தமிழ் என்னும் விந்தை-சதுரங்க பந்தம் – 10

தமிழ் ஒரு அற்புதமான விந்தையான மொழி. சதுரங்க பந்தம் அமைப்பதே கடினமான காரியம். போதாததற்கு, அதில் ஏராளமான விந்தைகளைச் செய்ய வழிகாட்டும் மொழி தமிழ்!

"குதிரையும் யானையுமாகப் பாய்த்துமாறு" என்று யாப்பருங்கல விருத்தி உரை ஓர் இலக்கணத்தைக் கீழ்க்கண்ட செய்யுளில் தருகிறது:

"செங்கை யுந்திச் சீர்மலி யாரம்
கீழணி தாழ்பொழில் கண்ணகன் திண்ணிலஞ்
சகமலி யிருவினைச் சார மீரம்
சித்திர மத்திரங் கிளரொளி தளரகிற்
கார்மழை தீரணி நான்மறை மீனுரு
வாடை பீடை வித்தா பத்தா
நிலமும் மலையும் பிரமனு மவர்மணி
மிகவு நகுமதி மாரி நீரில்
பார வீரர் புள்ளி வெள்ளை
முத்தி நெய்த்த நூலோர் மேலோர்
பேரா வீழி பெரிய வுருவுடை
பூதிய வேதன் மூரி நோன்ற
மெய்மை நுண்மை தெள்ளிய குருபரன்
எந்தையன் சுந்தர நூரன் சேரன்
தூசன் கேசவன் சூழ்பொழி லேழணி
கூறிய நேர்வு கெழுமிய துத்தி
சீரிய கரிபரி தெளிந்தனன் றெளிந்தே!"

யானையும் குதிரையும் பாய்ந்து நடக்கும் விதத்தைத் தெளிந்தனன் தெளிந்தே என்று கவிஞர் கூறினாலும் நமக்கு விளக்குவார் இன்மையால் தெளிவு பிறக்கவில்லை. "வல்லார் வாய் கேட்க" என்று இலக்கண விளக்க நூல்கள் அறிவுறுத்தும்போது இதை விளக்கும் வல்லார் எங்குள்ளனர் இன்று என்பதும் தெரியவில்லை.

இனி இந்தப் பாட்டின் விளக்கவுரையாக வருவது:

இதன் அடைவே கரியும் பரியும் வேண்டியதோர் அறை முதலாகவும், வேண்டியதோர் அறை ஈறாகவும் துதித்து வரைய அறுபத்து நாலும் வரும்.

இனி, இவற்றைச் சிறுநுதல் கடிகமழ் பெருமதர் மழைக்கண், துதித்துச் செங்கை சீரிய கரிபரி என மாறியும் படிக்கக் கடிதின் உதவும்.

அறைகட்கு எழுத்து நிறுத்துவதற்கு இலக்கணம்:

"அன்னங் சுழிசங்கு தத்தை நகர் பறவை
மன்னன் வலம்புரியோ டெட்டு"

"அன்னமொன்றாங் சுழியிரண்டா மணிநீர்ச் சங்க மொருமூன்றாந்
தண்ணந்தத்தை யீரண்டாந் தகைசா னகர மைந்தாகும்
பன்னும் பறவை யிருமூன்றாம் பழிதீர் மன்ன னோரேழாம்
மன்னு மொழியாய் வலம்புரியேன் மருடீ ரிருநான் காகுமே"

எனக் கொள்க.

இவற்றை நிரலே அ, க, ச, த, ந, ப, ம என அணிந்து அந்த அறைகளில் ஏகார வெழுத்தளவெதிர் நடாத்த அறுபத்து நாலறைக்கும் எழுத்துக்களாம்.

இப்படி தீர்க்கமாக விளக்கங்கள் தரப்பட்டாலும் எடுத்துக்காட்டுகள் இல்லாதிருப்பதால் நமக்குப் புரியவில்லை. அற்புதமான சொல்லடுக்கு உள்ள செய்யுளில் ஆழமான பொருள் இருப்பதை மட்டும் நம்மால் உணர முடிகிறது.

பாரசீகம், சம்ஸ்கிருதம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சதுரங்க பந்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழில்தான் பல்வேறு விந்தைகள் அதிகம் கொண்ட சதுரங்க பந்தங்களைப் பார்க்க முடிகிறது.

உதாரணத்திற்காக சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள ஒரு சதுரங்க பந்தம் மேலே தரப்பட்டுள்ளது. ஆனால், சதுரங்கத்தில் 64 கட்டங்கள் இல்லாமல், மேல் பாதியில் மட்டும் அதாவது 32 கட்டங்களில் மட்டும் வருமாறு இந்த ஸ்லோகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழில் உள்ள சதுரங்க பந்தங்களில் சிலவற்றை மட்டும் கண்டோம். இலக்கண நூல்கள் எவ்வளவு ஆழமாக அமைந்துள்ளன என்பதையும் பார்த்தோம். நாம் இந்தத் தொடரில் குறிப்பிட்டுள்ள பல புரியாத புதிர்களுக்கு விடை காண விழைவோர் எதையும் ஏற்கும் தமிழின் நெகிழ்வுத் தன்மையை எளிதில் உணர முடியும்.

அடுத்த வாரம் அடுத்த விந்தையைக் காண்போம்

–விந்தைகள் தொடரும்…

About The Author

1 Comment

  1. Dr R Vijayaraghavan

    சதுரங்க பந்தம் பற்றித் திரு நாகராஜன் அவர்களின் தொடர் கட்டுரைகள் மிகச் சிறப்பாக உள்ளன; தமிழின் பெருமையும் சிறப்பும் வளமும் அவரது கட்டுரைகள் வாயிலாக மேலும் தெளிவாக விளக்கமுறுகின்றன. அவருக்கு எனது நன்றியும், பாராட்டும்! வளர்க அவரது பணி!யும் தொண்டும்!!

    அன்புடன்,
    இரா விஜயராகவன்

Comments are closed.