தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (24)

நாயக்கர் காலத்து ஓவியம்

தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் அரசாண்ட நாயக்க மன்னர்களும் சுவர் ஓவியங்களை அமைத்திருக்கிறார்கள். தஞ்சை நாயக்க அரசர், தஞ்சைப் பெரிய கோயிலில் அமைத்த ஓவியங்களைக் கடந்த வாரம் குறிப்பிட்டோம். மதுரை நாயக்கர் ஓவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் முதலிய இடங்களில் இருக்கின்றன.

பழைய கோயில்களிலே இன்றும் சில ஓவியங்கள் மறைந்துள்ளன. அவை முற்காலத்து ஓவியங்களும் பிற்காலத்து ஓவியங்களுமாக இருக்கும். இவற்றையெல்லாம் கண்டுபிடித்துப் பாதுகாக்க வேண்டும். பழைய பல்லவர் காலத்துக் கோயில்கள் சிலவற்றில் இடைக்காலத்து ஓவியங்களும் பிற்காலத்து ஓவியங்களும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். உத்தரமேரூர் மாடக் கோயிலில் சுவர் ஓவியங்கள் உள்ளன. பிற்காலத்து ஓவியங்களாக இருந்தாலும் அவற்றையும் பாதுகாக்க வேண்டும்.

இசைக்கலை

அழகுக் கலைகளில் நான்காவது இசைக்கலை. இதனை இசைத்தமிழ் என்றும் கூறுவர். இது காதினால் கேட்டு இன்புறத்தக்க இன்கலை. தமிழர் வளர்த்த இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்களில் இது ஒன்று. ஆகவே, இது தமிழர் வளர்த்த கலைகளில் மிகப் பழமையானது.

இசைத்தமிழ் இலக்கிய நூல்களையும் இசைத்தமிழ் இலக்கண நூல்களையும் புலவர்கள் பழங்காலத்திலே எழுதியிருந்தார்கள். அவற்றில் சில இப்போது பெயர் தெரியாமலே மறைந்துவிட்டன; மற்றும் சில பெயர் மட்டும் கேட்கப்படுகின்றன.

பரிபாடல்

சங்க காலத்திலே பரிபாடல் என்னும் இசைப் பாடல்கள் பல பாடப்பட்டிருந்தன. பரிபாடல்கள் இசைப்பாடல்கள் என்பதைப் பரிமேலழகர் உரையினால் அறிகிறோம். "பரிபாடல் என்பது இசைப்பாவாதலான், இஃது இசைப்பகுப்புப் படைத்த புலவரும் பண்ணுமிட்டெ…" என்று எழுதியிருப்பதனால் அறியலாம்.1

"அவையாவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன வென்பது". இது பேராசிரியர் உரை.2

யாப்பருங்கல விருத்தியுரைகாரரும், பரிபாடல் இசைத்தமிழைச் சேர்ந்தது என்று கூறுகிறார். அவர் எழுதுவது:

"செந்துறை மார்க்கம்" (இசைப்பாடல்) ஆமாறு… நாற்பெரும் பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இசை எல்லாஞ் செந்துறை…. செந்துறை என்பது பாடற்கேற்பது… செந்துறை விரி மூவகைய: செந்துறையும், செந்துறைச் செந்துறையும், வெண்டுறைச் செந்துறையும் என. அவற்றுட் செந்துறைப் பாட்டாவன: பரிபாடலும், மகிழிசையும், காமவின்னிசையும் என்பன. என்னை?

"தெய்வங் காம
மையில் பொருளாம் பரிபா டல்லே
மகிழிசை நுண்ணிசை யுரிபெரு மரபிற்
காமவின் னிசையே யாற்றிசை யிவற்றைச்
செந்துறை யென்று சேர்த்தினர் புலவர்"

என்றாராகலின்.3

அன்றியும், இப்போது கிடைத்துள்ள இருபத்தொரு பரிபாடல்களுக்கு, அப்பாட்டுகளைப் பாடிய புலவர் பெயர்களும், அப்பாட்டுக்குப் பண் வகுத்த இசைப் புலவர் பெயர்களும் பண்பெயரும் எழுதப்பட்டிருப்பதனாலே, பரிபாடல்கள் இசைப்பாடல்கள் என்பதை ஐயமற உணரலாம். இப்பரிபாடல் இருபத்தொன்றுக்கும் பண் வகுத்த இசைப் புலவர்களின் பெயர்களாவன:

பெட்டனாகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார், பித்தாமத்தர், நாகனார், நன்னாகனார், நல்லச்சுதனார். தமிழரில் நாகர் என்னும் பிரிவினர் பண்டைக் காலத்தில் இருந்தார்கள். அவர்கள் இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்களாயிருந்தனர்.

