3. குடைக்கூத்து: இது, முருகன் அவுணரை வென்று ஆடிய ஆடல்.
"படைவீழ்த் தவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடை"1
என்பது சிலப்பதிகாரம்.
"அவுணர் தாம் போர் செய்தற்கு எடுத்த படைக் கலங்களைப் போரிற்கு ஆற்றாது போகட்டு வருத்தமுற்ற வளவிலே, முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுக வெழினியாக நின்றாடிய குடைக்கூத்து" என்பது அடியார்க்கு நல்லார் உரை.
இந்தக் கூத்துக்கு நான்கு உறுப்புகள் உண்டு. முருகன் கோயில்களில் காவடி என்னும் பெயருடன் இக்காலத்தில் ஆடுகிற கூத்து குடைக்கூத்து போலும்.
4. குடக்கூத்து: கண்ணனுடைய பேரனாகிய அநிருத்தனை வாணன் என்னும் அவுணன் சிறை வைத்தபோது, அவனைச் சிறை மீட்பதற்காகக் கண்ணன் ஆடிய ஆடல். மண்ணால், அல்லது பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட குடத்தைக் கொண்டு ஆடப்படுவது இக்கூத்து.
"வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடம்"
என்பது சிலப்பதிகாரம்.2
"காமன் மகன் அநிருத்தனைத் தன் மகள் உழை காரணமாக வாணன் சிறைவைத்தலின், அவனுடைய சோவென்னும் நகர வீதியிற் சென்று நிலங்கடந்த நீனிற வண்ணன் குடங் கொண்டாடிய குடக்கூத்து" என்பது அடியார்க்கு நல்லார் உரை.
குடக்கூத்துக்கு ஐந்து உறுப்புகள் உண்டு.
5. பாண்டரங்கம்: சிவபெருமான், திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய பின்னர், தேர்ப்பாகனாக இருந்த நான்முகன் காணும்படி ஆடியது இப்பாண்டரங்கம் என்னும் கூத்து. (சிவபெருமான், கொடுகொட்டி என்னும் கூத்தையாடியது, திரிபுரம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது. இப்பாண்டரங்கக் கூத்து, அது எரிந்து சாம்பலான பிறகு ஆடியது.)
"தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன்பாண் டரங்கமும்"
என்பது சிலப்பதிகாரம்.3
"வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம் மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பாண்டரங்கக் கூத்து" என்பது அடியார்க்கு நல்லார் உரை.
இந்தக் கூத்தில் தூக்கு என்னும் தாள உறுப்பு சிறப்பாக இருக்கும் என்று கலித்தொகைச் செய்யுள் கூறுகிறது.
"மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணைமென்றோள்
வண்டரற்றும் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ"
என்பது அச்செய்யுள்.
பாண்டரங்கக் கூத்து ஆறு உறுப்புகளையுடையது.
6. மல்: மல்லாடல் என்பது, கண்ணன் வாணன் என்னும் அவுணனுடன் மற்போர் செய்து அவனைக் கொன்றதைக் காட்டும் கூத்து.
"அவுணற் கடந்த மல்லி னாடல்"
என்பது சிலப்பதிகாரம். "வாணனாகிய அவுணனை வேறற்கு மல்லனாய்ச் சேர்ந்தாரிற் சென்று அறைகூவி உடற் கரித்தெழுந்து அவனைச் சேர்ந்த அளவிலே சடங்காகப் பிடித்து உயிர்போக நெரித்துத் தொலைத்த மல்லாடல்" என்பது அடியார்க்கு நல்லார் உரை.
மல்லாடல் ஐந்து உறுப்புகளையுடையது.
7. துடி: துடியாடல் என்பது, கடலின் நடுவில் ஒளிந்த சூரபதுமனை முருகன் வென்ற பிறகு, அக்கடலையே அரங்கமாகக் கொண்டு துடி (உடுக்கை) கொட்டியாடிய கூத்து.
"மாக்கடல் நடுவண்
நீர்த்திரை யரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடி"
என்பது சிலப்பதிகாரம்.4
"கரிய கடலின் நடுவு நின்ற சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தை யறிந்து அவன் போரைக் கடந்து முருகன், அக்கடல் நடுவண் திரையே யரங்கமாக நின்று துடி கொட்டியாடிய துடிக்கூத்து" என்பது அடியார்க்கு நல்லார் உரை.
