கட்டட அமைப்பும் உறுப்புகளும்
கோயிற் கட்டட அமைப்பைப் பற்றியும் அவற்றின் உறுப்புகளைப் பற்றியும் ஆகம நூற்களிலும் சிற்ப சாஸ்திரங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் கட்டடக் கலையின் பொதுவான செய்திகளை மேலோட்டமாகக் கூறுகிறபடியால், அவற்றைப் பற்றிய விரிவான செய்திகளை இங்குக் கூறவில்லை. முக்கியமான சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.
கோயிற் கட்டடத்தில் ஆறு உறுப்புகள் உண்டு. அவையாவன: 1. அடி; 2. உடல்; 3. தோள்; 4. கழுத்து; 5. தலை; 6. முடி.
இந்தப் பெயர்களுக்குச் சிற்ப நூலில் வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. அப்பெயர்களாவன: 1. அதிஷ்டானம்; 2. பாதம்; 3. மஞ்சம்; 4. கண்டம்; 5. பண்டிகை; 6. ஸ்தூபி. இவற்றை விளக்குவோம்.
1. அடி அல்லது தரையமைப்பு. இதற்கு அதிஷ்டானம், மசூரகம், ஆதாரம், தலம், பூமி முதலிய பெயர்கள் உண்டு.
2. உடல் அல்லது திருவுண்ணாழிகை. இதற்குக் கால், பாதம், ஸ்தம்பம், கம்பம் முதலிய பெயர்கள் சிற்ப நூலில் கூறப்படுகின்றன. இப்பெயர்கள் திருவுண்ணாழிகையின் (கருவறையின்) சுவர்களைக் குறிக்கின்றன.1
3. தோள் அல்லது தளவரிசை. இதற்குப் பிரஸ்தரம், மஞ்சள், கபோதம் முதலிய பெயர்கள் உள்ளன.
4. கழுத்து. இதற்குக் கண்டம், களம், கர்ணம் முதலிய பெயர்கள் உண்டு.
5. தலை அல்லது கூரை. இதற்குப் பண்டிகை, சிகரம், மஸ்தசம், சிரம் முதலிய பெயர்கள் உள்ளன.
6. முடி அல்லது கலசம். இதற்கு ஸ்தூபி, சிகை, குளம் முதலிய பெயர்கள் உண்டு.
கோயிற் கட்டடத்தில் அமைய வேண்டிய இந்த ஆறு உறுப்புக்களுக்கும் சில அளவுகள் உள்ளன. அந்த அளவுகளையெல்லாம் தீர ஆராய வேண்டியதில்லை. ஆனால் பொதுவான அளவை மட்டும் தெரிந்து கொள்வோம்.
அந்த அளவுகளாவன:
1. அடி அல்லது அதிஷ்டானத்தின் உயரம் 1 பங்கு.
2. உடல் அல்லது பாதத்தின் உயரம் 2 பங்கு.
3. தோள் அல்லது மஞ்சத்தின் உயரம் 1 பங்கு.
4. கழுத்து அல்லது கண்டத்தின் உயரம் 1 பங்கு.
5. தலை அல்லது பண்டிகையின் உயரம் 2 பங்கு.
6. முடி அல்லது ஸ்தூபியின் உயரம் 1 பங்கு.
இந்த அளவு ஒருநிலையையுடைய சாதாரணக் கோயில்களுக்காகும். இதுவன்றி, வேறு சில அளவுகளும் ஒருநிலைக் கோயிலுக்கு உண்டு.
இரண்டு நிலை மாடக்கோயிலின் அமைப்பு:- 1. தரை, 2. சுவர், 3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. கழுத்து, 7. கூரை, 8. கலசம் என அமையும்.
மூன்று நிலை மாடக்கோயிலின் அமைப்பு:- 1. தரை, 2. சுவர், 3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. சுவர், 7. தளவரிசை, 8. கழுத்து, 9. கூரை, 10. கலசம் என இவ்வாறு அமையும். கோயிற் கட்டடத்தின் பல்வேறு அமைப்புகளைச் சிற்ப நூலில் கண்டு கொள்க.
கோயில் கட்டடங்கள் கட்டப்படும் பொருள்களைக் கொண்டு அவை மூன்று பெயர்களைப் பெறுகின்றன. அவை சுத்தம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்பன. முழுவதும் மரத்தினாலோ, செங்கல்லினாலோ அல்லது கருங்கல்லினாலோ கட்டப்பட்ட கோயில்களுக்குச் சுத்த கட்டடம் என்றும், இரண்டு பொருள்களைக் கலந்து அமைக்கப்பட்ட கோயில்களுக்கு மிஸ்ர கட்டடம் என்றும், இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களால் கட்டப்பட்ட கோயில்களுக்குச் சங்கீர்ணம் என்றும் பெயர்கள் கூறப்படுகின்றன.
–கலை வளரும்…
1. திருவுண்ணாழிகைக்கு அகநாழிகை என்றும் பெயர் உண்டு.
“