யவன நாட்டுச் சிற்பமும் நமது நாட்டுச் சிற்பமும்
அயல் நாட்டுத் தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் நமது நாட்டுத் தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை இந்நூலாசிரியர் எழுதியுள்ள "இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்" என்னும் நூலில் எழுதியிருப்பதை இங்குக் கூறுவது பொருந்தும். அது:
அயல்நாட்டுச் சிற்பங்கள், உருவங்கள் உள்ளது உள்ளவாறே, கண்ணுக்குத் தோன்றுகிறபடியே அமைக்கப்படுவன; நமது நாட்டுச் சிற்பங்கள், உள்ளதை உள்ளபடியே காட்டும் நோக்கமுடையனவல்ல; சிற்ப உருவங்களின் மூலமாக ஏதேனும் கருத்தை அல்லது உணர்ச்சியைக் காட்டும் நோக்கம் உடையன. இயற்கை உருவத்தை உள்ளது உள்ளபடியே விளக்குவது அயல்நாட்டுச் சிற்பம்; உணர்ச்சிகளையும் கருத்துகளையும் காட்டுவதற்குக் கருவியாக உள்ளது நமது நாட்டுச் சிற்பம். மனித உருவத்தின் அழகையும் செவ்வியையும் சிற்பக் கலையில் நன்கு பொருந்தும்படி அக்கலையை மிக உன்னத நிலையில் வளர்த்து உலகத்திலே பெரும்புகழ் படைத்த கிரேக்க நாட்டுச் சிற்பிகள், தமது நாட்டுக் கடவுளர்களின் உருவங்களைச் சிற்ப உருவமாக அமைத்தபோது, மனித உடலமைப்பு எவ்வளவு அழகாக அமையக்கூடுமோ அவ்வளவு அழகையும் அமையப் பொருத்தி அத்தெய்வ உருவங்களை அமைத்தார்கள். அவர்கள் அமைத்த ஜுலியஸ், வீனஸ் முதலிய கடவுளர்களின் சிற்ப உருவங்களைக் காணும்போது, மானிட உடல் அமைப்பின் சீரிய இயல்பு அவைகளில் அமையப் பெற்றிருப்பதால், உண்மையிலேயே அவை நமது கண்ணையுங் கருத்தையும் கவர்ந்து மகிழ்ச்சியளிக்கின்றன.
ஆனால் நமது கருத்து அச்சிற்பங்களின் உருவ அமைப்பின் அழகோடு தங்கி நிற்கிறதே தவிர, அதற்கப்பால் செல்வதில்லை. அவை, மக்கள் நிலைக்கு மேம்பட்ட கடவுளின் உருவங்கள் என்கிற உணர்ச்சியைக் கூட உண்டாக்குவதில்லை.
நமது நாட்டுச் சிற்ப உருவங்களில் அமைக்கப்பட்ட தெய்வ உருவங்களோ அத்தகையன அல்ல. நமது நாட்டுச் சிற்ப உருவங்களில், கிரேக்கச் சிற்பங்களைப் போன்று, இயற்கையோடு இயைந்து அழகிய உடலமைப்பு காணப்படாதது உண்மைதான். ஆனால், இச்சிற்பங்களைக் காணும்போது, நமது உள்ளமும் கருத்தும் இவ்வுருவங்களில் மட்டும் நின்றுவிடவில்லை; இவ்வுருவங்கள் நமது கருத்தை எங்கேயோ இழுத்துச் சென்று ஏதேனும் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் ஊட்டுகின்றன. ஆகவே, நமது சிற்பங்கள், அயல் நாட்டுச் சிற்பங்களைப் போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துகளையும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றன. இந்த இயல்பு சிற்பக் கலைக்கு மட்டுமன்று; நமது நாட்டு ஓவியக் கலைக்கும் பொருந்தும்.
எனவே, பொருள்களின் இயற்கை உருவத்தை அப்படியே காட்டுவது அயல் நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம்; உணர்ச்சிகளையும் கருத்துகளையும் உருவங்கள் மூலமாக வெளிப்படுத்துவது நமது நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம் என்னும் உண்மையை மறவாமல் மனத்திற் கொள்ளவேண்டும்."1
சிற்பத்தில் மறைபொருள்கள்
நமது தெய்வத் திருவுருவங்கள் குறிப்புப் பொருளைப் புலப்படுத்துகின்றவை. (குறிப்புப்பொருள் – Symbolism.) அதாவது, மறைபொருளாகக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றவை. உதாரணமாக ஒன்றைக் காட்டுவோம்.
கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார் என்பது எல்லாச் சமயத்தவரின் கொள்கை. உருவம் இல்லாமல் பரந்து இருக்கிற கடவுளைச் சைவரும் வைணவரும் தமது கடவுள் திருவுருவத்தில் மறைபொருளாக அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கடவுள் உருவங்களுக்கு நான்கு கைகள் அல்லது எட்டுக் கைகளை அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். திசைகளை நான்காகவும் எட்டாகவும் கூறுவது மரபு. ஆகையினாலே, எல்லாத் திசைகளிலும் பரந்து இருக்கிறவர் கடவுள் என்பதைக் காட்ட, நான்கு கைகளை அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். இவ்வாறே, கடவுளின் மற்றக் குணங்களுக்கும் குறிப்புப் பொருளைக் கற்பித்துத் தெய்வ உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இக்குறிப்புப் பொருள்களையெல்லாம் விளக்கிக் கூறுவதற்கு இது இடமன்று; காமிகாகமம் முதலிய நூல்களில் கண்டு கொள்க; இந்நூலாசிரியர் எழுதியுள்ள "இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்" என்னும் நூலிலும் கண்டு கொள்க.
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அடையாளங்களை மட்டும் வைத்து வணங்கினார்கள். உதாரணமாக முருகனை வணங்கிய தமிழர், இப்போது வணங்கப்படுகிற முருகன் உருவத்தை வைத்து வணங்காமல், முருகனுடைய படையாகிய வேலை மட்டும் வைத்து வணங்கினார்கள்; இந்திரனுடைய உருவத்தை வைத்து வணங்காமல் அவனுடைய வச்சிராயுதத்தை வைத்து வணங்கினார்கள்; அல்லது அவனது வெள்ளை யானை, கற்பகத் தரு இவற்றின் உருவங்களை வைத்து வணங்கினார்கள். இதைத்தான் வேற்கோட்டம், வச்சிரக் கோட்டம், அமரர்தருக் கோட்டம், வெள்ளை யானைக் கோட்டம் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
இதனால் அறியப்படுவது என்னவென்றால், இப்போது கோயில்களில் வைத்து வணங்கப்படும் தெய்வ உருவங்கள் பண்டைக் காலத்தில் சிற்ப உருவங்களாக அமைக்கப்படவில்லை என்பதும், அவை பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை என்பதும் ஆகும்.
–-கலை வளரும்…
________________________________________
1. "இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்"; பக்கம் 14, 15 – மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியது.
“