கோமூத்திரி – 2
சித்திர கவிகளில், கோமூத்திரி வகையில் மேலும் சில செய்யுள்களைப் பார்க்கலாம்.
‘மாறனலங்காரம்’ தரும் உதாரணச் செய்யுள் இது:-
மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா
இதன் பொருள்:-
மாயா மாயா – அழியாத மாயையை உடையவனே!
நாதா – சுவாமியே!
மாவா – திருமகளை உடையவனே!
வேயா நாதா – வேய்ங்குழலில் உண்டாக்கும் கானத்தை உடையவனே
கோதா வேதா – பசுவைக் காத்தளித்த வேத சொரூபனே!
காயா காயா – காயாம்பூப் போலும் திருமேனியை உடையவனே!
போதா – ஞானத்தை உடையவனே!
பேதா பேதா – பேதமும் அபேதமும் ஆனவனே!
பாயாமீதா – பரந்த பிரளயத்தின் மேலானவனே!
காவா – என்னைக் காக்க வந்தருள்வாயாக!
இது கலி விருத்தம். துறை: கடவுள் வாழ்த்து.
"முன் இரண்டு அடி மேல் வரியாகவும், பின் இரண்டு அடி கீழ் வரியாகவும் எழுதி, அவ்வரி இரண்டையும் கோமூத்திரி ரேகை வழி படிக்க, ஒன்று விட்டு ஒன்று மாறா அடி முடியுமாறு காண்க" என்ற குறிப்புடன் தரப்பட்ட பாடலின் சித்திரம் இது:-
‘யாப்பருங்கல விருத்தி’ இரண்டு செய்யுள்களை கோமூத்திரியாகச் சுட்டிக் காட்டுகிறது:
"மேவார் சார்கை சார்வாகா
மேவார் சார்கை சார்வாமா
காவார் சார்கை சார்வாகா
மேவார் சார்கை சார்வாமா".
"பரவிப் பாரகத்தார் பணியுங்கழ
லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே
விரவிப் போர்வைத் தார்துணி வெங்கழ
லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே".
‘நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்தி’லே யாழ்ப்பாணக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை அமைத்துக் காட்டும் கோமூத்திரி செய்யுள் பின் வருமாறு:-
"நகுலை யாதி யடிமல ரோதவே
மிகுதி யாநு மவாகழி சாயுமே
தொகுதி யாகிய மாமய ரோடவே
தகுதி யான மகாகதி சாருமே"
இதன் பொருள்:– நகுலேச்சுரத்துத் தலைவரது திருவடித் தாமரைகளைத் துதிக்க மிகுதியாகிய நுமது அவா பெரிதும் நீங்கும்; கூட்டமாகிய பெருமயல் நீங்கத் தகுதியாகிய மகாகதி (வந்து) சேரும்.
புலவர் மா.முனியமுத்து இயற்றியுள்ள ஒரு கோமூத்திரி பாடல் இது:
தண்டமிழின் வானே எண்டிசையின் வாகை கொண்டலே வருகவே
வண்டமிழின் தேனே பண்டிசையின் நாகை வண்டலே தருகவே!
கோமூத்திரியைச் சித்திரமாக அமைப்பது சுலபம். மேலே கண்ட பாடல்களுக்கு நீங்களே சித்திரம் அமைத்து மகிழலாம்!
–விந்தைகள் தொடரும்
“