சுவர் உறுப்புகள்
இனி, திருவுண்ணாழிகை (கருவறை)யின் சுவரின் வெளிப்புறத்தில் அமைக்கப்படும் உறுப்புகளைப் பற்றிக் கூறுவோம்.
கருவறைக்கு முன்புறத்தில் அதைச் சார்ந்து சிறிய இடைகழி ஒன்று உண்டு. இதற்கு இடைநாழிகை (அர்த்த மண்டபம்) என்பது பெயர். இடைநாழிகை கருவறையின் ஒரு பகுதியேயாகும். அர்த்த மண்டபத்தின் வாயிலில் இருபுறத்திலும் துவாரபாலகர் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
கோஷ்ட பஞ்சரம்
திருவுண்ணாழிகை என்னும் கருவறைச் சுவரின் வெளிப் புறத்திலும், அர்த்த மண்டபச் சுவரின் (இடைநாழிகையின்) வெளிப் புறத்திலும் கோஷ்ட பஞ்சரம், கும்ப பஞ்சரம் என்னும் உறுப்புகள் அமைக்கப்படுவது வழக்கம். கருவறையின் வெளிப்புறச்சுவர்களில், பின்புறச் சுவரில் ஒன்றும் வலப்புற இடப்புறச் சுவர்களில் ஒவ்வொன்றும் ஆக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும், கருவறையைச் சேர்ந்துள்ள அர்த்த மண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களில் ஒவ்வொன்றும் ஆக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும், கருவறையைச் சேர்ந்துள்ள அர்த்த மண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களின் வெளிப்புறத்தில் ஒவ்வொன்றும் ஆக இரண்டு கோஷ்ட பஞ்சரங்களும் ஆக ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள் அமைக்கப்படும்.
கோஷ்ட பஞ்சரம் என்பது சிற்ப வேலைகள் அமைந்த மாடங்கள் ஆகும். கோஷ்ட பஞ்சரம் என்னும் இம்மாடங்களிலே கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவ மூர்த்தி, பிரமன், நாராயணி (கொற்றவை) உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோஷ்ட பஞ்சரங்களிலே இந்த தெய்வ உருவங்களை அமைக்கும் வழக்கம் சோழர் காலத்திலே கி.பி 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், பல்லவர் காலத்துக் கோயில்களிலே கோஷ்ட பஞ்சரங்களில் இத்தெய்வ உருவங்கள் அமைக்கப்படவில்லை.
கும்ப பஞ்சரம்
கோஷ்ட பஞ்சரங்களுக்கு இடையே கும்ப பஞ்சரம் என்னும் சிற்ப உறுப்பு அமைக்கப்பட்டிருக்கும். கும்ப பஞ்சரம் என்பது அடியில் குடம் போன்றதும், மேலே கொடிச்சிற்ப வேலையமைந்ததும் ஆன சிற்ப வேலையாகும். இவற்றின் அமைப்புகளைப் படத்தில் காண்க.
தோள் உறுப்புகள்
தோள் என்னும் பிரஸ்தரத்தின் மேலே கர்ண கூடு, பஞ்சரம், சாலை என்னும் உறுப்புகள் உண்டு. கர்ணகூடு என்பது பிரஸ்தரத்தின் கடைசி மூலையில் அமைக்கப்படும் உறுப்பு. சாலை என்பது பிரஸ்தரத்தின் மத்தியில் அமைக்கப்படும். பஞ்சரம் என்பது கர்ண கூட்டுக்கும் சாலைக்கும் இடையில் அமைக்கப்படுகிற சிற்றுறுப்பு.
இனி, பண்டைக் காலத்திலிருந்து நாளடைவில் கோயில்கள் கட்டட அமைப்பில் எப்படி வளர்ச்சியடைந்தன என்பதைக் கூறுவோம்.
–கலை வளரும்…
படங்கள்: நன்றி தமிழ் இணையக் கல்விக்கழகம்
“