம் கூடக் கூட இரண்டு வாழைத்தார் வாங்கி வந்து கட்டினார். இரண்டு பெரிய பாக்கெட் சிகரெட்டுக்கு ஆர்டர் கொடுத்தார். பக்கிரிசாமி நான்கு வருஷம் போல மிலிட்டரியில் இருந்தவர். அம்பாலா, லாடக், கௌஹாத்தி, பதான்கோட் எல்லாம் பார்த்தவர். இந்தி தெரியும். எனவே சீக்கிரத்தில் மிலிட்டரி ஆட்களோடு பழக்கமாகி விட்டார். மிலிட்டரிக்காரர்கள் உட்கார ஒரு பெஞ்சு வாங்கிப் போட்டார்.
ஒரு நாள் மாலைப் பொழுது, பக்கிரிசாமி அன்னை தேநீர் விடுதி பெஞ்சியில் உட்கார்ந்து காலாட்டியபடி மூன்று மிலிட்டரி ஆட்கள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் டீ கிளாசைக் கீழே வைத்து விட்டு சிகரெட்டை கொளுத்திக்கொண்டு சாலைப்பக்கம் வந்தான். புளிய மரத்தின் பின்னால் இருந்து சுந்தரி வெளிப்பட்டாள். பதினேழு பதினெட்டு வயது. நல்ல கறுப்பு. ஆனால் கொழு கொழு என்று இருந்தாள். இடுப்பில் தண்ணீர்க் குடம். தண்ணீர் தளும்பித் தளும்பி அவள் உடம்பை நனைத்திருந்தது. மிலிட்டரிக்காரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றாள். அவன் முன்னே ஓரடி எடுத்து வைத்தான். பெஞ்சில் உட்கார்ந்திருந்த மற்றவர்களும் எழுந்து நடந்தார்கள்.
துரைக்கண்ணு தலையில் முண்டாசாகக் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உதறித் தோளில் போட்டுக் கொண்டு திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு படியேறிப் பக்கிரிசாமி பக்கம் வந்தார்.
"அண்ணே, டீயா?"
துரைக்கண்ணு தலையசைத்தார். அவருக்குக் காது கொஞ்சம் மந்தம். அது இடையில் ஏற்பட்டதுதான். எமர்ஜென்சி சமயத்தில் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் ராத்திரியில் அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி ஜீப்பில் தூக்கிப் போட்டுக் கொண்டு போனார்கள். ராகவன், குமரன் நாயர் எங்கே சொல், என்று அடித்தார்கள். ஓர் உதை காது பக்கத்தில் விழுந்தது. காதில் இருந்து ரத்தம் வந்தது. நான்கு ஐந்து நாட்களுக்கு உயிர் போவது மாதிரி வலித்தது. அவர் சுருண்டு படுத்துக் கிடந்தார். அப்புறம் வலி குறைந்து எழுந்து உட்கார்ந்தார்.
‘வாசுதேவனைத் தெரியுமாடா? வரதராஜன் உன் சிநேகிதன்தானே’ என்றெல்லாம் கேட்டார்கள். அவருக்கு ஒன்றுமே காதில் சரியாகக் கேட்கவில்லை. அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை. சிறையில் போட்டுப் பூட்டி விட்டார்கள். எதற்காகப் பிடித்துக் கொண்டு போனார்கள்? எதற்காக அடித்தார்கள்? வாசுதேவன் யார்? அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. வெளியே வந்ததும், அவர் மறுபடியும் வேலைக்குப் போகவில்லை. சரபோஜிபுரத்திற்கு வந்துவிட்டார். அப்பா சம்பாதித்து வாங்கிய தென்னந்தோப்பு, தேவபட்டணத்திற்கு மேற்கில். அதில் இருந்து ஏதோ சாப்பாட்டிற்குப் பணம் கிடைக்கிறது. குழந்தை இல்லை. அவரும் மனைவியும்தான். ஆனால் பொதுக் காரியம் என்றால் எல்லாரும் துரைக்கண்ணு என்று வந்துவிடுவார்கள். யாருமே தேடிக் கொண்டு வராவிட்டால், அவரே முன்னே போய்விடுவார்.
பக்கிரி டீயை ஆற்றி "இந்தாங்க அண்ணே" என்று முன்னே நீட்டினான். அதை வாங்கி ஒரு மிடறு குடித்து விட்டு, "மிலிட்டரி ஆளுங்க இங்க எதுக்கு வந்து இருக்காங்க?" என்று கேட்டார்.
"தீவிரவாதிங்க நடமாட்டம் அதிகமா இருக்காம். அதற்குத்தான்."
"அப்படியா?" அவர் பெஞ்சில் உட்கார்ந்தார்.
"என்ன அண்ணே ஒரு மாதிரியா இழுக்கிறீங்க?"
