தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (30)

துளைக்கருவிகள்

புல்லாங்குழல், நாகசுரம், முகவீணை, மகுடி, தாரை, கொம்பு, எக்காளை முதலியன. இவை மரத்தினாலும் உலோகத்தினாலும் செய்யப்படுவன. சங்கு இயற்கையாக உண்டாவது.

குழல்: இதற்கு வங்கியம் என்றும், புல்லாங்குழல் என்றும் பெயர்கள் உண்டு. மூங்கிலினால் செய்யப்படுவது பற்றிப் புல்லாங்குழல் என்னும் பெயர் உண்டாயிற்று. சந்தனம், செங்காலி, கருங்காலி என்னும் மரங்களினாலும் வெண்கலத்தினாலும் செய்யப்படுவதும் உண்டு. மூங்கிலினால் செய்யப்படுவது சிறந்தது. துளைக்கருவிகளில் மிகப் பழைமையானதும் சிறந்ததும் இதுவே. “குழல் இனிது யாழ் இனிது” என்று திருவள்ளுவர் திருக்குறளில் கூறுகிறபடியினாலே, இதன் பழைமை நன்கு அறியப்படும்.

இதன் பிண்டி இலக்கணம், துளையளவு இலக்கணம், துளைகளின் இசை பிறக்கிற இலக்கணம் முதலியவற்றை அடியார்க்கு நல்லார் உரையில் காண்க.1

இது முற்காலத்தில் இசைப்பாட்டிற்கும் நாட்டிய நடனங்களுக்கும் பக்க வாத்தியமாகப் பெரிதும் வழங்கி வந்தது. இக்காலத்தில் இவ்வினிய இசைக்கருவி தனியே தனியிசையாகப் பக்க வாத்தியங்களுடன் வாசிக்கப்படுகிறது.

நாகசுரம்: இது மிகப் பிற்காலத்தில் உண்டான இசைக்கருவி எனத் தோன்றுகிறது. இது மரத்தினாலும், வெண்கலம் முதலிய உலோகத்தினாலும் செய்யப்பட்ட துளைக்கருவி. சங்ககாலத்து நூல்களிலும் இடைக்காலத்து நூல்களிலும் இக்கருவி கூறப்படவில்லை. கோயில்களில் இசைக்கருவி வாசிப்போருக்கு மானியம் அளிக்கப்பட்ட செய்திகளைக் கூறுகிற சோழ, பாண்டிய அரசர் சாசனங்களிலும் இக்கருவி கூறப்படவில்லை. எனவே, இது பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட இசைக்கருவி என்பதில் ஐயமில்லை. கி.பி 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘பரத சங்கிரகம்’ என்னும் நூலில் இது கூறப்படுகிறது.

"பூரிகை நாகசுரம் பொற்சின்னம் எக்காளை
தாரை நவரிசங்கு வாய்வீணை – வீரியஞ்சேர்
கொம்புதித்தி காளை குழலுடன் ஈராறும்
இன்பார் துளைக்கருவி என்"

என்று ஒரு வெண்பா அந்நூலில் காணப்படுகிறது. இதில்தான் முதன்முதலாக நாகசுரத்தின் பெயர் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் இருந்த நாகர் என்னும் தமிழினத்தைச் சேர்ந்தவர்களால் இக்கருவி உண்டாக்கப்பட்டதென்றும், அதனால் இதற்கு நாகசுரம் என்னும் பெயர் ஏற்பட்டதென்றும் கூறுகிறார்கள். இருக்கு முதலிய வேதத்திலிருந்து இது உண்டாயிற்று என்று சிலர் கதை கட்டிவிடுவது அறியாமையாகும்.

பிற்காலத்தில் உண்டானதானாலும் நாகசுரம் சிறந்த இனிய இசைக்கருவியாகும். இதன் இன்னிசையில் உருகாதார் யார்? இதற்குப் பக்கவாத்தியமாக அமைவது தவுல் என்னும் தோற்கருவி. இதுவும் புதிதாக உண்டானதே.

தாரை, கொம்பு, எக்காளை முதலிய துளைக் கருவிகள் இசைப்பாட்டிற்கு ஏற்றவையல்ல. சங்கு, மங்கல இசைக் கருவியாகக் கருதப்படுகிறது. அது கோயில்களிலும் வீடுகளிலும் மங்கல நாட்களில் ஊதப்படுகிறது.

