கட்டடக் கலைக்கு அடுத்தபடியாக உள்ளது சிற்பக் கலை. கட்டடக் கலையை விட சிற்பக் கலை நுட்பமானது. மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, மலை, கடல் முதலிய இயற்கை உருவங்களையும், கடவுள், தெய்வம், தேவர், அரக்கர் முதலிய கற்பனை உருவங்களையும் அழகுபட அமைப்பதே சிற்பக் கலையாகும். காவியப் புலவர் கற்பனைகளை அமைத்து நூல் எழுதுவது போலவே, சிற்பக் கலைஞரும் (ஓவியப் புலவருங்கூட) தமது கற்பனைகளினாலே பலவகையான சிற்பங்களை அமைக்கிறார்கள்.
சிற்பக் கலைகள், கண்ணையுங் கருத்தையும் கவர்ந்து மனத்திற்கு இன்பங் கொடுக்கும் இனிய கலைகள். அவற்றின் அழகும் அமைப்பும் எல்லோருக்கும் உணர்ச்சி கொடுத்து மகிழ்வூட்டுகின்றன. ஆனால், அவற்றில் சிறிது கருத்தூன்றிக் காண வேண்டும். சற்றுக் கலைச்சுவையும் இருக்க வேண்டும். இக் கலையுணர்வு பெற்றோர், அழகிய கலைப்பொருள்களைக் காணுந்தோறும் புதியதோர் இன்ப உலகத்திலே வாழ்கிறார்கள்.
சிற்பம் அமைக்கும் பொருள்கள்
மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன.
"கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன"
என்பது திவாகர நிகண்டு1.
"வழுவறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும்…"
என்றும்
"மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க"
என்றும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது.2
நமது கோயில்களிலே சிற்பக் கலை பெரிதும் இடம் பெற்றிருக்கிறது. சிற்ப உருவங்கள் அமையாத கோயிற் கட்டடங்கள் இல்லை என்று கூறலாம். கோயிலின் தரை, சுவர், சிகரம், கோபுரம், மண்டபம், தூண்கள், வாயில் நிலைகள் முதலிய கட்டடங்களின் எல்லா இடங்களிலும் சிற்ப உருவங்கள் அமைந்துள்ளன.
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாளிகைகளிலே, சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்ததை, இந்திர விழாவின்போது அந்நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்தனர் என்று மணிமேகலை என்னும் நூல் கூறுகிறது. அப்பகுதி இது:
"வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியங் கண்டு நிற்குநரும்."3
இரண்டு வகைச் சிற்பம்
சிற்ப உருவங்களை முழு உருவங்கள் என்றும் புடைப்புச் சிற்பங்கள் என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் என்பது, பொருள்களின் முன்புறம், பின்புறம் முதலிய முழு உருவமும் தெரிய அமைக்கப்படுவது. புடைப்புச் சிற்பம்4 என்பது பொருள்களின் ஒருபுறம் மட்டும் தெரியும்படி சுவர்களிலும் பலகைகளிலும் அமைக்கப்படுவது. இவ்விரண்டுவிதச் சிற்ப உருவங்களும் கோயில்களிலே அமைக்கப்படுகின்றன.
தத்ரூப உருவங்கள்
தமிழ் நாட்டுச் சிற்பக் கலை, பாரத நாட்டுச் சிற்பக் கலையைப் போலவே, சமயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆகவே, தெய்வ உருவங்கள் நமது நாட்டுச் சிற்பக் கலையில் பெரிதும் முதன்மை பெற்றுள்ளன. கிரேக்க தேசம், உரோமாபுரி முதலிய மேல்நாடுகளிலே மனித தத்ரூப சிற்ப உருவங்கள்5 சிறப்பாக வளர்ச்சி பெற்றதுபோல நமது நாட்டில் மனித தத்ரூப சிற்பக் கலை (ஓரளவு பயிலப்பட்டதேயல்லாமல்) முழு வளர்ச்சியடையவில்லை. இதன் காரணம், நம்மவர் தத்ரூப உருவங்களைச் செய்து வைக்கும் வழக்கத்தை அதிகமாகக் கொள்ளாததுதான். ஆனால், நமது நாட்டில் கற்பனை உருவச் சிற்பங்கள் பெரிதும் வளர்ந்திருக்கின்றன.
கல்லும் உலோகமும்
நமது நாட்டுச் சிற்பக் கலை சமயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது என்று கூறினோம். சைவ, வைணவச் சிற்ப உருவங்களை ஆதிகாலத்தில் மரத்தினாலும், சுதையினாலும், பஞ்சலோகத்தினாலும் செய்து அமைத்தார்கள். இப்போதுங் கூட மரத்தினாலும் சுதையினாலும் செய்யப்பட்ட தெய்வ உருவங்கள் சில கோயில்களில் உள்ளன. உதாரணமாக, உத்தரமேரூர் சுந்தர வரதப் பெருமாள் கோயிலிலுள்ள தெய்வ உருவங்கள் மரத்தினால் செய்யப்பட்டவையே. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காஞ்சி பாண்டவ தூதப் பெருமாள், மகாபலிபுரத்துத் தலசயனப் பெருமாள், திருவிடந்தை வராகப் பெருமாள் முதலிய கோயில்களில் உள்ள உருவங்கள் சுதையினால் ஆனவையே.
கருங்கல்லினாலும் பஞ்சலோகத்தினாலும் சிற்ப உருவங்கள் உண்டாக்கப்பட்டது கி.பி 7ஆம் நூற்றாண்டிலே ஆகும். பல்லவ அரசரும் பிற்காலச் சோழரும் இவற்றினால் சிற்பங்களை அமைத்தார்கள்.
சிவன், திருமால் முதலிய தெய்வ உருவங்கள் மனித உருவமாகக் கற்பிக்கப்பட்டு, மனித உருவம் போலவே செய்யப்படுகின்றன. ஆனால், அந்த உருவங்கள் எலும்பு, சதை, நரம்பு முதலியவை அமைந்த, மானிட உறுப்புள்ள6 தெய்வ உருவங்களாக அமைக்கப்படுவதில்லை.
–கலை வளரும்…
________________________________________
1. 12ஆவது பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி
2. 21ஆவது காதை.
3. மவர்வனம் புக்க காதை. 126-131
4. Bas-relief
5. Portrait sculpture.
6. Anotomy
“