8. கடையம்: கடையக் கூத்து என்பது, வாணனுடைய சோ என்னும் நகரத்தின் வடக்குப் புறத்தில் இருந்த வயலில், இந்திரனுடைய மனைவியாகிய அயிராணி, உழத்தி உருவத்தோடு ஆடிய உழத்திக் கூத்து என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
"வயலுழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை யாடிய கடையம்"
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.5
"வாணனுடைய பெரிய நகரின் வடக்கு வாயிற்கண் உளதாகிய வயலிடத்தே நின்று அயிராணி என்னும் மடந்தை ஆடிய கடையம் என்னும் ஆடல்" என்பது அடியார்க்கு நல்லார் உரை.
இதற்கு உறுப்புகள் ஆறு.
9. பேடு: பேடியாடல் என்பது, காமன் தன் மகனான அநிருத்தனைச் சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ என்னும் நகரத்தில் பேடியுருவங் கொண்டு ஆடிய ஆடல்.
"ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி யாடல்"
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.6
"ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெண்மைக்கோலத்தோடு காமனாடிய பேடென்றும் ஆடல். இது தனது மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் சோ நகரத் தாடியது" என்று உரை கூறுகிறார் அடியார்க்கு நல்லார்.
இது நான்கு உறுப்புகளையுடையது.
காவிரிப்பட்டினத்தில் 1,800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திர விழா நடந்தபோது, அந்நகரத் தெருவில் இப்பேடிக்கூத்து ஆடப்பட்டதென்றும், அதனை மக்கள் கண்டு மகிழ்ந்தனர் என்றும் மணிமேகலை கூறுகிறது. அப்பகுதி இது:
"சுரியற் றாடி மருள்படு பூங்குழல்
பவளச் செவ்வாய்த் தவள வொண்ணகை
ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்
காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்."7
10. மரக்கால்: மரக்கால் ஆடல் என்பது, மாயோள் ஆகிய கொற்றவைமுன் நேராக எதிர்த்துப் போர் செய்ய முடியாத அவுணர், வஞ்சனையால் வெல்லக் கருதிப் பாம்பு, தேள் முதலியவற்றைப் புகவிட அவற்றைக் கொற்றவை மரக்காலினால் உழக்கி ஆடிய ஆடல். இதனை,
"காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்"
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.8
இதற்கு, “காயும் சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தால் செய்யும் கொடுந்தொழிலைப் பொறாளாய் மாயோளால் ஆடப்பட்ட மரக்காலென்னும் பெயரையுடைய ஆடல்” என்று உரை கூறுகிறார் அடியார்க்கு நல்லார்.
இவ்வாடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு.
11. பாவை: பாவைக்கூத்து என்பது, போர் செய்வதற்குப் போர்க்கோலங் கொண்டு வந்த அவுணர் மோகித்து விழுந்து இறக்கும்படி, திருமகள் ஆடிய கூத்து. இதனை,
"செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவை"
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.9
"அவுணர் வெவ்விய போர் செய்வதற்குச் சமைந்த போர்க்கோலத்தோடு மோகித்து விழும்படி கொல்லிப் பாவை வடிவாய்ச் செய்யோளாகிய திருமகளால் ஆடப்பட்ட பாவையென்னும் ஆடல்" என்பது அடியார்க்கு நல்லார் உரை.
இப்பாவைக்கூத்து மூன்று உறுப்புகளையுடையது.
இப்பாவைக் கூத்தை, பொம்மையாட்டம் என்னும் தோற்பாவைக் கூத்தென்று மயங்கக் கூடாது. பாவைக் கூத்து வேறு; பொம்மைக் கூத்து வேறு.
இந்தப் பதினொரு வகையான ஆடல்களையும் அந்தந்தப் பாத்திரத்தின் ஆடை அணிகளை அணிந்து, மாதவி என்னும் கலைச்செல்வி மேடைமேல் ஆடினாள், 1,800 ஆண்டுகளுக்கு முன்னர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
–கலை வளரும்…
________________________________________
1. கடலாடு காதை, 52-53
2. கடலாடு காதை, 54-55
3. கடலாடு காதை, 44-45
4. கடலாடு காதை, 49-51
5. கடலாடு காதை, 62-63
6. கடலாடு காதை, 56-57
7. மணிமேகலை, மலர்வனம் புக்க காதை, 116-125
8. கடலாடு காதை, 58-59
9. கடலாடு காதை, 60-61