கிளார்னெட்: பிடிலைப் போன்று இதுவும் ஐரோப்பிய இசைக்கருவி.Clarionet என்று இதனை ஆங்கிலத்தில் கூறுவர். துளைக்கருவியைச் சேர்ந்தது. இதனை நமது நாட்டு இசைக்கருவியாக அமைத்து முதன்முதல் உபயோகித்தவர் வித்துவான் சின்னையா பிள்ளை அவர்கள். இவர், மேல்நாட்டுப் பிடில் என்னும் கருவியை நமது நாட்டு இசைக்கருவியாக அமைத்துக் கொடுத்த வித்துவான் வடிவேலு பிள்ளையின் உடன்பிறந்தவர். அவரைப் போலவே  சின்னையா பிள்ளையும் தஞ்சாவூர் அரண்மனையில் இசைப்புலவராக  இருந்தவர். தஞ்சாவூர் அரண்மனையில் இங்கிலீஷ் பாண்டு வாசித்தபோது அதனுடன்  வாசிக்கப்பட்ட கிளார்னெட் கருவியைப் பற்றி இவர் ஆராய்ந்து பார்த்து, அதனைக் கற்று, நமது நாட்டு இசைக்கருவியாக உபயோகப்படுத்தினார். பரத நாட்டியத்துக்கு உபயோகப்பட்ட முகவீணை என்னும் நாணற் குழாய்க் கருவிக்குப் பதிலாகக் கிளார்னெட் பயன்படுகிறது. அன்றியும், பிடிலைப் போலவும் புல்லாங்குழலைப் போலவும் இக்கருவியைத் தனி இசையாகவும் வாசித்து வருகிறார்கள்.

நரம்புக் கருவிகள்

மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகள் பூட்டப்பட்டவை. யாழ், வீணை, தம்பூரா, கோட்டுவாத்தியம், பிடில் முதலியன நரம்புக் கருவிகளாம்.

யாழ்: இது மிகப் பழைமையான இசைக்கருவி. உலகத்திலே பல நாடுகளில் ஆதிகாலத்தில் இது வழங்கி வந்தது. ஒரு காலத்தில் இந்தியா தேசம் முழுவதும் இக்கருவி வழங்கி வந்தது. வடஇந்தியாவில் யாழ்க்கருவி வழக்கிழந்த பிறகும், தமிழ் நாட்டிலே நெடுங்காலமாகப் போற்றப்பட்டிருந்தது. பழந்தமிழ் நூல்களிலே இக்கருவி பெரிதும் பாராட்டிக் கூறப்படுகிறது. பழந்தமிழர்களால் மிகச் சிறந்த இசைக்கருவியாகப் போற்றப்பட்டது.

உருவ அமைப்பில் யாழ்க்கருவி வில் போன்றது. யாழுக்கு வீணையென்ற பெயரும் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது. பழைமை வாய்ந்ததான புத்த ஜாதகக் கதையொன்றிலே வில்வடிவமான யாழ்க்கருவி, வீணை என்று கூறப்பட்டுள்ளது. "நாரத வீணை நயந்தெரி பாடல்" என்று சிலப்பதிகாரத்திலே கூறியது இப்போது வழங்கும் வீணையை அன்று; வில்வடிவமான யாழைத்தான் வீணை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

யாழ் வாசிப்பதில் வல்லவரான பாணர் என்னும் மரபினர் தமிழ் நாட்டில் இருந்தனர். இவர்களுக்கு யாழ்ப்பாணர் என்பது பெயர். இவர்கள் பண்டைக் காலத்திலே சமுதாயத்தில் உயர்நிலையில் இருந்தவர்கள். அரசர், செல்வர் முதலியவர்களின் அரண்மனையில் யாழ் வாசித்தும், இசை பாடியும் தொழில் புரிந்தவர். இப்பொழுது இலங்கையின் வடபகுதியாக யாழ்ப்பாணம் என்னும் ஊர், பண்டைக் காலத்திலே, இசைப்புலமை வாய்ந்த யாழ்ப்பாணன் ஒருவனுக்கு ஓர் அரசனால் பரிசாக வழங்கப்பட்டதென்றும், யாழ்ப்பாணன் பரிசாகப் பெற்றபடியால் அவ்வூருக்கு யாழ்ப்பாணம் என்னும் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

