தருணம் (13)

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

புழு

–ம.ந.ராமசாமி

அது எப்படி உண்டாயிற்று என்பது தெரியவில்லை. வியர்வைக்குறு மாதிரி இடது பாதத்தின் நட்ட நடுவில் எழுந்து அரித்தது. சொறிந்து கொண்டான். இரண்டே நாட்களில் மிளகு அளவுக்கு வளர்ந்து பளபளத்தது. செருப்புப் போட முடியவில்லை. எரிச்சல் எடுத்தது. கொப்புளம்.

எண்ணெய், தைலம், அஞ்சனம் என்று எது எதையோ எடுத்துத் தேய்த்தான். கொப்புளம் மறையவில்லை. உள்ளூரக் குறுகுறுத்தது. டாக்டர் யாரையாவது பார்ப்போம் என்று அவனுக்குத் தோன்றவில்லை. இந்த சின்னக் கொப்புளத்துக்கு டாக்டரைப் பார்ப்பானேன் என்று இருந்து விட்டான்.

இரு வாரத்துக்குப் பிறகு கொப்புளம் வடிந்தது. வடிகிறதே என்று மகிழ்ந்தான். வடிந்த கொப்புளம் உள்ளே இறங்கியது. அவன் நிமிஷத்துக்கு நிமிஷம் கவனித்துக் கொண்டிருக்கையில், வடிந்த இடத்தில் ஒரு துளை தோன்றியது. ‘இது என்னடா புது சங்கடம்?’ என்று சலித்தவனாக அப்பொழுதும் டாக்டரிடம் போகாமல் இருந்தான்.

புண் ஆறிவிட்டது என்று தெரிந்த பிறகு அவன் ஒரு நீண்ட நூலை எடுத்து, திரித்து, நான்காக மடித்து மேலும் திரித்து, சற்றே நூலை விறைப்பாக்கி, அதன் நுனியைப் பாதத்தில் தெரிந்த துளையுள் விட்டான். நூல் உள்ளே போய்க் கொண்டே இருந்தது.
‘ஓஹோஹோ! இது கொஞ்சம் சீரியஸ் கேஸ்!’ என்று அவன் தன்னுள் சொல்லிக் கொண்டான். அலுவலகத்துக்கு லீவு எழுதிப் போட்டுவிட்டு, தெரிந்த டாக்டரை அணுகினான்.

"காலில் ஏதாவது விழுந்து குத்தியதா?" – டாக்டர் கேட்டார்.

அவன் விபரம் சொன்னான்.

"ஏன் அப்போதே வரவில்லை?"

"அந்தச் சின்னக் கொப்புளம் இப்படி ஆகும்னு தெரியல்லே, டாக்டர்!"

"இப்படி விபரீதமாக ஆனபிறகு வரத் தோன்றியதாக்கும்?"

அவன் டாக்டருக்குப் பதில் சொல்லவில்லை. அவர் கம்பௌண்டரைக் கூப்பிட்டு ஏதோ ஒரு மருந்தின் பெயரைச் சொல்லி, கட்டுப் போடச் சொன்னார். கட்டுப்போட்டுக் கொண்டு அவன் திரும்பினான்.

மறுபடியும் அவன் டாக்டரிடம் போகவில்லை. கட்டையும் அவிழ்த்து எறிந்துவிட்டான். நாளடைவில் துளை தானே அடைபட்டுவிடும் என்று நினைத்தான்.

ஒரு நாலு மில்லி மீட்டர் குறுக்களவில் இருந்தது துளை. உள்ளே ஒரே இருட்டாக இருக்கும் என்று அவனுள் ஓர் எண்ணம். ஒரு தீக்குச்சியின் தலை அதனுள் தாராளமாகச் செல்லலாம். துளையின் வாயிற்புறம், நீர் ஊற்றிக் கழுவி சுத்தம் செய்தாற்போலப் பளபளத்தது.

குளிக்கும்போது சுடச்சுட அத்துளையுள் நீரை ஊற்றுவான். நீர் துளையுள் இறங்குகிறதா என்பது அவனுக்குத் தெரியவில்லை. சில்லென்று தண்ணீரைக் கூட அவன் ஊற்றிப் பார்த்தான்.

