‘சதுரங்க பந்த’த்தின் அமைப்பு முறை பற்றிய விளக்கம் இடம்பெற்றிருந்த அந்தத் ‘தனிப்பாடல் திரட்டு’ நூலில் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என்ற தலைப்பின் கீழ் கடந்த வாரம் நாம் பார்த்த பின்வரும் பாடல் இருந்தது.
நேம னதிவித காம னனைவர்க்கு நேயகம
சேம சகாயன் சிதபுஞ்சன் சீர் சின வாவிசய
தாமன் மனதிற் சலிக்கா னருட்கல்வி சால்பினொடு
மாமணி நேர வளர்மானு வேல்கன வாசகனே!
அத்துடன் "சில அரிய பெரிய சித்திர கவிகளுக்கு இலக்கணம் – சதுரங்க பந்தம்" என்ற தலைப்பில் கீழ்க்கண்ட செய்யுள் தரப்பட்டிருந்தது:
அறுபத்து நாலறுபத் திரண்டைம்பா னாற்பானான்
எடுத்த முப்பத் தாறிருபத் தாறிருபத் திரண்டு
பெறுமக்க ரங்களொன்று முதலேழு வரைநிகர்ப்ப
பின்னுமைம்பத் தேழைம்பான் மூன்றொடுநாற் பான்முன்
றுறுமுப்பத் தைந்திருபத் தொன்பதுபன் னேழ்பதினைந்
துளவெழுபத் திரண்டுமுத லெழுபத்தெட் டீறா
மறுவற்று வரப்பாடுங் கவிதைசது ரங்கபந்தம்
வழுத்தியவஃ தெழுபத்தெட் டெழுத்தின்முடி குவதே!
துருவக் குறிப்பு:
{1-64 – 2+62 — 3+50 – 4+44 – 5+36 -– 6+26 .— 7+22 –
15+78 – 17+77 – 29+76 – 35+75 – 43+74 — 53×73 – 57+72}
மொத்த எழுத்துக்கள் 78.
இந்தப் பாடலையும் துருவக் குறிப்பையும் வைத்து சதுரங்க பந்தப் பாடலை ஆராய்ந்ததில் திடீரென்று கீழ்க்கண்ட உண்மை பளிச்சென விளங்கியது:
பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் நே
இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ம
மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் ன
நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் தி
ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் வி
ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் த
ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் கா
பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் நே
பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் க
இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் ச
முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் வா
நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் ன
ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் க
ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் ல்
ஆக சதுரங்க பந்தம் அமைக்கும் விதிகள் இவைதான்:
1)78 எழுத்துக்களுடன் ஒரு பாடல் சொற்சுவை, பொருட்சுவையுடன் இலக்கண விதிகளுடன் இயற்றப்படல் வேண்டும்.
2)அதில் மேலே உள்ளபடி ஒரே எழுத்துக்கள் குறிப்பிட்ட இடத்தில் வருமாறு அமைக்கப்படல் வேண்டும்..(துருவக் குறிப்பு என இந்த அமைப்பு தரப்பட்டிருக்கிறது.)
இந்த முறையில் நாமும் இப்படிப்பட்ட விந்தைக் கவிதைகளை இயற்றலாம்! கவிதை எழுதும் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இம்முறையை அறிந்து வைத்துக் கொண்டு இதன்படி இனி சதுரங்க பந்தப் பாடல்களைச் சரி பார்த்தால் கவிதையை ரசிப்பதோடு இந்த அமைப்பு முறையையும் ரசித்து வியக்கலாம்!
–விந்தைகள் தொடரும்…
“