வாரிக்குழி
–ஜெயமோகன்
கதையின் முன்பாதி: தருணம் (14)
மிக அருகே ஒரு சீறல் ஒலித்தது. சையது அப்படியே குளிர்ந்து விட்டான். பிரக்ஞை மீண்டபோது தன் கால்கள் நடுநடுங்குவது தெரிந்தது. கண்கள் பதறியதில் எங்கும் எதுவும் தெரியவில்லை. மீண்டும் அந்தச் சீறல் கேட்டது. உடனே சையது அந்தக் காட்டு யானையின் துதிக்கையைக் கண்டான். உடலெல்லாம் சேறு அப்பியிருக்க, அது மண்ணாலான மிகப்பெரிய பொம்மை போலிருந்தது. மறுகணம் சையது தன் அனைத்துப் புலன்களும் விழிப்பதை உணர்ந்தான். ஒற்றைக் காட்டானை. அவன் பாய்ந்து பின்னால் திரும்பி ஓடவும், யானை காடதிரப் பிளிறியபடி அவனைத் தாக்க வரவும் சரியாக இருந்தது. உயிரின் சக்தி சையதைப் புள்வேகம் கொள்ள வைத்தது. வழுக்கும் பாறையில் வேகமாக ஏறி உச்சிக்குப் போனபிறகு, உடல் உராய்ந்து எரிய, காதுமடல்களில் வியர்வை தகிக்க, கீழே கிடுகிடு பாதாளத்தைப் பார்த்ததும் முதுகு சிலிர்த்தது. யானை வெறியுடன் பாறை மீது திரும்பியது. திரும்பி அருகே நின்ற அயினி மரத்தின் பெரிய தடி மீது முட்டியது. மரம் குலுங்கி அயினிப் பழங்கள் பிய்ந்து விழுந்தன. வெறியடங்காமல் அது மரத்தின் பட்டையை மோதிச் சிதைத்தது. உரக்கச் சின்னம் விளித்தது.
சையது அது உண்ணிலட்சுமி என்று அறிந்தான். அயர்ந்து விட்டான். உண்ணிலட்சுமி அவனை அடையாளம் காணவில்லையா? யானைகளுக்கு அடையாளம் தவறாது என்பார்களே? யானை மறந்துவிட்டது. ஒரு மாதக் காலக் காட்டுவாசம் அதைக் காட்டுயானையாக மாற்றிவிட்டது போலும். ஓயாத ஞாபகமாகக் கூடவேயிருக்கும் மணியோசை இல்லாமலாகிவிட்டதுதான் காரணம். சையது "உண்ணி லெச்மீ" என்று கூப்பிட்டான். யானை அவனை நோக்கித் துதிக்கையை நீட்டியது. அவன் குப்புறப் படுத்து உரத்த குரலில், "இதர் டாவ், யானெ இதர் டாவ்" என்று கூவினான். அந்தக் குரல் யானையை அடையவில்லை போலிருந்தது. கரும்பாறையை நோக்கிக் கூவும் உணர்வை அவன் அடைந்தான். யானை அவனைப் பிடிக்க முயன்றது. முடியாமல் கோபத்துடன் உறுமியது.
சையது ஓய்ந்த மனத்துடன் திரும்பிப் பாறை மீது மல்லாந்து படுத்தான். உடம்பெங்கும் சூடான ரத்தம் ஓடுவது தெரிந்தது. உடம்பு சற்று ஆறியதும் மனமும் சமாதானம் அடைந்தது. கீழே யானை இல்லை. அது விலகிச் சென்ற தடம் தெரிந்தது. அவன் மெதுவாக இறங்கினான். ஓடியபோது கையிலிருந்து விழுந்த மணியை எடுத்துக்கொண்டான். என்ன செய்வது என்று புரியாமல் சற்றுநேரம் நின்றான். யானையை அப்படியே விட்டுவிட்டால் ஒருவேளை திரும்ப அதைப் பிடிக்க முடியாமலேயே போய்விடக் கூடும். அதன் பிறகு அவனுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? அதைவிட, அந்த யானை தன்னைத் தோற்கடித்து விட்டதுதான் சையதுக்குத் தாங்க முடியாததாக இருந்தது. அலறியபடி அது தன்னைக் கொல்ல வந்த காட்சி மனக்கண்ணில் தெரிந்தபோது அவன் ரத்தம் சூடேறியது. அவன் துரட்டியை எடுத்தால் மிரண்ட பார்வையுடன், மன்றாடும் உறுமலுடன், பின்னால் காலெடுத்து வைக்கும் உண்ணிலட்சுமி. பதினாறு வருடம் அவன் ஏறியமர்ந்த மத்தகம்… சையது துரட்டியைத் தன் பாதத்தில் ஓங்கி அடித்தான். கையில் மணியுடன் யானையின் பாதத் தடத்தைப் பின்தொடர்ந்தான்.
