கூத்துக் கலை
1. பதினோர் ஆடல்
இசைக்கலையுடன் தொடர்புடையது ஆடற்கலை என்னும் கூத்துக்கலை.
கூத்துக்கலை, இசைக் கலையைப் போலவே பழைமை வாய்ந்தது. வாயினால் பாடப்பட்ட இசைப்பாட்டுக்குச் ‘செந்துறைப் பாட்டு’ என்றும், கூத்துக்கலைக்குரிய பாட்டுக்கு ‘வெண்டுறைப் பாட்டு’ என்றும் பெயர் உண்டு.
பண்டைக் காலத்தில் ஆடப்பட்டு இப்போது மறந்து போன ஆடல்களைப் பற்றிக் கூறுவோம்.
பண்டைக் காலத்திலே பதினொரு வகையான ஆடல்களை ஆடிவந்தார்கள். இவ்வாடல்களைக் ‘கூத்து’ என்றும் கூறுவதுண்டு. இவ்வாடல்கள், தெய்வங்களின் பெயரால் ஆடப்பட்டபடியால், தெய்வ விருத்தி என்று கூறப்படும். தெய்வங்கள் தமது பகைவரான அவுணர்களுடன் போர் செய்து வென்று, அவ்வெற்றியின் மகிழ்ச்சி காரணமாக ஆடிய ஆடல்கள் இவை.
இப்பதினோராடல்களின் பெயர்களாவன:
1. அல்லியம்; 2. கொடுகொட்டி; 3. குடை; 4. குடம்; 5. பாண்டரங்கம்; 6. மல்; 7. துடி; 8. கடையம்; 9. பேடு; 10. மரக்கால்; 11. பாவை.
இவற்றில் முதல் ஆறும் நின்று ஆடுவது; பின்னுள்ள ஐந்தும் வீழ்ந்து ஆடுவது. என்னை?
"அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம்
மல்லுடன் நின்றாடல் ஆறு";
"துடிகடையம் பேடு மரக்காலே பாவை
வடிவுடன் வீழ்ந்தாடல் ஐந்து"
என்பதனால் அறியலாம்.
இந்த ஆடல்களை ஆடத் தொடங்குமுன்னர், முகநிலையாகத் திருமாலுக்கும், சிவபெருமானுக்கும், திங்களுக்கும் தேவபாணி பாடப்படும். அப்பாடல்களை அடியார்க்கு நல்லார் தமது உரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.1 அப்பாடல்கள் இவை:
"மலர்மிசைத் திருவினை வலத்தினில் அமைத்தவன்
மறிதிரைக் கடலினை மதித்திட வடைத்தவன்
இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன்
இனநிரைத் தொகைகளை யிசைத்தலில் அழைத்தவன்
முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன்
முடிகள்பத் துடையவன் உரத்தினை யறுத்தவன்
உலகனைத் தையுமொரு பதத்தினில் ஒடுக்கினன்
ஒளிமலர்க் கழல்தரு வதற்கினி யழைத்துமே."
பண் – கௌசிகம். தாளம் – இரண்டொத்துடைத் தடாரம்.
"வண்ணமலர்ச் சரங்கோத்து மதனவேள் மிகவெய்யக்
கண்ணளவோர் புலனல்லாக் கனல்விழியால் எரித்தனையால்
எண்ணிறந்த தேவர்களும் இருடிகளும் எழுந்தோட
ஒண்ணுதலாள் பாகங்கொண் டொருதனியே யிருந்தனையே."
"குரைகடல் மதிக்கு மதலையை
குறுமுய லொளிக்க மரணினை
இரவிரு ளகற்றும் நிலவினை
யிறையவன் முடித்த அணியினை
கரியவன் மனத்தி னுதித்தனை
கயிரவ மலர்த்து மவுணனை
பரவுநர் தமக்கு நினதரு
பதமலர் தபுக்க வினையையே."
பண் – கௌசியம். தாளம் – இரண்டொத்துடைத் தடாரம்.
இனி, இந்த ஆடல்கள் ஒவ்வொன்றையும் விளக்குவோம்.
1. அல்லியம்: இது, கண்ணன் யானையின் மருப்பை ஒடித்ததைக் காட்டும் ஆடல்.
"கஞ்சன் வஞ்சகங் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதி."2
"அஞ்சன வண்ணன் ஆடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கோட்டை ஒசித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி யென்னுங் கூத்து" என்பது அடியார்க்கு நல்லார் உரை.
இந்த ஆடலுக்கு ஆறு உறுப்புகள் உண்டு.
2. கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக் கண்டு மனம் இரங்காமல் கைகொட்டியாடியபடியினாலே கொடுகொட்டி என்னும் பெயர் பெற்றது. கொட்டிச் சேதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு.
"பாரதி யாடிய பாரதி யரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம் பேவல் கேட்ப
உமையவள் ஒருதிற னாக வோங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி யாடல்"3
என்பது சிலப்பதிகாரம்.
"தேவர், புரமெரிய வேண்டுதலால் வடவை எரியைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல் கேட்ட வளவிலே, அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக் குவையாகிய பாரதி யரங்கத்திலே, உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பாணி தூக்கு சீர் என்னும் தாளங்களைச் செலுத்த, தேவர் யாரினுமுயர்ந்த இறைவன் சயானந்தத்தால் கைகொட்டி நின்று ஆடிய கொடுகொட்டி என்னும் ஆடல்" என்பது அடியார்க்கு நல்லார் உரை.
இந்த ஆடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு.
இந்த ஆடலில் உட்கு (அச்சம்), வியப்பு, விழைவு (விருப்பம்), பொலிவு (அழகு) என்னும் குறிப்புகள் அமைந்திருக்கும் என்று கூறும் செய்யுளை நச்சினார்க்கினியர் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்.4
"கொட்டி யாடற் றோற்றம் ஒட்டிய
உமையவள் ஒருபா லாக ஒருபால்
இமையா நாட்டத்து இறைவன் ஆகி
அமையா உட்கும் வியப்பும் விழைவும்
பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க
அவுணர் இன்னுயிர் இழக்க அக்களம்
பொலிய ஆடினன் என்ப"
என்பது அச்செய்யுள்.
சிலப்பதிகாரக் காவியத்தை இயற்றிய இளங்கோவடிகள் தமையனான சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரத்திலே, ஆடகமாடம் என்னும் அரண்மனையின் நிலாமுற்றத்திலே, மாலை நேரத்திலே தன்னுடைய தேவியோடு வீற்றிருந்தான். அவ்வமயம், கூத்தச் சாக்கையன் என்னும் நாடகக் கலைஞன், தன் மனைவியுடன் வந்து இருவரும் சிவபெருமான் உமையவள் போன்று வேடம் புனைந்து, இந்தக் கொட்டிச் சேதம் என்னும் ஆடலை ஆடிக் காட்டினர். அதனைச் செங்குட்டுவ மன்னன் தேவியுடன் கண்டு மகிழ்ந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
"திருநிலைச் சேவடிச் சிலம்பு புலம்பவும்
பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்
பாடகம் பதையாது சூடகம் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை யசையாது
வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
பார்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
கூத்துச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து"5
என்பது அப்பகுதி.
–கலை வளரும்...
________________________________________
1.சிலம்பு. கடலாடு காதை, 5ஆம் வரி உரை.
2.சிலம்பு. கடலாடு காதை, 46 – 47.
3.சிலம்பு. கடலாடு காதை, 39 – 44.
4.கலித்தொகை, கடவுள் வாழ்த்து உரை.
5.சிலம்பு, நடுநற் காதை, 67-77
“