(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன் “வெற்றிக்கு முதல் படி” நூலிலிருந்து)
தோல்விகள் அல்லாத வாழ்க்கை என்பது உண்மையல்ல. நாம் எடுக்கும் எவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற்றுக்கொண்டே இருப்போம் என்று நம்புவது மடமை. சில நேரம் மிகச் சிறிய விஷயமாக இருக்கும்; அதில்கூட நாம் தோற்றுப்போக நேரிடும். இத்தனைக்கும் நாம் பழுத்த அனுபவசாலியாக இருக்கக்கூடும்.
இத்தனை நாள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் – மிகுந்த சாணக்கியத்துடன் – முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை வைத்துக் கொண்டு, "நாம் எடுப்பதெல்லாம் வெற்றியாக அமையப் போகிறது" என்று நம்புவோமானால், நம்மைவிட முட்டாள் யாருமில்லை. அதனால்தான் "யானைக்கும் அடிசறுக்கும்" என்று சொன்னார்கள்!
பள்ளியில் படிக்கும் புத்திசாலிக் குழந்தைகள் பலரைப் பார்த்திருக்கிறேன், நான். எனக்கு தெரிந்த ஒரு பெண், மிகுந்த கெட்டிக்காரி. எப்போதுமே முதல் மதிப்பெண்தான் வாங்குவாள். அவள் எப்படிப்பட்ட நிமிர்ந்த தலையுடன் தன் தோழிகளுடன் பழகுவாள் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம்! அப்படிப்பட்ட பெண்ணுக்கு ஒரு நேரம் முதல் மதிப்பெண் வரவில்லை. இரண்டாவது மதிப்பெண்ணும் வரவில்லை. மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தாள். அவள் பெற்ற மதிப்பெண் 96. முதல் மதிப்பெண் 98 இரண்டாவது 97.
வழக்கமாக முதல் மதிப்பெண் பெறும் அந்தப் பெண், மனமுடைந்து போனாள். முகத்திலே துயரம். சரியாக சாப்பிடவில்லை. இரண்டு நாளாகத் தன் தோழிகளைப் பார்க்கவும், பேசவும் பிடிக்கவில்லை, அவளுக்கு.
இந்த மாற்றத்தைக் கண்டு, அவள் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்கள். "அம்மா! இது சாதாரணம்" என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். அவள் அசையவில்ல; இது ‘இயல்பு’ என்று அவள் எடுத்துக்கெள்ளவில்லை. பேரதிர்ச்சி அடைந்தாள். எல்லாருடைய மதிப்பிலும் தான் மிகவும் தாழ்ந்து போனதாக எண்ணி முடங்கிப் போனாள்.
அதனால்தான் சொல்கிறார்கள், மனவியல் அறிஞர்கள்: ‘பட்டுப்பூச்சி கூட்டுக்குள் வளர்வது போல இல்லாமல் குழந்தைகள் எல்லாவித அனுபவங்களையும் பெறட்டும். காரிலே போய் பள்ளியில் இறங்கும் குழந்தை வீட்டுக்கு சில நாள் நடந்து வருவதிலிருந்து, கறிகாய் பேரம் செய்வதிலிருந்து, அநாதைக் குழந்தைகள் இல்லத்தையும் முடவர்கள் இல்லத்தையும் பார்வையிடுவது வரை எல்லா அனுபவங்களையும் பெறட்டும்’ என்கிறார்கள்.
எங்கள் வீட்டில் ஒரு சிறுவன் இருந்தான். கேரம் விளையாடுவான். இரண்டு முறை தோற்றுப் போனவுடன் "நான் விளையாட வரவில்லை" என்று முகத்தை சுறுக்கிக் கொண்டு எழுந்து விடுவான்.
என் நண்பர் தன் மனைவியோடு சீட்டு விளையாடும்போது தான் திரும்பத் திரும்பத் தோல்வியடைய நேர்ந்தால் சிரிப்பார்; ஆனால் விளையாட மாட்டார்" எனக்கு வேறு வேலை இருக்கிறது" என்று எழுந்துவிடுவார்!
இவர்களிடம் இருக்கும் பொது குணம் என்ன? அவர்களால் தோல்வியை சகித்துக்கொள்ள முடியவில்லை – அதுதான் விஷயம்.
"தோல்வி என்பது வாழ்வின் ஒரு பகுதி. தோல்வி ஏற்படும்" என்பதை அவர்கள் முழுவதுமாக உணர்வதில்லை.
‘மாவீரன்’ என்று போற்றப்பட்ட நெப்போலியன் வாட்டர்லூ போரில் தோற்றுவிடவில்லையா?
‘கிடுகிடு’ என்று உலகையே வென்றுகொண்டு வந்த ஹிட்லர், ஒருநாள் தோற்றுப் போகவில்லையா?
எல்லார் வாழ்க்கையிலும் ‘வாட்டர்லூ’ எதிர்ப்படத்தான் செய்யும் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை!
என்ன செய்யவேண்டும்?
பட்டுப்பூச்சியின் கூட்டுக்குள் வளர்ந்தவர்கள் தொட்டால் சுருங்கியாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பழக்கத்திலிருந்து இவர்களை மீட்க நாம் என்ன செய்யலாம்?
இளவயதிலேயே எதையும் சகஜமாக (‘ஸ்போர்டிவ்’ ஆக) எடுத்துக்கொள்ளும் விளையாட்டு வீரனின் மனோபாவத்துடனே இவர்களைப் பழக்க வேண்டும்.
விளையாட்டு வீரன் தோல்வி வரும்போது என்ன செய்கிறான்? சிரிக்கிறான்! தன்னைத் தோற்கடித்த தன் எதிரியிடம் சென்று கை குலுக்குகிறான்; பாராட்டுகிறான். ஆனால் –
மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான்: "இந்த முறை நீ! அடுத்த முறை நான்!" என்று.
அடுத்த விளையாட்டுக்கு தன்னைத் தயார் செய்து கொள்கிறான்.
"இடுக்கண் வருங்கால் நகுக" என்றார், வள்ளுவர். ஏன்?
துன்பத்தைக் கண்டு அழுதால் சோர்ந்து போவோம். சிரித்தால் புது வலிமை பெறுவோம். அது அடுத்த முயற்சிக்கு ஆதாரமாக அமைந்து வெற்றி தரும்! அந்த நகைப்பு நமக்கு புதுவலிமை தரும்! அடுத்த முறை வெற்றி தேடித்தரும்!!
(மீதி அடுத்த இதழில்)
இதைப் படித்தவுடன் கைக்குலுக்கலுடன் ஒரு தோல்வியை எதிர் கொள்ள வேண்டும் என ஆவல் எழுகிறது.
னல்ல அரிவுரை.னன்ட்ரி
Endha madhri niraiya katturaigal veliyidavum… Manam sila nerangalil kulapam adaiyum podhu endha madhri eluthukkal nimira vaikiradhu
Thank you Sir,