காட்டின் இருட்டுக்குக் கண் பழகியதும் கால்களுக்கு வழி தெரிந்தது. தலைக்கு மேல் கருங்குரங்குகள் அவனைக் கண்டு பயந்தவை போல ஒலியெழுப்பின. பிறகு அந்த ஒலி மாறுபட்டது. சையது நிதானித்தான். அந்த ஒலி எதையோ கூற முனைவது போலிருந்தது. அவன் அருகே நின்ற பெரிய ஆலமரத்தின் அடி மரத்தில், பின்னிக் கிடந்த தடித்த கொடியில் பற்றி ஏறி அதன் பருத்த கிளைகளை அடைந்து, அமர்ந்துகொண்டான். அது பலாமரம் என்று தெரிந்தது. அத்தனை பெரிய பலாமரம் இருக்கக்கூடும் என்பதே அவன் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. கீழே உற்றுப் பார்த்தான். சற்றுத் தள்ளி உண்ணிலட்சுமி தழைகளைப் பிய்த்துத் தின்றபடி நின்றிருந்தது. பலாக்கிளைகளில் கருங்குரங்குகள் மூன்று அமர்ந்திருந்தன. அவற்றின் கண்கள் கருமையாகப் பளிச்சிட்டன. அவை அவனை விசித்திரமாகப் பார்த்தன. ஒரு குரங்கு தொண்டையின் பையில் எதையோ கனமாக அடக்கியிருந்தது.
சையது மணியை எடுத்தான். முண்டாசை மணியில் கட்டி, மெதுவாக மணியைத் தொங்கவிட்டான். மெல்லக் குலுக்கினான். யானையின் செவிகள் நிலைத்தன. அவன் மனம் படபடத்தது. பிறகு அது மீண்டும் தழைகளை இழுத்துப் பறிக்க ஆரம்பித்தது. சையது மணியைக் குலுக்கியபடியே இருந்தான். ஒலி யானையை எட்டவில்லை என்று தெரிந்தது. சலிப்புடன் அதை எடுத்து முண்டாசை அவிழ்த்தான்.
யானை மீண்டும் முன்னகர்ந்து சென்றது. சையது மரத்திலிருந்து இறங்கினான். உடனே குரங்குகள் ஏக காலத்தில் குரலெழுப்பிப் பேச ஆரம்பித்தன. உடம்பிலிருந்த சிறு எறும்புகளை அரக்கித் தேய்த்துவிட்டு அவன் யானை போன வழியைப் பார்த்து நின்றான். திரும்புவது தவிர வேறு வழியில்லை. ஆனால் திரும்ப அவனால் ஒருவேளை… உடல் வழியாக நடுக்கம் சென்றது. பின்னால் திரும்பவிட எண்ணினான். ஆனால் உடலைத் திருப்ப முடியவில்லை. திடீரென்று உள்ளூர எழுந்த உத்வேகத்துடன் "ரசூலே4 எக்கு நீ தொண" என்றபடி யானையைப் பின்தொடர்ந்தான்.