பண்டைத் தமிழகத்தில் யாழும் குழலும் சிறந்த இசைக்கருவிகளாக வழங்கிவந்தபடியினாலேதான் திருவள்ளுவரும், "குழல் இனிது யாழ் இனிது" என்று கூறினார். பலவிதமான யாழ்க்கருவிகளைப் பற்றியும், அக்கருவியைப் பற்றிய செய்திகளையும் சிலப்பதிகாரத்திலும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையிலும் விரிவாகக் காணலாம்; அன்றியும் முத்தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. விபுலாநந்த அடிகளார் இயற்றிய யாழ் நூலிலும் காணலாம்.

யாழ் வாசித்து இசை பாடுவதில் வல்லவரான பாணர் என்னும் மரபினர் பிற்காலத்தில் அருகிவிட்டனர். திருஞானசம்பந்தர் இருந்த கி.பி 7ஆம் நூற்றாண்டிலே பேர்பெற்ற யாழாசிரியர் ஆக இருந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவருக்குப் பிறகு 9ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர், பாணபத்திரர் என்பவர், யாழ் வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் வல்லவரான இவர் முதலில் வரகுண பாண்டியனுடைய அவையில் இசைப்புலவராக இருந்தார். பிறகு மதுரைச் சொக்கநாதர் ஆலயத்தில் யாழ் வாசித்துக் கொண்டிருந்தார். இவருடைய யாழ் இசைக்கு மனமுருகிய சொக்கப் பெருமான், இவருக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பும்படி தமது அடியாராகிய சேர நாட்டை அரசாண்ட சேரமான் பெருமாள் நாயனாருக்குத் திருமுகச் சீட்டு எழுதியனுப்பினார் என்றும், அதன்படியே சேரமான் பெருமாள் இவருக்குப் பெருநிதி கொடுத்து அனுப்பினார் என்றும் திருவிளையாடற்புராணம் கூறுகிறது.2

பாணபத்திரர் காலத்தில், மதுரைக்கு வடக்கேயுள்ள சோழநாட்டில் இருந்த புகழ்பெற்ற யாழ்ப்பாணன் ஏமநாதன் என்பவன். ஏமநாதன் தன் சீடர்களோடு மதுரைக்கு வந்து, பாண்டியனிடம் சிறப்புகள் பெற்றுப் பாணபத்திரனுடன் இசை வெற்றி கொள்ள எண்ணினான். அப்போது, சொக்கநாதரே பாணபத்திரனுடைய மாணவன் போன்று வந்து, ஏமநாதன் முன்பு இசை பாடி, அவனை மதுரையைவிட்டு ஓடச் செய்தார் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.3

வைணவ அடியார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரும் யாழ் வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் வல்லவராக இருந்தார்.

கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, யாழ் தமிழ் நாட்டில் வழக்கொழிந்துவிட்டது. அதற்குப் பதிலாக இப்போது வழங்குகிற வீணை என்னும் இசைக்கருவி வழங்கலாயிற்று.

வீணை:
வில்வடிவம் உள்ள பழைய இசைக்கருவியாகிய யாழிற்கு வீணை என்னும் பெயரும் வழங்கி வந்தது. அந்தப் பெயரே இப்போது வழக்கில் இருந்து வருகிற வீணைக்கும் பெயராக அமைந்துவிட்டது. வீணை என்னும் கருவி கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாட்டில் வழங்கி வருகிறது என்று கருதலாம். யாழ், கி.பி 11ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கிழந்துவிட, வீணை இன்றும் நிலைபெற்றிருக்கிறது. மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தில், யாழ், வீணை ஆகிய இரண்டு இசைக்கருவிகளும் வழங்கிவந்தன போலும். ஆகையினால்தான், அவர் "இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்" என்று இரண்டினையும் கூறினார். இப்போது வீணை சிறந்த இசைக்கருவியாக விளங்குகிறது.

–கலை வளரும்..
.

________________________________________
1.சிலம்பு. அரங்கேற்று காதை, 26ஆம் அடி உரை.
2. திருமுகங் கொடுத்த படலம்.
3. விறகு விற்ற படலம்

About The Author