மதியம் 2.30 மணி அளவில் சிலுவைப் பாதை தொடங்கியது. முதலில் இலங்கை மக்கள் அருட்தந்தை அமலதாஸ் OMI தலைமையில் சிலுவைப் பாதை செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அருட்தந்தை ஜெர்மானுஸ் முத்து தலைமையில் இந்தியத் தமிழர்கள் சிலுவைப் பாதை தொடங்கினார்கள். அருட்தந்தையர்கள் ஜோசப் வலான்டின், சூசை, இஞ்ஞாசி சிலுவைப் பாதையில் மக்களை வழி நடத்திச் சென்றனர். மக்களும் மிகுந்த பக்தியொடும் சிரத்தையோடும் இதில் பங்கு கொண்டனர். மக்களுள் சில ஆடவரும் மகளிரும் காலில் செருப்பு கூட அணியாமலே கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்து சிலுவைப் பாதையில் கலந்கொண்டது நெஞ்சைப் பெரிதும் ஈர்த்தது.
இரவு 9 மணிக்குப் பேராலய பெரும் வளாகத்தில் அன்னையின் தேர்ப்பவனி. இங்கும் தமிழுக்கும் தமிழர்க்கும் முதலிடம். பவனியின் முதல் பகுதி அகில உலகத் தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அன்னையின் ஆளுயர திருஉருவத்துக்கு அகில உலகத் தமிழர்கள் சார்பாகப் புத்தம் புது மாலை சூட்டியவர்கள் இலங்கைத் தமிழர்கள். இதற்காக பரியிலிருந்து புது மாலை வரவழைக்கப்பட்டிருந்தது. தமிழர்கள் நால்வர் அன்னையின் திருத்தேரைத் தூக்கி வர நான்கு இளந்தமிழ்ப் பெண்கள் திருவிளக்கைத் தாங்கி வர, இளம் பெண்கள் மூவர் மலர்கள் தாங்கிய தட்டுகளை ஏந்தி வர, தேர்ப்பவனி சிறப்பாகத் தொடங்கியது.
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் நால்வர் ‘அருள்நிறைந்த மரியே வாழ்க’ என்ற மந்திரத்தை முழங்க, அகில உலகத் தமிழர்கள் தமிழில் பதில் உரைக்கப் பேராலய வளாகத்தில் நம் தமிழ் எதிரொலித்து முழங்கியது. அது போலவே, திரு செர்ழ் போன் பப்பா தலைமையில் தமிழர்களின் பாடற்குழு ‘வாழ்க மரியே’ பாடலையும், ‘மாதாவே துணை நீரே’ என்ற பாடலையும் அழகாக நிறுத்தி நிதானமாகப் பாட அகில உலகத் தமிழ் மக்கள், பதில் பாடல் பாட மறுபடி லூர்து நகர்த் திருத்தலத்தில் தமிழ் முழக்கம் விண்ணை முட்டியது.
மறுநாள் ஞாயிறு, 10.08.2008 காலை 09.30 மணிக்குப் பாப்பரசர் 10 ஆம் பத்திநாதர் நிலவறைப் பேராலயத்தில் பன்னாட்டுத் திருப்பலி. பல நாட்டுக் கொடிகள் பல ஊர்களின் மரியன்னை கொடிகள், பதாகைகள் முன்னே செல்ல இறுதியாக இந்திய, இலங்கை ஆன்மீகப் பணியகங்களின் கொடிகளும் வேளாங்கண்ணி மாதா, இலங்கையின் மடு மாதா பதாகைகளும் பின் தொடர ஆடம்பரப் பவனி தொடங்கியது. பவனியின் இறுதியில் தமிழ் நடனமணிகள் செல்விகள் ஆரோக்கிய மரி சேன் பிரி, லூர்து மரி சேன் பிரி வர, பின் தொடர்ந்து தமிழ் மகளிர், இளஞ்சிறுவர், சிறுமிகள், டாக்டர் சுரேஷ் தம்பதியர் என பலரும் வலம் வந்தனர். பிறகு திருப்பலியில் பங்கேற்கும் குருக்கள், ஆயர்கள் புடைசூழ திருப்பலியை நிறைவேற்ற வந்திருந்த இத்தாலியப் பேராயர் பவனியில் வந்தார்.
பேராயர் தம் அரியணையை அடைந்த உடன் திருமதி சாந்தா போன்பப்பாவும் இலங்கையைச் சேர்ந்த இன்னொரு பெண்மணியும் பேராயருக்கு மங்கல ஆரத்தி எடுத்து நம் முறைப்படி நெற்றித் திலகம் இட்டனர். பின்னர் திருப்பலி தொடங்கியது. பொதுவாக இத்தகைய பன்னாட்டுத் திருப்பலிகளில் நற்செய்தி பிரஞ்சு, ஆங்கிலம், வேறு ஏதாவது இரு மொழிகளில் வாசிக்கப்படும். இந்த ஆண்டு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐந்தாவது மொழியாகத் தமிழில் நற்செய்தி வாசிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனைச் சிறப்பாகப் படித்தவர் : தியாக்கோன் மரியஸ் பெசோன். மக்கள் மன்றாட்டுகளும் பல மொழிகளில் படிக்கப் பட்டன.