கணக்கற்ற பரிபாடல்கள் முற்காலத்தில் இருந்தன என்றும், அவற்றில் பெரும்பாலும் இப்போது இறந்து பட்டன என்றும் தெரிகின்றது. என்னை? இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் தலைச்சங்கத்தைக் கூறுமிடத்தில், "அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன" என்று கூறுகிறார். பின்னர்க் கடைச்சங்க காலத்தைக் கூறுமிடத்தில், "அவர்களாற் பாடப்பட்டன, நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென இத்தொடக்கத்தன" என்று எழுதுகிறார்.

இவர் கூறிய முதற் சங்க காலத்து "எத்துணையோ பரிபாடல்களில்" இக்காலத்து ஒரு பாடலேனும் எஞ்சி நிற்கவில்லை; கடைச்சங்கத்தார் பாடிய "எழுபது பரிபாடல்களில்" இப்போது உருப்படியாக இருப்பவை இருபத்தொரு பரிபாடல்களே; மற்றவை அழிந்துவிட்டன.

பரிபாடல் இசை மறைவு

இப்போதுள்ள இசைப்புலவர்கள் பரிபாடல்களைப் பாடுவது இல்லை. அதனை எப்படிப் பாடுவது என்பதையும் இப்போதுள்ளவர் அறியார் போலும்! இதுபற்றி முத்தமிழ்ப் புலவர், பேராசிரியர் உயர்திரு. விபுலாநந்த அடிகளார் தமது யாழ்நூல் என்னும் இசைத்தமிழ் நூலிலே இவ்வாறு கூறுகிறார்.

"முதலூழி யிறுதிக்கண் கடல்கொண்ட தென் மதுரையகத்துத் தலைச்சங்கத்து அகத்தியனாரும், இறையனாரும், குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்டோரிருந்து தமிழாராய்ந்த காலத்திலே, எண்ணிறந்த பரிபாடலும், முதுநாரையும், முருகுருகும், களரியாவிரையுமுள்ளிட்டன புனையப்பட்டனவென அறிகின்றோம். கடைச் சங்கத்துத் தொகுக்கப்பட்ட தொகை நூல்களுள் ஒன்றாகிய எழுபது பரிபாடலின் ஒரு பகுதி நமக்குக் கிடைத்துள்ளது. கிடைத்த பகுதியினை நோக்கித் தமிழிசையின் வளத்தினையும் பாடலினமைந்த விழுமிய பொருளினையுங் கண்டு இறும்பூதெய்துகின்றோம். நமக்குக் கிடைத்த ஒரு சில பரிபாடல்களின் நலத்தினை நோக்கித் தலைச்சங்கத்தார் புனைந்த எண்ணிறந்த பரிபாடல்கள் எத்துணை வளஞ் சிறந்தனவோவெனவெண்ணி உளமுருகுகின்றோம். பாடற் பின்னாகப் பாடற்றுறையும், பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் தரப்பட்டிருக்கின்றன. நாகனார், பெட்டனாகனார், நன்னாகனார், கண்ணனாகனார் என நின்ற பெயர்களை நோக்குமிடத்து, இசை வகுத்த பாணர் நாககுலத்தினராமோ என எண்ண வேண்டியிருக்கிறது. கேசவனார், நல்லச்சுதனார் என்போர் பாடினோராகவும் இசை வகுத்தோராகவும் இருக்கின்றனர். இவர் தாம் வகுத்த இசையினை ஒரு முறை பற்றி எழுதியிருத்தல் வேண்டும். அம்முறையும், முறை பற்றிய இசைக் குறிப்பும் நமக்குக் கிடைத்தில."4

–கலை வளரும்…

________________________________________

1.பரிபாடல் கடவுள் வாழ்த்து உரை, (இவ்வுரைப் பகுதி மறைந்துவிட்டது.)

2. தொல்., பொருள்., செய்யுள்., 242 உரை.

3. யாப்பருங்கலம், ஒழிபியல் உரை மேற்கோள்

4. யாழ் நூல், பாயிரவியல், பக்கம். 16.

About The Author