கோயிலின் வகைகள்
கடவுள் அல்லது தெய்வங்கள் எழுந்தருளியிருக்கும் திருவுண்ணாழிகைக்கு விமானம் என்று பெயர். இந்த விமானங்களின் வெவ்வேறு விதமான அமைப்பைக் கொண்டு இவற்றிற்கு வெவ்வேறு பெயர்
கூறுவர். முக்கியமாகக் கூரையின் அமைப்பைக் கொண்டு அவைகளுக்கு வெவ்வேறு பெயர்களைக் கூறுகிறார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள் தமது திருஅடைவு திருத்தாண்டத்தின் 5ஆம் செய்யுளில், கோயில் கட்டட வகைகளின் பெயர்களைக் கூறுகிறார். அச்செய்யுள் இது:
"பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டு மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே."
இப்பாடலிலே, சோழன் செங்கணான் கட்டிய எழுபத்தெட்டுக் கோயில்களைக்
கூறிய பின்னர், கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்று சில வகையான கோயில்களைக் கூறுகிறார்.
சிற்ப நூல்கள் விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம், கேசரம் என்னும் ஏழு விதமான கோயில்களைக் கூறுகின்றன. காமிகாகமமும் இப்பெயர்களைக் கூறுகிறது.
திருநாவுக்கரசு சுவாமிகள் தமிழ்ப் பெயரால் கூறுகிறதையே சிற்ப நூல்கள் வடமொழிப் பெயரினால் கூறுகின்றன. பெயர் வேற்றுமையே தவிரப் பொருள் வேற்றுமை இல்லை. எந்தெந்தக் கோயில்களுக்கு எந்ததெந்தப் பெயர் என்பதற்குச் சிற்ப நூல்களில் விளக்கம் கூறப்படுகின்றன. ஆனால், திருநாவுக்கரசர் கூறுகிற பெயர்களுக்கு விளக்கம் இப்போது தெரியாதபடியினாலே, அவை எந்தெந்தக் கோயிலின் பெயர்கள் என்பது தெரியவில்லை. இதைக் கண்டறிய வேண்டியது நமது நாட்டுச் சிற்பக் கலைஞர்களின் கடமையாகும். ஆயினும், நம்மால் இயன்ற அளவு இதனை ஆராய்வோம்.
ஆலக்கோயில்
முதலில், ஆலக்கோயில் என்று திருநாவுக்கரசர் கூறிய கோயிலை ஆராய்வோம். ஆலக்கோயில் என்பது ஆனைக்கோயில் என்பதன் மரூஉ. சிலர் ஆலமரத்தினால் கட்டப்பட்ட கோயில் என்று
கருதுகிறார்கள். இது தவறு. ஆலமரம், கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற உறுதியான மரம் அன்று. ஆலமரத்தினால் கட்டடம் கட்டும் வழக்கம் இல்லை. வேறு சிலர் ஆலமரத்தின்கீழ் அமைந்த கோயில் என்று கருதுகிறார்கள். இதுவும் தவறு. ஆலக்கோயில் என்பது கோயிற் கட்டட வகைகளில் ஒன்றென்பது தெளிவானது. ஆலக்கோயிற் கட்டடம், மேலே கூறியது போல ஆனைக்கோயில் வடிவமாக இருக்கும். சிற்ப சாஸ்திரங்களில் இக்கோயில் கஜபிருஷ்ட விமானக் கோயில் என்றும், ஹஸ்திபிருஷ்ட விமானக் கோயில் என்றும் கூறப்படுகிறது. கஜம், ஹஸ்தி என்னும் சொற்களுக்கு யானை என்பது பொருள். யானையின் முதுகு போன்று இந்தக் கோயிலின் கூரை அமைந்திருப்பதனால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. தமிழிலே இது யானைக் கோயில் என்று வழங்கப்பட்டுப் பிறகு ஆலக்கோயில் என்று மருவிற்று. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கச்சூர் ஆலக்கோயிலைக் கூறுகிறார்.
திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு, திருக்கழுக்குன்றத்துப் பக்தவத்சல ஈசுவரர் கோயில், திருவானைக்கா முதலியவை ஆலக்கோயில் எனப்படும் கஜபிருஷ்டவிமானக் கோயில்கள் ஆகும். மகாபலிபுரத்துச் சகாதேவ ரதம் என்னும் கோயிலும் மூன்று நிலையுள்ள மாடக்கோயிலாக அமைந்த ஆலக் கோயிலாகும்.1
இளங்கோயில்
இளங்கோயில் என்பதனைச் சிலர் பாலாலயம் என்று கூறுவர். பழைய கோயிலைப் புதுப்பிக்கிறபோது, கோயில் திருப்பணி முடிகிறவரையில் அக்கோயில் மூலவிக்கிரகத்தைத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு கட்டடத்தில் வைத்திருப்பார்கள். இந்தத் தற்காலிகமான ஆலயத்திற்குப் பாலாலயம் என்பது பெயர். ஆனால், திருநாவுக்கரசர் கூறுகிற இளங்கோயில் பாலாலயம் அன்று; கோயிற் கட்டட வகைகளில் ஒன்றைத்தான் இளங்கோயில் என்று கூறுகிறார். சிலர், இளங்கோயில் என்பது முருகன் கோயிலுக்குப் பெயர் என்று கூறுவர். இதுவும் சரியன்று.
இளங்கோயிலைப் பற்றித் தேவாரத்திலும் சாசனங்களிலும் கூறப்படுகிறது. சோழநாட்டு மீயச்சூர் கோயில் இளங்கோயில் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். மீயச்சூர் என்பது இப்போது பேரளம் என்று வழங்கப்படுகிறது. "கடம்பூர் இளங்கோயிலிலும் கயிலாய நாதனையே காணலாமே" என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். ஆகவே, கடம்பூர்க் கோயிலும் இளங்கோயில் எனத் தெரிகிறது. (கடம்பூர்க் கோயிலில் கரக்கோயிலும் உண்டு. கடம்பூர்க் கரக்கோயிலைத் திருநாவுக்கரசரே வேறு இடத்தில் கூறுகிறார். கடம்பூர்க் கோயிலிலே கரக்கோயில், இளங்கோயில் என்னும் இரண்டுவகையான கட்டடங்களும் உள்ளன.)
பூதத்தாழ்வார் தமது இரண்டாந்திருவந்தாதியில்2 ‘வெள்ளத் திளங்கோயி’லைக் கூறுகிறார். இராஜராஜன் காலத்துச் சாசனம் ஒன்று கடம்பூர் இளங்கோயிலைக் குறிப்பிடுகிறது.3 திருச்சி மாவட்டம் குளித்தலைத் தாலுகா இரத்தினகிரி என்னும் ஊரில் உள்ள சாசனம், பாண்டியன் ஜடாவர்மன் ஆன திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியத் தேவர் (கி. பி. 1254 – 1264) காலத்தில் எழுதப்பட்டது. இதில், திருவாலீசுரமுடைய நாயனார், திருக்கயிலாயமுடைய நாயனார் என்னும் இரண்டு கோயில்களும் இளங்கோயில்கள் என்று கூறப்படுகின்றன.4
சித்தூர் மாவட்டம் சந்திரகிரி தாலுக்கா திருச்சோகினூரில் இருந்த ஒரு கோயில் இளங்கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. இக்கோயிலில் இருந்த கடவுளுக்குத் திரு இளங்கோயில் பெருமானடிகள் என்று பெயர் இருந்தது. இக்கோயில் சில காலத்துக்கு முன்னர் இடிக்கப்பட்டது.
நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் உள்ள ஒரு வடமொழிச் சாசனம் எளங்கோயில் ஒன்றைக் கூறுகிறது. இளங்கோயிலைத்தான் இந்த வடமொழிச் சாசனம் எளங்கோயில் என்று கூறுகிறது.5 சிலர் கருதுவதுபோல் இளங்கோயில் பாலாலயமாக இருந்தால், இந்த வடமொழிச் சாசனம் வடமொழிச் சொல்லாகிய பாலாலயம் என்பதையே கூறியிருக்கும். ஆனால், இளங்கோயில் என்று கூறுகிறபடியால்,இளங்கோயில் பாலாலயம் அன்று என்பதும், கோயில் அமைப்பில் ஒரு வகையானது என்றும் ஐயமறத் தெரிகிறது.
தமிழில் இளங்கோயில் என்று கூறப்படுவதும், சிற்ப நூல்களில் ஸ்ரீகரக் கோயில் என்று கூறப்படுவதும் ஒரே விதமான கட்டடம் என்று தோன்றுகிறது. ஸ்ரீகரம் என்னும் கட்டடம் நான்கு பட்டையான விமானத்தை(சிகரத்தை) உடையது என்று காமிகாகமமும் சிற்ப நூல்களும் கூறுகின்றன. மகாபலிபுரத்துத் திரௌபதையம்மன் இரதம் என்று இப்போது தவறாகப் பெயர் வழங்கப்படுகிற கொற்றவை கோயில் அமைப்பு, ஸ்ரீகரம் என்னும் அமைப்புடையது. இளங்கோயில் என்பதும் இதுவாக இருக்கக்கூடும்.
கரக்கோயில்
திருக்கடம்பூர் கோயில் அமைப்பு கரக்கோயில் அமைப்பு என்று திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் கூறியிருக்கிறார். (திருக்கடம்பூர் கோயிலில் இளங்கோயிலும் ஒன்று உண்டு.) சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கடம்பூர்க் கரக்கோயிலைக் குறிப்பிடுகிறார்.6
கரக்கோயிலைக் கற்கோயில் என்னும் சொல்லின் திரிபு என்று சிலர் கருதுவது தவறு. கரக்கோயில் என்பது கோயில் வகையில் ஒரு விதத்தைக் குறிக்கிறது. விஜயம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டட அமைப்பு, கரக்கோயிலாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. வட்டமான விமானத்தை (சிகரத்தை) உடைய கோயிற் கட்டடத்திற்கு விஜயம் என்று சிற்ப நூல்கள் பெயர் கூறுகின்றன.
ஞாழற் கோயில்
ஞாழற் கோயில் என்பதைக் குங்கும மரத்தினால் அமைக்கப்பட்ட கோயில் என்று சிலர் கூறுவர். இது தவறு. ஞாழல் என்று குங்கும மரத்திற்குப் பெயர் உண்டு. ஆனால், ஞாழல் மரத்தினால் அமைக்கப்பட்ட கோயிலுக்கு ஞாழற் கோயில் என்று கூறுவது தவறு. அப்படியானால், ஏனைய மரங்களினாலே அமைக்கப்பட்ட கோயில்களுக்கு அந்தந்த மரங்களின் பெயர் அமைய வேண்டுமல்லவா? அப்படிப் பெயர் இல்லாதபடியினாலே, ஞாழல் மரத்தினாலே கட்டப்பட்ட கோயில் என்று கூறுவது தவறு. ஞாழற்கோயில் என்பது கோயில் வகையில் ஒரு வகையாகும்.
இந்தக் கோயிலின் அமைப்பு எப்படி இருக்கும் என்று இப்போது கண்டறிய முடியவில்லை.
கொகுடிக் கோயில்
கொகுடி என்பது ஒரு மரத்தின் பெயர் என்றும், அம்மரத்தினால் அமைக்கப்பட்ட கோயிலுக்குக் கொகுடிக் கோயில் என்று பெயர் உண்டாயிற்றென்றும் சிலர் கூறுவர். இதுவும் தவறு. "கருப்பறியல்
பொருப்பனைய கொகுடிக் கோயில்" என்று கூறுகிறார் திருநாவுக்கரசர். சுந்தரரும் திக்கருப்பறியலூர்ப் பதிகத்தில் இக்கொகுடிக் கோயிலைக் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தரும்,
‘குற்றமறியாத பெருமான் கொகுடிக் கோயிற்
கற்றென விருப்பது கருப்பறிய லூரே’
என்று கூறுகிறார்.