"இல்லப்பா. மிலிட்டரி வந்தா பின்னால ஒரு தகராறு வந்துடும்."
"நீங்க வில்லங்கம் பிடிச்ச ஆளு, அண்ணே."
துரைக்கண்ணு டீயைக் குடித்துவிட்டு கிளாசை பெஞ்சில் வைத்தார். சாலையில் ஒரு பெரிய லாரி தடதடவென்று சென்றது. அவர் எழுந்து ஓடி முன்னே வந்து நின்றார். லாரியில் அறுபது எழுபது ஆட்கள் கூட்டமாக இருந்தார்கள்.
"ஆடு மாடுங்க மாதிரி எதுக்கு இப்படி ஆளுங்களை அடச்சிக்கிட்டுப் போறாங்க."
"அண்ணே, உங்களுக்கு ரொம்பக் கொளுப்பு. மிலிட்டரிக்காரன் காதுல விழுந்தா சுட்டுப் போட்டுடுவான்."
"உசுரு போனா மசுரு போய்ச்சி போ."
"உங்கள எமர்ஜென்ஸியில உள்ள போட்டது சரிண்ணே."
பக்கிரி சொன்னது அவர் காதில் சரியாக விழவில்லை போலும். அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் பையில் இருந்து இரண்டு ரூபாயை எடுத்துக் கொடுத்து, "பழைய பாக்கியும் எடுத்துக்குங்க" என்றார்.
"சரி அண்ணே."
துரைக்கண்ணு பெஞ்சில் உட்கார்ந்து வெற்றிலை பாக்குப் போட ஆரம்பித்தார்.
"எங்க அண்ணே, ரொம்ப தூரமா பயணம்?"
"திருச்சியில் கன்ஸ்யூமர் ஆக்ஷன் குரூப் ஆரம்பிச்சி இருக்காங்க. மூணு நாளு கூட்டம். அதுக்குத்தான் போய்க்கிட்டு இருக்கேன்."
“எமர்ஜென்சி உங்கள ரொம்பத்தாண்ணே மாத்தி இருக்கு."
அவர் புகையிலையை அள்ளி வாய் நிறையப் போட்டுக் கொண்டு, "பஸ் எப்ப வரும் பக்கிரி" என்றார்.
"இப்ப வர நேரந்தான் அண்ணே. வீரப்பன்தான் வரணும்."
"ரோட்டுல நிக்காட்டா, அவன் அடிச்சிக்கிட்டு போயிடுவான்." துரைக்கண்ணு அவசர அவசரமாக எழுந்து துண்டை எடுத்துத் தோள் மீது போட்டுக்கொண்டு சாலைக்கு வந்தார். ஒரு மிலிட்டரி ஜீப் வேகமாகச் சென்றது. அவர் புளிய மரத்தின் பக்கம் ஒதுங்கி நின்று கொண்டார். புளிய மரத்தில் மைனாக்கள் கத்திக் கொண்டு இருந்தன. அவரால் நிற்க முடியவில்லை. முன்னே வந்தார். ஆரன் சப்தம் விட்டு விட்டுக் கேட்டது. அது வீரப்பன் சைகை. அவர் சாலையின் குறுக்கே நின்று துண்டை ஆட்டினார். பஸ் வேகம் குறைந்து நின்றது. அவர் உள்ளே ஏறிக்கொண்டார்.
டிரைவர் வீரப்பன் ஒருமுறை லேசாக ஆரன் அடித்து "வணக்கம் சார்" என்றான். அவனுக்கு ஆபிசில், கிளியூரில் பஸ்ஸை நிறுத்தாமல் போனதற்கு மெமோ கொடுத்தார்கள். அதற்கு துரைக்கண்ணுதான் பதில் எழுதிக் கொடுத்தார். அதில் மெமோ செத்துப் போய் விட்டது.
"உட்காருங்க சார்" என்றான் வீரப்பன்.
"இருக்கட்டும், இருக்கட்டும்" என்றபடி அவர் அடக்கமாக உட்கார்ந்து கொண்டார். பஸ் வளைந்து திரும்பி வேகமாக ஓட ஆரம்பித்தது. கன்ஸ்யூமர் கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்று யோசித்தபடியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.
நான்கு நாட்கள் கழித்து துரைக்கண்ணு உதய காலத்தில் சரபோஜிபுரத்திற்குத் திரும்பி வந்தபோது மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டிப் பக்கத்தில் கூட்டமும் கூச்சலுமாக இருந்தது. பெண்கள் கைகளிலும் சின்ன பிள்ளைகள் தலையிலும் ஏதேதோ பானை, குடம், தவலை என்று பாத்திரங்கள், பெரிசும் சின்னதுமாக. அதோடு காச்மூச்சென்று சப்தம். அவர் கூட்டத்தில் புகுந்து மெதுமெதுவாக உள்ளே சென்றார்.
மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடும் பெரியகருப்பன் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொன்னது யார் காதிலும் விழவில்லை. கூட்டம் பின்னால் இருந்து முன்னே தள்ளியது. ராஜேஸ்வரி கையில் இருந்த மண் பானை கீழே விழுந்து உடைந்தது. அவள் அழுது கொண்டு ஓடினாள். அவளைப் பிடித்து சமாதானம் சொல்ல வந்த மாலதி டீச்சர் துரைக்கண்ணுவைப் பார்த்து விட்டு நின்றாள்.
"என்னம்மா கூட்டம்?"
"பாருங்க மாமா, நாலு நாளா குழாயில தண்ணியே வர்ல."
"மோட்டார் ரிப்பேரா?"
"இல்ல மாமா. நம்ம தண்ணி எல்லாம் மிலிட்டரி கேம்புக்குப் போகுதாம்."
"அப்படின்னா, நம்ம என்னத்தைக் குடிக்கறது?"
"அதைத்தான் மாமா கேட்டா, பெரிய கருப்பண்ணன், நான் என்னம்மா பண்ணுறது. உத்தரவுப்படிதானே நடக்கணுமுன்னு சொல்லுது."
"தண்ணீர் விடு, பெரியகருப்பு, தண்ணீர் விடு" என்று கூட்டம் பெரிதாகக் கத்தியது. ஒரு பையன் கையில் இருந்த பானையைத் தூக்கித் தண்ணீர்த் தொட்டியில் அடித்தான்.
"அவனப் பிடி." துரைக்கண்ணு முன்னே ஓரடி எடுத்து வைத்தார். மாலதி டீச்சர் கையை அசைத்துக் கூட்டத்தை சமாதானப்படுத்தினாள். கூட்டத்தில் இருந்து கூச்சல் கொஞ்சம் குறைந்தது. அவர் ஒரு செங்கல் மீது ஏறி நின்று, "பெரியகருப்பு என்ன பண்ணுவான்? தண்ணீர் விடுறது எல்லாம் கமிஷ்னர்கிட்டத்தான் இருக்கு. நானும் நம்ப ஜீவா நினைவு மன்ற கிருஷ்ணமூர்த்தியும் கமிஷ்னரைப் பார்த்து சாயந்தரத்துக்குள்ள தண்ணி வர ஏற்பாடு செய்றோம்” என்றார்.
“மாமா, அதெல்லாம் நடக்காது."
"டீச்சர் அம்மா, அப்படியல்லாம் பேசக்கூடாது."
"நாலு நாளா குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் இல்ல மாமா."
"சாயந்தரம் தண்ணி வந்துடும்மா."
ஜீவா நினைவு மன்றக் கிருஷ்ணமூர்த்தி கட்டைத் தொண்டையில் கொஞ்ச நேரம் பேசினான். கூட்டம் மெதுமெதுவாகக் கலைய ஆரம்பித்தது.
சரபோஜிபுரம் சுற்று வட்டாரத்தில் குடிதண்ணீர் கிடையாது. அதற்கு ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிங்கபுரம் குளத்தில் இரண்டு பெரிய பெரிய கிணறு வெட்டி சரபோஜிபுரம், அல்லியூர், மாங்கூர், கோவூர் எல்லாம் தண்ணீர் கொடுக்கிறார்கள். காமராஜ் திறந்து வைத்த மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி. ஒன்று விட்டு ஒரு நாள் அரைமணி நேரம் தண்ணீர் வரும். அதைப் பிடித்துக் கொண்டால்தான் உண்டு.
*********
துரைக்கண்ணு கிருஷ்ணமூர்த்தியோடு கமிஷ்னர் அலுவலகம் சென்றார். அது வெறிச்சோடிக் கிடந்தது. கமிஷ்னர் கலெக்டரைப் பார்க்கப் போய் இருக்கிறார், என்றார்கள். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் இருப்பதாகச் சொன்னார்கள்.
"அவரைப் பார்த்தால் என்ன?" என்று கேட்டான் கிருஷ்ணமூர்த்தி.
"அதுக்கென்ன, பார்க்கலாம்" என்று துரைக்கண்ணு ஒரு சீட்டு எழுதிக் கொடுத்தார். அரை மணி நேரம் கழித்து உள்ளே கூப்பிட்டார். அப்புறம் என்னவோ பேப்பரில் அவசரம் அவசரமாக எழுதிக் கொண்டு இருந்தார். இரண்டு பேரும் மௌனமாக உட்கார்ந்தபடி இருந்தார்கள். ஒரு ஐந்து நிமிஷம் கழித்துப் பேனாவை மூடி வைத்து விட்டு, இவர்களைப் பார்த்து "சொல்லுங்க" என்றார்.
–இந்தத் தருணத்தின் தொடர்ச்சி அடுத்த இதழில்…