அத்துளை அடைபடுவதாகத் தெரியவில்லை. அது பாட்டுக்கு இருந்தது. செருப்புப் போடுவது இன்னலாக இல்லை. சொல்லப் போனால், அத்துளையினால் அவனுக்கு எவ்விதத் தொந்தரவும் கிடையாது. அத்துளை இருந்தது, அவனும் இருந்தான்.
ஒரு முற்பகல் நேரம். அறையில் பாயை விரித்து, படுக்கையைத் தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு, ஒரு நாவலில் மூழ்கி இருந்தான். காலையில் கீழே ஓட்டலில் சாப்பிட்ட இரண்டு இட்லி, ஸ்பெஷல் தோசை, பூரி கிழங்கு, காபி வயிற்றில் கம்மென்றிருந்தன.

படித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், அவனுடைய பார்வை தற்செயலாக இடது பாதத்தின் மீது விழுந்தது. அப்போது கால்களை நீட்டி, இடது காலை வலது கால் மீது போட்டபடி படுத்திருந்தான்.

இடது பாதத்தின் அந்தத் துளையிலிருந்து ஏதோ ஒன்று கறுப்பும் மஞ்சளுமாகத் தலைநீட்டுவது தெரிந்தது. அவன் திடுக்கிட்டான். துளை மீது ஈ உட்கார்ந்திருக்கிறதோ என்று கூட நினைத்துப் பார்த்தான். அப்படி அது ஈயாகத் தெரியவில்லை. கையிலிருந்த புஸ்தகத்தை வலப்புறமாகப் பாயின் மீது வைத்துவிட்டு, அவன் கால்களை நீட்டியபடியே நிமிர்ந்து எழுந்தான். அந்தக் கறுப்பு மஞ்சள் தலை அப்போதும் அங்கேயே துளையில் இருந்தது. அவன் கையை அருகில் கொண்டு போனான். சட்டென்று அந்த – அது என்ன? – அது உள்ளே சென்று விட்டது. துளையை விரல்களால் அவன் தடவிப் பார்த்தான்.

மீண்டும் அவன் படுத்து, நாவலைக் கையில் எடுத்துக் கொண்டபோது, கவனம் நாவலில் பதியவில்லை. பார்வை அடிக்கடி இடது பாதத்தின் மீது விழுந்தது. அந்தத் துளை அங்கேதான் இருந்தது. கறுப்பும் மஞ்சளுமான அது மட்டும் மீண்டும் தலை நீட்டவே இல்லை.

அவனுடைய நெஞ்சு கனத்தது ‘இது என்னடா புது வம்பு?’ என்று சலித்துக் கொண்டான். ‘ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போயிருக்க வேண்டுமோ? அப்படிப் போயிருந்தால், இவ்வளவு தூரம் இது வளர்ந்து விட்டிருக்காதே!’ என்று நினைத்துக் கொண்டான்.
அது என்னவாக இருக்கும்? புழுவாக இருக்கலாம். எத்தனை நீளமாக இருக்கும்? தெரியவில்லை. தலை மட்டும்தான் துளைக்கு வெளியே தெரிந்ததே தவிர, உடல் தெரியவில்லை. இருந்தால் சிவப்பு மரவட்டை நீளத்துக்கு, இரண்டு அங்குலம் இருக்கலாம்.
அவனுள்ளே ஒரு புழு! மகா பயங்கரம்! அவன் உடலையே அழித்து விடுமோ? அவன் உடலின் உறுப்புகளைத் தின்று, அது வளர அவன் தேய நேரிடுமோ? ‘உடனடியாக ஸ்பெஷலிஸ்ட்டிடம் போக வேண்டியதுதான்’ என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அதற்குள் இன்னொரு தடவை அந்தப் பிராணியை – புழுவை-ப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.

