கூத்து நூல்கள்
இப்பதினோர் ஆடல்களின் விவரங்களையும், அவற்றின் உறுப்புகளையும், அவற்றிற்குரிய பாடல்களையும், அப்பாடல்களுக்குரிய பக்கவாத்தியங்களையும், மற்ற செய்திகளையும் விளங்கக் கூறிய சில நூல்களும் பண்டைக் காலத்தில் இருந்தன என்று யாப்பருங்கலம் என்னும் நூலின் உரையாசிரியர் கூறுகிறார். அவர் எழுதுவது வருமாறு:1
வெண்டுறை. வெண்டுறைப் பாட்டாவன: பதினோராடற்கும் ஏற்ற பாட்டு. அவை அல்லியம் முதலியவும், பாடல்களாக ஆடுவாரையும், பாடல்களையும், கருவியையும் உந்து இசைப்பாட்டாய் வருவன…..
"இனி இவற்றினுறுப்பு ஐம்பத்து மூன்றாவன: அல்லிய உறுப்பு 6; கொடுகொட்டியுறுப்பு 4; குடையுறுப்பு 4; குடத்தினுறுப்பு 5; பாண்டரங்க உறுப்பு 6; பேட்டின் உறுப்பு 4; மரக்காலாடல் உறுப்பு 4; பாவையுறுப்பு 3 என இவை. இவற்றின் தன்மை செயிற்றியமும், சயந்தமும், பொய்கையார் நூலும் முதலியவற்றுட் காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும்."
இவற்றில் செயிற்றியம் என்பது செயிற்றியனார் என்பராலும், சயந்தம் என்பது சயந்தனார் என்பவராலும் செய்யப்பட்ட நூல்கள் போலும். பொய்கையார் செய்த கூத்த நூலின் பெயர் தெரியவில்லை. இந்தப் பொய்கையாரைப் பொய்கையாழ்வார் என்று கருதி மயங்கக்கூடாது.
விளக்கத்தனார் என்பவர் இயற்றிய விளக்கத்தார் கூத்து என்னும் நூலைப் பேராசிரியர் என்னும் உரையாசிரியரும் யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் தமது உரைகளில் குறிப்பிடுகிறார்கள். தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியலில், "சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து" என்னும் சூத்திரத்தின் உரையில், "அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன" என்று பேராசிரியர் எழுதுகிறார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் 40ஆம் சூத்திர உரையில் இந்நூலைக் குறிப்பிடுகிறார்.
மதிவாணனார் என்பவர் இயற்றிய நாடகத் தமிழ் என்னும் நூலிலும் இந்தப் பதினோர் ஆடல்களும் கூறப்பட்டிருந்தன என்பது தெரிகிறது. மதிவாணனார் நாடகத் தமிழ் நூலை, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டு, அந்நூல் சூத்திரம் ஒன்றையும் மேற்கோள் காட்டுகிறார்.2
செயன் முறை என்னும் நாடகத் தமிழ் நூல் ஒன்று இருந்தது. இந்நூலை யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.3 இந்நூலிலும் கூத்துகளைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்க வேண்டும்.
குரவைக் கூத்து
கூத்துக்களில் குரவைக் கூத்து என்னும் கூத்தும் உண்டு. அது மகளிர் ஆடுவது. எழுவர், எண்மர், ஒன்பதின்மர் மகளிர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுவது.
"குரவை என்பது எழுவர் மங்கையர்
செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்
தந்நிலைக் கொட்பநின் றாட லாகும்"
என்பது சூத்திரம். இது வரிக்கூத்துகளில் ஒன்று. குரவைக் கூத்து குன்றக் குரவை என்றும், ஆய்ச்சியர் குரவை என்றும் இருவகைப்படும்.
குன்றக் குரவை என்பது குறமகளிர் (குறிஞ்சி நிலத்தில் வாழ்பவர்) முருகனுக்காக ஆடும் கூத்து. இதற்குரிய பாடல்களைச் சிலம்பு, வஞ்சிக் காண்டத்தில் குன்றக் குரவையில் காண்க.
ஆய்ச்சியர் குரவை என்பது ஆயர் மகளிர் (முல்லை நிலத்தில் வாழ்வோர்) திருமாலுக்காக ஆடும் கூத்து.
தரையில் வட்டம் வரைந்து அதனைப் பன்னிரண்டு அறைகளாகப் பங்கிட்டு, குரவை ஆடும் மகளிரை அவ்வறைகளில் நிறுத்தி, அவருக்கு முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று எழுவருக்கு மட்டும் ஏழு பெயரிட்டு இசைபாடி ஆடுவது. இது இசையும் கூத்தும் பொருந்தி ஆடப்படும் இனிய ஆடல் என்று தோன்றுகிறது. இவ்வாடலுக்குரிய குரவைச் செய்யுள்களையும் சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவையில் காணலாம். இது பற்றி ஆழ்ந்து ஆராய விரும்புவோர் அங்குக் காண்பாராக.
–கலை வளரும்…
________________________________________
1.யாப்பருங்கலம், ஒழிபியல், விருத்தியுரை.
2.சிலம்பு. கடலாடு காதை, 35ஆம் வரி உரை மேற்கொள்.
3.செய்யுளியல், 29ஆம் சூத்திர உரை.