குரங்குகளின் மொழியைக் கவனித்தபடி சையது சென்றான். யானை நின்றும், மரங்களிலிருந்து தழைகளைப் பறித்துத் தின்றும் முன்னேறியது. அதன் நடையும், அசைவுகளும் முற்றிலும் மாறி விட்டிருப்பதைக் கண்டான். அது மிகக் கவனமாக அஞ்சியஞ்சிக் காலெடுத்து வைக்கக் கூடியது. இப்போது சகஜமாகச் சதுப்புச் சேற்றில் நடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அதை உண்ணிலட்சுமி என்று எண்ணுவது சையதுக்குக் கஷ்டமாக இருந்தது. அது வேறு ஏதாவது காட்டு யானையா, தவறாகப் பின்தொடர்கிறோமோ என்று ஐயம் ஏற்பட்டது. உடனே அது அபத்தமான சிந்தனை, அது உண்ணி லட்சுமியேதான், உறுதியாகப் பட்டது. இருட்டின் ஊடே அப்படிப் போகும்போது ஏதோ கனவு ஒன்றில் இருப்பது போலவும் தோன்றியது.
உண்ணிலட்சுமி மரக் கூட்டங்களைத் தாண்டி, சிறிய புல்வெளியொன்றை அடைந்தது. இருட்டுக்குப் பழகிய கண்களில் ஒளிபரவிக் கூசவே சையது தலைகுனிந்து நின்றான். புல்வெளியில் இஞ்சிப்புல் பரவியிருந்தது. சிறு பூச்சிகள் ஒளிரும் சிறகுகளுடன் எழுந்து சுழன்று பறப்பது புகைபோலத் தெரிந்தது. யானை வால்சுழல், சகஜமாக நடந்து சென்று, மெல்லத் தயங்குவதை சையது கவனித்தான். உடனே அவன் பார்வை புல்வெளியை ஆராய்ந்தது. அவனுக்குப் புரிந்துவிட்டது. வாரிக்குழி தோண்டியிருக்கிறார்கள் யாரோ. வாரிக்குழியின் மீது பரப்பப்பட்ட புல்பத்தைகள் சற்று நிறம் மாறியிருந்தன. அதை உண்ணிலட்சுமி எத்தனை சரியாக அடையாளம் கண்டு கொண்டது என்று வியப்பு அவனுக்கு ஏற்பட்டது. அது வாரிக்குழியில் விழுந்தது முப்பத்தாறு வருடம் முன்பு; அதற்கு மூன்று வயதாக இருக்கும்போது; இன்னும் அது அதை மறக்கவில்லை. அதன் மத்தகத்தின் உள்ளே ஒரு வடுபோல அந்த ஞாபகம் பதிந்திருக்கிறது.
யானையின் உடல் நடுங்குவதை சையது கண்டான். பிளிறியபடி அது திரும்பியது. சையது உடல் துடிக்கத் திரும்பியபடி மரத்தில் பாய்ந்து ஏற யத்தனித்த கணம் யானையின் கண்கள் அவன் கண்களில் பட்டன. ஒரு கணம் அவன் தவித்தான். மறுகணம் துரட்டியை மரத்தில் ஓங்கியடித்தபடி "ஆனெ இதர் டாவ்" என்று கூவினான். செவிகளை அசையாது பிடித்தபடி யானை உடலைக் குறுக்கி நின்றது. சையது தன் அடிவயிறு குளிர்ந்து, தாங்க முடியாதபடி கனப்பதை உணர்ந்தான். தள்ளாடி விழுந்துவிடுவோம் என்று பட்டது. ஆனால் ஒரு கணம் தடுமாறினால் கூட உயிர் மிஞ்சாது. கால்களைக் கனவில் போல் எடையின்றித் தூக்கி வைத்தபடி முன்னேறினான். உரத்த குரலில் "உண்ணீ, நில்லுடி இபிலீஸே5..." என்றான். தரையில் துரட்டியை ஓங்கி அடித்தான். நெருங்க நெருங்க யானையின் பார்வையைத் தெளிவாகக் கண்டான். அவன் பயம் குறைந்து வந்தது. "பர்க்கத்து6 கெட்ட நாயே, ஓடியா போற! உன்னே… ஆனெ, காலெடு ஆனெ….. தோடா டாவ்" என்று கூவினான். யானையின் மத்தகம் சற்று இறங்கியது. துதிக்கை வளைத்து நெளிந்தது. வலது முன்காலை அது மெதுவாகத் தூக்கிக் காட்டியது.
–சந்திப்போம் வேறொரு தருணத்தில்...
________________________________________
•4. முகம்மது நபி
•5. சைத்தான்
•6. நன்மை
“