இரண்டு நாட்கள் அது மீண்டும் தலைகாட்டவே இல்லை. ஒரு சமயம் தான் அப்படி ஒன்றைக் கண்டது கனவோ, பிரமையோ என்று கூட அவன் எண்ணினான். மூன்றாம் நாள் அவன் அலுவலகத்தில் உட்கார்ந்து, ஒரு ஃபைலில் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தபோது தற்செயலாக, கழற்றிப்போட்ட செருப்புகளைக் கால்கள் துழாவுகையில் கிடைக்காமற்போக, அவன் மேஜையின் கீழ் செருப்புகளைப் பார்வையால் தேடியபோது, இடது பாதத் துளையிலிருந்து கறுப்பும் மஞ்சளுமான அது எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

சற்று நேரம் அவன் மூச்சுக்கூட விட மறந்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். இச்சமயம் அதை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். சென்ற தடவைபோல ஏமாந்துவிடக் கூடாது. எப்படிப் பிடிப்பது? பிடிக்கக் கையை அருகில் எடுத்துச் சென்றால், அது உள்ளே ஓடிவிடுகிறது. கையால் பிடிக்கலாமா அல்லது இடுக்கி, கொறடு கொண்டு பிடிக்கலாமா? மேஜை மீது நோக்கினான். காகிதங்களை மூலையில் துளைபோடும் பஞ்ச் ப்ளையர் அவனுடைய பார்வையில் பட்டது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு, இடது காலை மேஜையின் உட்புறத்திலிருந்து மெதுவாக இழுத்து, மேலே உயர்த்தினான். கறுப்பும் மஞ்சளுமாக இருந்த அந்த புழுவின் தலை அவன் காலை உயர்த்து மட்டும் காத்திருந்தது. ப்ளையரை மெல்ல அருகில் கொண்டு செல்கையில், சட்டென்று உள்ளே மறைந்தது.

ஏமாந்து போன அவன், கறுப்பாகத் தெரிந்த அந்தத் துளையை, கையில் ப்ளையரைப் பிடித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.
‘சரி, அடுத்த தடவை நண்பர்களில் எவனையாவது அழைத்து நண்பன் மூலம் அதைப் பிடித்துவிட வேண்டும். அவன் தன் கையை அருகில் கொண்டு செல்வதால்தானே அது இப்படிப் போக்குக் காட்டிவிட்டு மறைகிறது?’

இதன் பிறகு தினம் ஒரு முறை அது தலைகாட்டத் தொடங்கியது. அவன் அதைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை. அது தன் தலையைத் துளைக்கு வெளியே வைத்துக் கொண்டு, சூரிய, சந்திர, இதர கிரகங்களைக் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தையே வேடிக்கை பார்ப்பது போலக் காணப்பட்டது.

சுப்புடு அறைக்கு வந்திருந்தபோது, இவன் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அன்று அலுவலக விடுமுறை நாள். ‘மாலையில் சினிமாவுக்குப் போகலாம், வா’ என்று சுப்புடுவை அவன்தான் அழைத்திருந்தான். சுப்புடு, அண்ணா குடும்பத்தோடு இருக்கிறான். வாங்கும் சம்பளத்தை அப்படியே மன்னியிடம் கொடுத்துவிட்டு, பஸ் செலவுக்கு அன்றாடம் மன்னியிடம் கேட்டு வாங்கி வருவது வழக்கம். ‘மாலையில் சினிமாவுக்குப் போகலாம், வா’ என்று சொன்னதற்காக, பிற்பகல் மூன்று மணிக்கே வந்துவிட்டான். சினிமாவுக்குச் செலவு செய்வது போதாமல், சிற்றுண்டிக்காகவும் அவன் செலவு செய்தாக வேண்டும். தனியாகச் சினிமாவுக்குச் சென்றால் அலுப்பு அடிக்கிறது என்பதற்காக சுப்புடுவை வரச் சொன்னதுக்கு, இதுவும் வேண்டியதுதான், இன்னமும் வேண்டியதுதான்.

சுப்புடு நாற்காலியில் உட்கார்ந்து, தேர்ந்த தவில் வித்வான் போல, நாற்காலியின் இரு பக்கக் கட்டைகள் மீதும் தாளம் போட்டான்.
பார்வையை அவன் திருப்பியபோது, இடது பாதத்துளைக்கு வெளியே வழக்கம் போலப் புழு தலை வைத்துப் பிரபஞ்ச ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.

"சுப்புடு!"

"உம்?" தாளத்தை நிறுத்தி, சுப்புடு முகத்தை அவன் பக்கம் திருப்பினான்.

"இங்கே வா!"

வந்தான். "என்ன?" என்று கேட்டான் அருகில் நின்றபடி.

–இந்தத் தருணத்தின் தொடர்ச்சி அடுத்த இதழில்…

About The Author