தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (17)

நமது நாட்டு ஓவியக் கலையை ஆராய்வோம். ஓவியத்துக்குச் சித்திரம் என்றும் பெயர் உண்டு. நேர்கோடு, வளைந்த கோடு, கோணக்கோடு முதலிய கோடுகளினாலும், சிவப்பு, கறுப்பு, மஞ்சள், நீலம் முதலிய நிறங்களினாலும் ஓவியங்கள் எழுதப்படுகின்றன.

ஓவியக் கலையின் பழைமை

சங்க காலத்திலே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஓவியக் கலை நமது நாட்டில் வளர்ச்சியடைந்திருந்தது என்பதற்குச் சங்க நூல்களிலே சான்றுகள் உள்ளன. நமது நாட்டு ஓவியங்கள் பெரும்பாலும் சுவர் ஓவியங்களே. அதாவது, சுவரிலே எழுதப்பட்ட ஓவியங்கள். சிறுபான்மை மரப்பலகைகளிலும், கிழி (துணிச்சீலை – Canvas) களிலும் எழுதப்பட்டன. படம் என்று இப்போது வழங்குகிற தமிழ்ச் சொல் ஆதிகாலத்தில் துணியில் சித்திரம் எழுதப்பட்டதைத் தெரிவிக்கின்றது. படம் அல்லது படாம் என்பது, சித்திரம் எழுதப்பட்ட துணிச்சீலை என்னும் பொருள் உடையது.

காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த உவவனம் என்னும் பூஞ்சோலையின் இயற்கைக் காட்சி, ஓவியன் ஒருவன் துணிச்சீலையில் அழகாக எழுதிய சித்திரப் படம் போல இருந்தது என்று மணிமேகலைக் காவியத்தில் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்:

"வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
யொப்பத் தோன்றிய உவவனம்"

என்பது அப்பகுதி.

சுவர் ஓவியம்

பண்டைக் காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின் மாளிகை, கோயில் மண்டபம் முதலிய கட்டடங்களின் சுவர்களில் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினார்கள். சுவர் ஓவியங்கள்தாம் பண்டைக் காலத்தில் பெரிதும் பயின்று வந்தன. ஒவ்வொரு அரசனுடைய அரண்மனையிலும் சித்திர மாடம் என்னும் கட்டடம் தனியே அமைந்திருந்தது. பாண்டியன் நன்மாறன் என்பவன், தனது சித்திர மாடத்திலே தங்கியிருந்தபோது அங்கே உயிர் நீத்தான். அதனால் அவன் பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புறநானூற்றில் கூறப்படுகிறான்.

பாண்டியனின் சித்திர மாடத்தை மாங்குடி மருதனார் என்னும் புலவர்,

"கயங்கண்ட வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து"

என்று கூறுகிறார்.1

"குளிர்ச்சியாற் கயத்தைக் கண்டார் போன்ற விளங்குதலையுடைய கோயிலிடத்து (அரண்மனையில்) செம்பாற் செய்தால் ஒத்த செவ்விய சுவர்களைச் சித்திரம் எழுதி" என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்.

நக்கீரர் பாடிய நெடுநல்வாடையிலும் பாண்டியனுடைய சித்திர மாடம் கூறப்படுகிறது.

"வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ
மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்

உருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பின் நல்லில்"

என்று அவர் சித்திர மாடத்தை வருணிக்கிறார்.

"வெள்ளியை யொத்து விளங்குகின்ற சாந்தை வாரி, நீலமணியைக் கண்டாற்போன்ற கருமையினையும் திரட்சியினையும் உடைய திண்ணிய தூண்களையுடையவாய், செம்பினாலே பண்ணினாலொத்த தொழில்கள் செய்தலுற்ற நெடிய சுவரிலே வடிவழகினை யுடைத்தாகிய பல பூக்களையுடைய வல்லி சாதியாகிய ஒப்பில்லாத கொடியை யெழுதிப் புதைத்த கருவோடே பெயர்பெற்ற காட்சிக்கினிய நன்றாகிய இல்" என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்.

பரங்குன்றத்துச் சுவர் ஓவியம்

மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்து மலையிலே முருகப்பெருமான் கோயிலைச் சார்ந்த ஒரு சித்திர மாடம் இருந்தது என்று குன்றம்பூதனார் என்னும் புலவர் கூறுகிறார்:

"நின் குன்றத்து
எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்."

"நின் குன்றத்தின்கண் எழுதிய அழகையுடைய அம்பலம், அம்பினது ஏத்தொழில் நிலைபெற்ற காமவேள் சிரமச்சாலையை (ஆயுதப் பயிற்சி செய்யுமிடம்) யொக்கும்" என்பது பரிமேலழகர் உரை.

இந்தச் சித்திர மாடத்தில் எழுதப்பட்டிருந்த சில ஓவியங்களை, நப்பண்ணனார் என்னும் புலவர் சற்று விளக்கிக் கூறுகிறார். முருகப் பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்தச் சித்திர மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள் என்றும், எழுதப்பட்டிருந்த சித்திரங்களில் காமன், இரதி, அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதம முனிவன், அவனைக் கண்ட இந்திரன் பூனையுருவங் கொண்டோடியது முதலிய ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன என்றும், இச்சித்திரங்களைக் கண்டவர் ‘இது என்ன, இது என்ன’ என்று அறிந்தவர்களைக் கேட்க, அவர்கள் இது இது இன்னின்ன சித்திரம் என்று விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் கூறுகிறார்:

"இரதி காமன்இவள்இவன் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை இவளக லிகைஇவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல வெழுத்துநிலை மண்டபம்"2

திருச்சி மாவட்டம், திருச்சி தாலுக்காவில் உள்ள திருவெறும்பூர் கோயிலைச் சார்ந்து சித்திரக்கூடம் என்னும் மண்டபம் பண்டைக் காலத்தில் இருந்த செய்தியைச் சாசனங்கள் தெரிவிக்கின்றன.3

–கலை வளரும்…

________________________________________
1.மதுரைக் காஞ்சி, 484 – 85.
2.S.I.I. Vol. XIII, No. 162, 138, 139.
3.பரிபாடல் 19 : 48-53

About The Author