புழு
–ம.ந.ராமசாமி
கதையின் முன்பாதி: தருணம் 13
"உட்கார்" என்றான் அவன் மெல்லிய குரலில்.
சுப்புடு உட்கார்ந்தான்.
"இதோ, என்னுடைய இடது பாதத்தைப் பாரு."
சுப்புடு பார்த்தான். "என்னடா அது, கறுப்பா?"
"அதை மெதுவா நீ பிடிச்சுடணும்!"
சுப்புடு முகம் திருப்பி அவனை நோக்கினான். "நானா?" என்று கேட்டான்.
"ஆமாம். சத்தம் போட்டு பேசாதே. அதுக்குக் கேட்கும். மெள்ள விரலால் அதைப் பிடி."
சுப்புடு உடம்பைச் சிலிர்த்துக் கொண்டான். "நான் மாட்டேன்டாப்பா! ஏன், நீயே பிடியேன்?"
"நான் பிடிக்கப் போனால், அது உள்ளே ஓடிடறது!"
"ஐயோ, என்னால் முடியாது. அது கடிச்சுடுத்துன்னா? உனக்கு இப்படி ஒரு வியாதியா?"
அவன் நிமிர்ந்து சுப்புடுவின் முகத்தை நோக்கினான். அம்முகத்தில் அருவருப்பு குமிழ்கள் இட்டது.
அவனே மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து, வலது கை ஆட்காட்டி, கட்டை விரல்களைச் சேர்த்தும் சேர்க்காமலுமாக இடதுபாதத்தின் அருகே கொண்டு சென்றான். புழு தலையை உள்ளுக்கு இழுத்துக் கொண்டது.
அவன் மீண்டும் படுத்தான்.
"இது என்னடா வியாதி?" சுப்புடு கேட்டான்.
"இது வியாதி இல்லை. மரத்துல புல்லுருவி படர்வது மாதிரி என்னிடத்திலே இப்படி ஒண்ணு உண்டாகி இருக்கு!"
"இது ஒண்ணும் தொத்து வியாதி இல்லையே?" சுப்புடு கேட்டான்.
"இது வியாதியே இல்லே. தொத்து வியாதியா இல்லையான்னும் எனக்குத் தெரியாது. தொத்தாதுன்னா அந்த புழு இருக்கே, அது உன் மேலே தாவித் தொத்தினால், உனக்கும் இப்படி ஒண்ணு வரலாம். எனக்கு எப்படி வந்ததுன்னு தெரியல்லே. ஒரு வேளை அது உள்ளே முட்டை இட்டாலும் என் கூட இருக்கிற உன் மேலே அந்த முட்டைகளில் ஒண்ணு ஒட்டிண்டு, தோலைத் துளைச்சிண்டு போய், புழுவாகி துளை உண்டாக்கலாம். அது எப்படி நேரும்னு நான் இன்னும் ஆராய்ச்சி பண்ணல்லே. ஒரு வேளை இந்தப் புழுவே தன்னைச் சுத்தி பட்டுப்புழுபோல ஒரு கூட்டை அமைச்சிண்டு, கூட்டுப்புழு ஆகி, ரெக்கை முளைச்ச அப்புறம் இங்கிருந்து பறந்து போகலாம். என்னவெல்லாம் நேரும் என்பதை இப்போ நான் சொல்ல முடியாது" என்றான் அவன்.
சுப்புடு கேட்டுக் கொண்டிருந்தான். இன்னும் முகத்தில் அருவருப்பின் சாயல் இருந்தது. இந்த முகத்தோடு அவனை சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டுமா என்று அவன் நினைத்தான். சுப்புடுவைக் கழற்றி விடுவதே சரியானது என்று முடிவு செய்தான்.
அவன் சொன்னான்; "இப்போ சினிமாக் கொட்டகையில் நீ என் பக்கத்துலே உட்கார்ந்திருக்கே. புது ரத்தத்துக்காக இந்தப் புழு அலையறதுன்னு வச்சுக்க. நிச்சயம் அது பக்கத்துலே இருக்கிற கால் மேலே தாவும். அந்தக் கால் உன் காலாகவும் இருக்கலாம். இருட்டுலே அதுக்கும்தான் என்ன தெரியும்? இருட்டுன்னு என்ன, இப்போ ஓட்டலுக்கு டிபன், காபி சாப்பிடப் போறோம். மேஜை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் உட்கார்ந்தாலும் நம் ரெண்டு பேர் பாதமும் முட்டிக்கொள்ளும். அப்போ இந்தப் புழு உன் கால்லே தொத்திக்காது என்கிறதுக்கு என்ன நிச்சயம்?"
