தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (6)

மாடக்கோயில்கள்

மாடக்கோயில்கள் என்றால், மாடிபோல் அமைந்த கோயில்கள் என்பது பொருள். ஒன்றின்மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளையுடைய மாடக்கோயில்களைச் சிற்ப நூல்கள் கூறுகின்றன. இக்காலத்தில் இரண்டு நிலை, மூன்று நிலையுள்ள மாடக்கோயில்கள்தாம் இருக்கின்றன. மாடக் கோயில்கள், பல்லவர் காலத்துக்கு முன்பே, அதாவது, கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இருந்தன. ஆனால், அக்காலத்து மாடக்கோயில்கள் செங்கல்லினால் அமைக்கப்பட்டவை. ஆகவே, அவை இக்காலத்தில் நிலை பெற்றிருக்கவில்லை. அக்காலத்திலேயே அழிந்து விட்டன.

சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து மைலில் உள்ள திருநாங்கூர் திருமணி மாடக்கோயிலைத் திருமங்கை ஆழ்வார் தமது பெரிய திருமொழியில் கூறுகிறார். இன்னொரு மாடக்கோயிலாகிய திருநறையூர் மாடக்கோயிலையும் திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார். அதனைச் சோழன் செங்கணான் கட்டியதாகவும் கூறுகிறார்.

செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

என்று அவர் கூறியது காண்க. திருநறையூருக்கு இப்போது நாச்சியார் கோயில் என்று பெயர் கூறுகிறார்கள்.

திருவைகல் என்னும் ஊரில் இருந்த ஒரு மாடக் கோயிலைத் திருஞானசம்பந்தர் கூறுகிறார். திருவைகல் மாடக்கோயில் என்பதே அக்கோயிலின் பெயராக இருந்தது. அதனைக் கட்டியவரும் செங்கட் சோழன்1 என்று ஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகிறார்.

இந்த மாடக்கோயில்களைச் சோழன் செங்கணான் கட்டியதாக ஆழ்வாரும் நாயனாரும் கூறுகிறபடியினாலே, இவை கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னே கட்டப்பட்டவை என்றும், இவை செங்கல்லினால் கட்டப்பட்டவை என்றும் தெரிகின்றன. ஆனால், இந்த மாடக் கோயில்கள் எத்தனை நிலையை (மாடிகளை)க் கொண்டிருந்தன என்பது தெரியவில்லை. மூன்று நிலை மாடக் கோயில்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

மாமல்லபுரத்து மாடக்கோயில்கள்

கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த செங்கற் கட்டடங்களாலான மாடக் கோயில்களின் மாதிரியைப் பல்லவ அரசனான நரசிம்மவர்மன் (மாமல்லன்) மாமல்லபுரமாகிய மகாபலிபுரத்திலே கருங்கல்லினால் அமைத்திருக்கிறான். அவை இரண்டு நிலை, மூன்று நிலையுள்ள மாடக்கோயில்கள் மாதிரி 2 ஆகும்.

அர்ச்சுனன் இரதம் என்று இப்போது தவறாகப் பெயர் வழங்கப்படுகிற கோயில், இரண்டு நிலை (இரண்டு அடுக்கு) மாடக்கோயிலின் அமைப்பு ஆகும். தருமராஜ இரதம் என்று தவறாகப் பெயர் வழங்குகிற இன்னொரு மாடக்கோயில் மூன்று நிலையுள்ள மாடக்கோயிலின் அமைப்பு ஆகும்.3

சகாதேவ இரதம் என்பதும் மூன்று நிலையுடைய மாடக்கோயிலின் அமைப்பு ஆகும். இந்த மாடக்கோயில்களின் அமைப்பைக் கருங்கற் பாறையில் அமைத்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் ஆகும். இவை பழைய செங்கற் கட்டடங்களாலாய மாடக்கோயில்களின் உருவ அமைப்புடையவை.

வேறு மாடக்கோயில்கள்

கற்றளியாக4 அமைக்கப்பட்டு இப்போதும் வழிபாட்டில் உள்ள மாடக்கோயில்கள் இரண்டு உள்ளன. அவை காஞ்சிபுரத்தில் உள்ள பரமேச்சுர விண்ணகரமும், உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் ஆலயமும் ஆகும். காஞ்சிபுரத்துப் பரமேச்சுர விண்ணகரத்தை இப்போது வைகுண்டப் பெருமாள் கோயில் என்று கூறுவார்கள். இக்கோயிலைப் பரமேசுவர வர்மன் என்னும் பல்லவ அரசன் கி.பி 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டினான். இதனைத் திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். இது மூன்று நிலையுள்ள மாடக்கோயில். ஆனால், இரண்டாவது மாடிக்கு மட்டும் படிகள் உள்ளன. மூன்றாவது மாடிக்குப் படிகள் இல்லை. பண்டைக் காலத்தில் மரப்படிகள் அமைந்திருந்தன போலும்; இப்போது மரப்படிகளும் இல்லை. இது மூன்று நிலை மாடக்கோயில் ஆகும்.

உத்தரமேரூர் மாடக்கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும். இதனைக் கட்டியவன் நந்திவர்ம பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன். இவன் கி.பி 730 முதல் 795 வரையில் அரசாண்டான். எனவே இக்கோயில் கி.பி.8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலைக் கட்டிய பல்லவனுடைய உருவச் சிற்பமும் இக்கோயிலில் இருக்கிறது.

–கலை வளரும்…

________________________________________
1. செங்கணான்
2. மாதிரி = Model
3. தருமராஜ இரதம் என்பதற்குப் பழைய பெயர் அத்யந்தகாம பல்லவேச்சரம் என்பது.
4. கற்றளி = கல் + தளி. (தளி = கோயில்).

About The Author