தமிழே மருந்து !

செந்தமிழை ஆய்ந்து பல கட்டுரைகள் எழுதுபவர்
சிறுகதைகள் படைக்கின்றவர்
செவ்வானம் கடல் பரிதி நிலவு மலர் பறவை என
சீர்கவிதை புனைகின்றவர்

சிந்தைமகிழ்(வு) எய்த நறுஞ் செந்தமிழில் பாடல்களை
செவி நிறைய அளிக்கின்றவர்
செறிவுமிகு தமிழ்ப் பண்கள் கருவிகளில் இசைத்து நிதம்
சித்தமதைக் கொள்கின்றவர்

எந்தமிழில் நாட்டியத்தை இன்பமுற ஆடிடுவோர்
எழில் நாடகம் போடுவோர்
இவர்போல முத்தமிழில் மூழ்கிக் கிடப்பவரை
எமன் என்ன செய்து விடுவான்?

வந்தவினை பிணி மூப்பு வண்டமிழால் நீங்குமென
வைத்தீசு வரன் அருளுவான்
வளமை மிகு தமிழ் மொழியின் இனிய பல குண நலனை
வாழ்த்தி உல(கு) உய்ய மகிழ்வோம் !

About The Author

2 Comments

  1. anna

    மிக்க சரி!! உங்கள் கவிதை அருமை !! வாழ்வீர் பல்லாண்டு !!
    தமிழிருக்க எமனுக்கு இங்கென்ன வேலை!!!

  2. P.Balakrishnan

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    -அரிமா இளங்கண்ணன்

Comments are closed.