சுப்புடு உடலைக் குறுக்கிக் கொண்டான். "இப்போ நான் உன் கூட டிபன் சாப்பிட வரல்லியே! லீவு நாளாக இருக்கே, பார்த்துவிட்டுப் போகலாம்னு காலார நடந்து வந்தேன்!" என்றான் சுப்புடு.
"அப்போ சினிமாவுக்கு?"
"சினிமாவா? என்ன சினிமா?"
"ஏதோ ஒண்ணு நேத்தி சொல்லி இருந்தேனே!"
"நான் வரல்லே. எனக்கு வேலை இருக்கு. தங்கை வேலை விஷயமாக ஒருத்தரை எட்டு மணிக்குப் பார்க்கப் போகணும். சரி நான் வரவா?"
சுப்புடு எழுந்தான். அவன் பதில் கூறும் முன் அறையை விட்டு வெளியேறினான்.
அவனுக்குத் தெரியும். நாளைக்கு அலுவலகத்தில் அவனுடைய இந்த உபாதை குறித்து அனைவரிடமும் சுப்புடு சொல்லி விடுவான். சிலர் அது குறித்து அவனிடம் அக்கறையோடு விசாரிப்பார்கள். சிலர் அவனிடம் இருந்து விலகி நிற்பார்கள். சூப்பரிண்டெண்டு காதுகளுக்கு சமாசாரம் எட்டும். அவர் அவனை மெடிகல் டெஸ்ட்டுக்கு அனுப்பலாம்.
விவரம் தெரிந்ததும் சில நண்பர்கள் அவனுடைய அறையில் கூடி, அந்தப் புழுவை எடுத்துவிட முயற்சி மேற்கொண்டனர். அவனைப் படுக்கச் சொல்லி, அரைநாள் ஷிஃப்ட் போட்டுக் கொண்டு புழுவின் வரவுக்காகக் காத்திருந்தனர். ஊஹும், அது வரவில்லையே!
"என் உணர்ச்சி, அறிவோடு இணைஞ்சிருக்குடா அது. நான் என்ன நினைக்கிறேன் என்கிறது அதுக்குத் தெரியும். இப்போ எனக்கும் அதுக்கும் ஒரு உறவே உண்டாயிடுச்சு. அதைப் பிரியறதுன்னாக்கூட எனக்கு வருத்தம்தான்" என்றான் அவன்.
‘அப்போ அது கூடவே நீடுழி வாழ்ந்துண்டு இரு’ என்று அவனுடைய நண்பர்கள் ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர்.
நாளாக ஆக, அவன் நினைத்த மாத்திரத்தில் புழு துளையின் வாயிலில் வந்து அமர்ந்தது. அவன் அதனுடன் பேசத் தொடங்கினான். அதுக்குப் பத்திரிகைகளிலிருந்து கதைகள் படித்தான். "என்னை நீ புரிந்து கொண்டிருக்கிறாயே, உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே!" என்று கூட அதனிடம் சொன்னான்.
ஒரு சமயம் நண்பன் ஒருவன் வீட்டுக்குப் போயிருந்தான். அலுவலகத்திலிருந்து நேராக வீட்டுக்கு அழைத்துச் சென்றான் நண்பன். நண்பனின் தாயார் நலம் விசாரித்துவிட்டு, இரு டம்ளர்களில் பாயசம் கொண்டு வந்து கொடுத்தார்.
நண்பன் டம்ளரை வாய்க்கு மேலாகத் தூக்கி உதட்டில் படாமல் அண்ணாந்து பாயசம் சாப்பிட்டான். அப்படிச் சாப்பிட்டு இவனுக்குப் பழக்கம் இல்லை. இருந்தாலும், சீப்பிச் சாப்பிட்டால், அந்த வீட்டார் அவனைக் குறித்து என்ன எண்ணிக் கொள்வார்களோ என்று நினைத்தவனாக, அவனும் அண்ணாந்து பாயசத்தை அருந்த முற்பட்டான்.
ஆறி இருந்தாலும் பாயசம் ருசியுடனும், வாசம் மிகுந்தும் இருந்தது. ராமாயணத்திலேயே இந்தப் பாயசத்தைப் பற்றிக் கூறி இருப்பதை அவன் நினைவு கூர்ந்தான்.