உலகம் நெடுக அமைதி நிலவவும், இலங்கை மக்கள் தம் தாயகம் திரும்பிப் புனர்வாழ்வு பெறவும் இறைவனை மன்றாடும் மன்றாட்டைப் பேராசிரியர் பெஞ்சமின் எழுதித் தர, அதனை அவர் துணைவியார் திருமதி லூசியா லெபோ எடுப்பான குரலில் கணீர் எனப் படிக்க, பேராலயத்தில் பைந்தமிழ் எதிரொலித்தது. காணிக்கை பவனிக்கு முன் 5 நிமிடங்கள் இறைவன் புகழ் பாடும் பாடலுக்குச் செல்விகள் ஆரோக்கிய மரி சேன் பிரி, லூர்து மரி சேன் பிரி பரத நாட்டிய முறைப்படி அபிநயம் பிடித்து நளினமாக ஆடி முடித்ததும் கைதட்டல்கள் நான்கு திசைகளிலும் எதிரொலித்தன.
சின்ன எழுந்தேற்றத்தின் போது இலங்கை தமிழர் பாடற்குழு, அருட்தந்தை அமலதாஸ் தலைமையில் அஞ்சலி பாட இந்திய, இலங்கை இளம்பெண்கள் 9 பேர் அழகாக ஆரத்தி எடுத்தனர். திருப்பலி நிறைவுற்றபின் அனைவரும் ஊர்வலமாகக் கெபிக்குச் சென்றனர். அப்போது நம் ஊர் முறைப்படி நாயனக்காரர்கள் இருவர் Avé Maria பாடலை நாதசுரத்தில் வாசிக்க, தவில்கள் இரண்டும் முழங்க, ஜால்ரா ஒலிக்க… லூர்து திருத்தலத்தில் குட்டித் தமிழ்நாடே ஊர்வலம் செல்வதாகத் தோன்றியது. இதனைப் பார்த்த வெளிநாட்டார் அனைவரும் வியப்போடு கண்டுகளித்தனர்.
இந்த அருமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர் இலங்கைத் தமிழர் திரு தாமஸ் அந்தோனிப்பிள்ளை. இப்பவனியில் நம் தமிழ் நடனமணிகளும் தமிழ் மகளிரும் வரிசைத் தட்டுகளுடன் கலந்துகொள்ள கண்டவர் அனைவரும் வியந்து பாராட்ட பன்னாட்டுத் திருப்பலி அன்னையின் கெபியில் முடிவடைந்தது.
மாலை 8 மணிக்கு நடை பெற்ற திவ்விய நற்கருணைப் பவனியிலும் நமக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அகில உலகத் தமிழர்கள் சார்பாக நம் சகோதரர்கள் பலர் பல பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சிகள் யாவற்றிலும் திருப்பீடத்தில் முன்னிலையில் நின்று பணியாற்றிய தமிழர்கள் இருவர் : தியாக்கோன் மரியூஸ் பெசோன், தியாக்கோன் தம்பி ஸ்தனிஸ்லாஸ்.
நோயாளிகள் மந்திரிப்புக்குப் பின் திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. பின்னர் வழியனுப்பு விழா. இதில் அருட்தந்தை ழொசே அன்தோனியொ அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் பரிசு ஒன்றை அளித்தார்கள். இந்தியத் தமிழர்கள் சார்பாகப் பணமுடிப்பு தரப்பட்டது.
இந்த மூன்று நாட்களின் போது, செல்வி பிரிழித் லெபோ, திருமதி லூசியா லெபோ, திரு மத்தியாஸ் போர், திரு வீனஸ் ராம்போ ஆகியோரின் அரும்பெரும் முயற்சிகளால் சிறிய கண்காட்சி ஒன்று நிறுவப்பட்டது. இதில் இந்தியப் பண்பாடுகள், மொழிகள், நடனங்கள், இந்தியத் திருச்சபை, அதன் தலைவர்கள், வேளாங்கண்ணி மாதா… போன்ற தகவல்கள் தரப்பட்டன. வெளிநாட்டவர் பலரும் ஆர்வமுடன் இதனைப் பார்வையிட்டு தம் கருத்துகளைப் பதிவு செய்து சென்றனர். இந்த மூன்று நாள் நிகழ்ச்சிகளைப் படங்களில் பதிவு செய்தவர் செல்வி பிரிழித் லெபோ. இந்தப் படங்களை இந்தியத் தமிழ் ஞானகத்தின் இணைய தளத்தில் http://www.aumonerietamouleindienne.org என்ற முகவரியில் காணலாம்.
இந்த அரும் நிகழ்ச்சிகளில் ஞானகத் தந்தை ஜெர்மானுஸ் முத்து தலைமையில் ஞானகப் பொறுப்பாளர்கள் திரு பல்தசார், திரு கிறிஸ்தியான் தெலோர், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, திரு செர்ழ் போன் பப்பா, திரு ழான் பேன்ழமென், திரு வீனஸ் ராம்போ முதலியோர் கலந்துகொண்டு செயல்பட்டனர். போக்குவரத்து, தங்கும் விடுதி, உணவு முதலிய ஏற்பாடுகளைத் திரு மரியதாஸ் நன்கு ஏற்பாடு செய்திருந்தார். நம் தமிழ் மக்கள் பேருந்து, கார், ரயில் வழியாகத் திரண்டு வந்திருந்தனர். அனைவருக்கும் லூர்து அன்னை தம் அருளை வாரி வழங்கினார்கள்.
தகவல் : புதுவை எழில்
படங்கள் : செல்வி பிரிழித் லெபோ
“