தயவு செய்து அவனை எழுப்பாதீர்கள்!
இத்தனை பகலிலும் அவன் கொள்ளும்
மேலார்ந்த தூக்கத்தைக் கலைக்காதீர்கள்!
அம்மா செய்யும் கறிக்குழம்பின் வாசனை
அத்தனை பிரயத்தனத்துக்குப் பின்னும்
தன்னைத் திரும்பிப் பார்க்காத
நிம்மி மீதான கோபம்
எத்தனை விரட்டியும் மூக்கின் மீது
வந்தமரும் ஈ மீதான கொலை வெறி
அத்தனையும் அவன் கவனத்தை
சதா கலைத்த போதிலும்
அவையெல்லாம் தாண்டி
அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான்
இத்தனை கேவலமான
ஒருவனுக்கா பரிந்து பேசுகிறாய்?
என்று என்னைக் கடிந்து கொள்ளாதீர்கள்!
எத்தனை இரவாயினும் அவன் அனுமதியின்றி
ஒரு பாதம் கூட எங்கள்
வீட்டைச் சுற்றிப் பதிந்து விட முடியாது.
பகலில் தூங்குகிறான், ஆனாலும்
சோம்பேறி என்று சொல்லிவிட முடியுமா
எனது செல்ல நாய்க்குட்டியை?
கண்கள் விழித்திருந்தும் பகலிலேயே
உறங்கிக் கொண்டிருக்கும்
மனிதர்கள் மத்தியில்
இவன் உறங்குவதோ விழித்திருக்க!
விழிப்பாய் இருக்க!
தயவு செய்து அவனை எழுப்பாதீர்கள்!
Hi,
Very Nice Kavithai……..
I like so much…..