தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (5)

மூன்று வகைப் பிரிவுகள்

பாரத (இந்திய) நாட்டுக் கட்டடங்களைச் சிற்பக் கலைஞர், மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை நாகரம், வேசரம், திராவிடம் என்பன.

இவற்றில் நாகரம் என்பது வட இந்தியக் கட்டடம். இது நருமதை ஆற்றுக்கு வடக்கே வட இந்தியாவில் அமைக்கப்பட்டவை. அடிமுதல் முடிவரையில் நான்கு பட்டையாக (சதுரமாக) அமைக்கப்படுவது இது. இது தமிழ்நாட்டில் இடம் பெறவில்லை. ஆகவே, இது நமது ஆராய்ச்சிக்கு உட்படவில்லை.

இரண்டாவதான வேசரம் என்னும் பெயருள்ள கட்டடவகை, பண்டைக் காலத்தில் பெரிதும் பௌத்த மதத்தாரால் வளர்ச்சி அடைந்ததாகத் தோன்றுகிறது. இந்த வேசரக் கட்டடங்கள், தரை அமைப்பிலும், உடல் (கட்டட) அமைப்பிலும், விமான (கூரை) அமைப்பிலும் வட்டவடிவமாக அல்லது நீண்ட அரை வட்டவடிவமாக இருக்கும். இந்தக் கட்டட அமைப்பு முறை, தமிழ்நாட்டுக் கோயிற்கட்டட அமைப்பு சிலவற்றில் இடம்பெற்றுள்ளது. இதைப் பற்றிப் பின்னர் அதற்குரிய இடத்தில் கூறுவோம்.

மூன்றாவது பிரிவான திராவிடம் என்னும் பிரிவு தென் இந்தியக் கோயிற் கட்டடங்களாகும். இவை வடக்கே கிருஷ்ணா நதிமுதல் தெற்கே கன்னியாகுமரி வரையில் காணப்படுகின்றன. திராவிடக் கோயிற் கட்டட வகையில் தமிழர், சளுக்கியர், ஹொய்சளர் முதலிய உட்பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவுகளை விடுத்துத் தமிழ்நாட்டுக் கோயில்களை மட்டும் ஆராய்வோம். தமிழ்நாட்டுக் கோயில்களிலும் பல்லவர் காலத்துக் கோயில்கள், (பிற்காலச்) சோழர் காலத்துக் கோயில்கள், பாண்டியர் காலத்துக் கோயில்கள், விஜயநகர அரசர் காலத்துக் கோயில்கள் என்று உட்பிரிவுகள் உள்ளன. அப்பிரிவுகளைத் தூண்கள், கூடுகள் முதலிய அமைப்புகளிலிருந்து கண்டுகொள்ளலாம். நாம் இங்கு ஆராயப் புகுவதெல்லாம் தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிய பொதுவான அமைப்புப் பற்றிய மேற்போக்கான செய்திகளையேயாகும்.

கோயில்களின் தரையமைப்பு

பொதுவாக எல்லா இந்துக் கோயிலும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கும். சில கோயில்கள் தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் அபூர்வமாக இருப்பதுண்டு. பொதுவாகக் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே கோயில்களை அமைப்பது வழக்கம்.

கோயிற் கட்டடத்தின் தரையமைப்பு, அக நாழிகையை (கர்ப்பக்கிருகத்தை)யும் அதன் முன்புறத்தில் சிறிய இடைகழியையும் உடையது. கர்ப்பக்கிருகத்தைச் சார்ந்த இடைகழிக்கு இடைநாழிகை (அர்த்த மண்டபம்) என்பது பெயர். அகநாழிகை (கர்ப்பக்கிருகம்) பெரும்பாலும் சதுரமான அமைப்புடையது. சில அகநாழிகைகள் நீண்ட சதுரமாக இருப்பதும் உண்டு. சில அகநாழிகைகள் நீண்ட அரைவட்டமாக அமைந்திருக்கும். மிகச் சில, வட்ட வடிவமாக இருக்கும்.

படவிளக்கம்

1. திருவுண்ணாழிகை (அகநாழிகை)யும் இடைநாழிகையும், சதுர அமைப்பு திருவுண்ணாழிகைக்குக் கருப்பக்கிருகம் என்றும், இடைநாழிகைக்கு அர்த்த மண்டபம் என்றும் பெயர்கள் வழங்குகின்றன.

2. வட்டவடிமான அகநாழிகை, காஞ்சிபுரத்துச் சுரகரீசுவரர் கோயிலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த நார்த்தா மலை, மேல்மலையில் உள்ள விஜயாலய சோழீசுவரமும், மதுரையை அடுத்த கள்ளழகர் கோயிலும் இவ்விதத் தரையமைப்பையும் உடலமைப்பையும் கொண்டவை.

3. பாறைக் கோயிலின் தரையமைப்பு, மகேந்திர வர்மன் காலத்துக் குகைக்கோயில்கள் எல்லாம் பொதுவாக இந்த அமைப்பையுடையன.

4. நீண்ட சதுரமுள்ள அகநாழிகை. யானைக் கோயிலின் தரையமைப்பு.

5. நீண்ட அரைவட்டமுள்ள அகநாழிகை அமைப்பு. மாமல்லபுரத்துக் கணேச ரதம் முதலியவை.

6. பனைமலையில் (தென் ஆர்க்காட்டு மாவட்டம், விழுப்புரம் தாலுக்கா) உள்ள பல்லவர் காலத்துக் கோயிலின் தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்த நாற்புறமும் அகநாழிகைகள் இருக்கின்றன.

7. காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்) தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு அகநாழிகைகள் அமைந்துள்ளன.

காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலிலும் பனைமலைக் கோயிலிலும் கருவறையைச் சார்ந்து வேறு சில கருவறைகளும், அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் விதிவிலக்காக, அபூர்வமாக ஏற்பட்டவை.

பல்லவ அரசர் காலம் வரையில். திருவுண்ணாழிகையும் இடைநாழிகையும் (கருவறையும், அர்த்தமண்டபமும்) ஆகிய கட்டடங்களே அமைக்கப்பட்டன. இவற்றைச் சூழ்ந்து வேறு மண்டபங்கள் பெரும்பாலும் அமைக்கப்படவில்லை.

கி. பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சோழ அரசர்கள் கருவறையைச் சுற்றிலும் மண்டபங்களை அமைத்தனர். அன்றியும், அர்த்த மண்டபத்துக்கு முன்பு இன்னொரு மகா மண்டபத்தையும் அமைத்தனர். ஏனென்றால், 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய மூர்த்தங்களை அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு அகநாழிகையைச் சூழ்ந்து சுற்று மண்டபங்களை அமைத்தபடியினாலே, அம்மண்டபங்கள், மத்திய கோயிலின் பார்வையையும் அழகையும் மறைத்துவிட்டன. சில இடங்களில் மத்திய கோயிலின் விமானம் தெரியாதபடி மறைத்துவிட்டன. அன்றியும், கோயிலுக்குள் வெளிச்சம் புகாதபடி செய்து, பட்டப்பகலிலும் கோயிலில் இருள் நிறைந்துவிட்டது. நமது கோயில்களில் பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்திருப்பதன் காரணம், இந்தச் சுற்று மண்டபங்களே ஆகும்.

–கலை வளரும்…

About The Author