அச்சமயம் ஒரு திவலை பாயசம் அவனுடைய இடது பாதத்தில் துளைக்கு அருகில் சிந்தியது. குனிந்து அவன் நோக்கினான்.
"பரவாயில்லை. கழுவிக் கொள்ளலாம்" என்றான் நண்பன்.
அவன் பார்த்துக் கொண்டிருந்தான். துளை வாயிலில் இருந்த புழு துளையை விட்டு வெளியே வந்தது. ஆச்சர்யம்! அது தனது உடல் முழுதுடனும் துளைக்கு வெளியே வந்து, பாதத்தின் மேல் சிந்தி இருந்த பாயசத்தைச் சாப்பிடத் தொடங்கியது.
அவன் நிதானித்தான். இதுதான் சந்தர்ப்பம், புழுவை உதறிவிட என்று நினைத்தான். அப்படி அவன் நினைத்த மாத்திரத்தில் புழு சட்டென்று திரும்பித் துளையுள் புகுந்து கொண்டது.
ஒரு திட்டம் அவனுடைய உள்ளத்தில் உருவாகியது.
லாட்ஜுக்கு வந்தவன் நேராக ஓட்டலின் உட்புறத்தை நாடிச் சென்றான். காபி கலந்து கொண்டிருந்த நாராயணனிடம் சென்று ஒரு காகிதத்தைக் கொடுத்து, ஒரு ஸ்பூன் சர்க்கரை மடித்துத் தரச் சொன்னான்.
சர்க்கரைப் பொட்டலத்துடன் அவன் படி ஏறித் தன் அறைக்கு வந்தான். சட்டையைக் கழற்றி ஸ்டாண்டில் மாட்டி விட்டு, மண் கூஜாவிலிருந்து சாய்த்துக் கண்ணாடி டம்ளரில் சிறிது அளவு நீர் பிடித்தான். பொட்டலத்தைப் பிரித்து டம்ளரில் சர்க்கரையைப் போட்டதும் அது கரையத் தொடங்கியது. அனைத்தும் கரையும் மட்டும் டம்ளரை ஆட்டினான்.
பிறகு தரையில் அமர்ந்து கொண்டு, வலது கை ஆட்காட்டி விரலால் சர்க்கரைக் கரைசலைத் தொட்டு துளையின் வாயில் இருந்து நீர்க்கோடு இழுத்தான். இடது பாதத்தை நன்றாகத் தரையில் ஊன்றி, தரையில் நீளமாக ஒரு மீட்டர் அளவுக்கு சர்க்கரைக் கரைசல் நீரைக் கோடாக இழுத்தான்.
அவன் காத்திருந்தபோது, புழு துளையிலிருந்து வெளியே வந்தது. சர்க்கரை நீரை அது ஆவலோடு பருகுவதை அவன் கண்டான். பருகியபடியே அது அவனுடைய பாதத்தைவிட்டுத் தரையில் இறங்கியது. அவன் அவசரப்படவில்லை. மெள்ள நீரைப் பருகியபடியே அது நகர்ந்தது. பத்து சென்டிமீட்டர் தூரம் சென்றதும் அவன் பாதத்தை நகர்த்திக் கொண்டான்.
மஞ்சள் நிறத்தில் இருந்தது அந்தப் புழு. சுமார் ஒரு அங்குல நீளம் இருக்கும், அவ்வளவுதான். முகத்தில் மட்டும் கறுப்பும், மஞ்சளுமாக இருந்தது; வரிப்புலிபோல. புலியிடம் இருந்து தப்பித்தவனின் மனமகிழ்ச்சி அவனிடம் இருந்தது.
அவன் நகர்ந்து, தள்ளி உட்கார்ந்தான். டம்ளரில் இருந்த சர்க்கரைக் கரைசலைத் தாராளமாகப் புழுவின் அருகில் ஊற்றினான்.
அது சட்டென்று திரும்பியது. பரபரவென்று நகர்ந்து வலமும் இடமுமாகச் சென்றது. அவனை நோக்கி வந்தது. அவன் தாவி அறைக்கு வெளியே நின்றான். இங்கும் அங்குமாக அது இரண்டு நிமிஷ நேரம் அலைந்து விட்டு நின்றது. பின், தலையைத் தூக்கி நான்கு முறை தரையில் அடித்துவிட்டு மல்லாந்தது.
அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. அதன் கிரியைக்கு அவன் ஏற்பாடு செய்யத் தொடங்கினான்.
–சந்திப்போம் வேறொரு தருணத்தில்...
“