இந்தக் கோயிலின் விமான (சிகர) அமைப்பு எப்படி இருந்ததென்று திட்டமாகச் சொல்வதற்கில்லை. ஆயினும் ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டடங்களில் ஒன்றாகக் கொகுடிக் கோயில் இருக்கக் கூடும் என்று ஊகிக்கலாம். வட்டமான சிகரத்தை உடையது விஜயம் என்று பெயர் பெறும் என்பதை மேலே (கரக்கோயிலில்) கூறினோம். அந்த வட்டமான சிகரம் கர்ண கூடத்துடன் அமையப் பெற்றால் ஸ்ரீபோகம் எனப் பெயர்பெறும் என்றும், அதுவே நடுவில் பத்ரவரிசையுடன் கூடியதானால் ஸ்ரீவிசாலம் எனப் பெயர் பெறும் என்றும் காமிகாகமம்7 கூறுகிறது. கொகுடிக் கோயில் என்பது ஸ்ரீபோகம் அல்லது ஸ்ரீவிசாலமாக இருக்கக்கூடும் என்று கருதலாம்.
மணிக்கோயில்
மணிக்கோயிலின் அமைப்பைப் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், எட்டுப் பட்டை அல்லது ஆறு பட்டையான சிகரத்தையுடைய கோயிலாக இருக்கக்கூடும் என்று யூகிக்கலாம். சிற்ப
நூல்கள் ஸ்கந்த காந்தம் என்று கூறுகிற விமானக் கோயிலே மணிக்கோயில் என்று கருதுவது பொருத்தமாகத் தோன்றுகிறது.
எட்டுப் பட்டையையுடைய சிகரத்தையும் கழுத்தையும் உடையது ஸ்கந்த காந்தம் என்று காமிகாகமம் கூறுகிறது. ஆறு பட்டையை உடைய சிகரத்தையும் கழுத்தையும் உடையது ஸ்கந்த காந்தம் என்று வேறு பாட பேதத்தையும் காமிகாகமம் கூறுகிறது.8
நமது நாட்டில் ஆறு பட்டையுள்ள சிகரக்கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு அல்லது எட்டுப் பட்டையான சிகரமுள்ள கோயிலாக இருக்கக்கூடும்.
திருநாவுக்கரசர் கூறிய கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்னும் கோயில் வகைகளையும் சிற்பநூல்களில் வடமொழிப் பெயராகக் கூறப்படுகிற விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்த காந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம் என்னும் கோயில் வகைகளையும் ஒருவாறு பொருத்திக் கூறினோம். இவற்றில் ஆலக்கோயிலும் ஹஸ்திபிருஷ்டமும் ஒன்றே என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. ஆனால், ஏனைய பொருத்தங்கள் என்னுடைய ஊகமேயொழிய முடிந்த முடிபு அன்று. இவற்றைப் பற்றிச் சிற்ப சாஸ்திரிகள் ஆராய்ந்து முடிவு கூறவேண்டும்.
–கலை வளரும்…
________________________________________
1. இதைப்பற்றி இந்நூலாசிரியர் எழுதியுள்ள அண்மையில்
வெளியாகியிருக்கிற ‘ஆனைக்கோயில்’ என்னும் நூலில் விளக்கமாகக்
காணலாம்.
2. S.I.I.II, VOL. No. 66.
3. 172 of 1914
4. 3680 of 1908; S.I.I.VOL.XII, No. 43.
5. 2. Epi. Indi. Vol. P.III. 136-146.
6. திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும், 5ஆம் பாட்டு.
7. செய்யுள் 54. ஏகபூமியாதி விதி படலம்.
8. 60ஆவது ஏகபூமியாதி விதி படலம்
“