இசை
இனி, இசையைப் பற்றிச் சில செய்திகளைக் கூறுவோம். இசை ஏழு. அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவை தமிழ்ப் பெயர்கள். மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என்பன வடமொழிப் பெயர்கள்.
இசை பிறக்கும் இடங்களாவன: மிடற்றினால் குரலும், நாவினால் துத்தமும், அண்ணத்தால் கைக்கிளையும், சிரத்தால் உழையும், நெற்றியால் இளியும், நெஞ்சினால் விளரியும், மூக்கால் தாரமும் பிறக்கும்.
இவை ஏழ்சுரம் எனவும், வீணையில் ஏழ்நரம்பு எனவும் படும். இசை அல்லது இராகத்தின் தகுதி நான்கு வகைப்படும். அவை: 1. இடம், 2. செய்யுள், 3. குணம், 4. காலம் என்பன. இவற்றை விளக்குவோம்.
1. இடம்: இடம் பற்றிய இராகம் ஐந்திணை இராகம். அவை: குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்து வகை நிலத்திற்குரிய குறிஞ்சி, பாலை, சாதாரி, செவ்வழி, மருதம் என்பவை.
2. செய்யுள்: செய்யுளைப் பற்றிய இராகம். வெண்பாவின் இராகம் சங்கராபரணம். அகவற்பா அல்லது ஆசிரியப்பாவின் இராகம் தோடி. கலிப்பாவின் இராகம் பந்துவராளி. கலித்துறையின் இராகம் பைரவி. தாழிசையின் இராகம் தோடி. விருத்தப்பாவின் இராகம் கலியாணி, காம்போதி, மத்தியமாவதி முதலியன. உலாச்செய்யுளின் இராகம் சௌராஷ்டிரம். பிள்ளைத் தமிழின் இராகம் கேதாரகவுளம். பரணியின் இராகம் கண்டாரவம்.
3. குணம்: குணம் பற்றிய இராகங்கள். இரக்கம் உள்ளவை: ஆகரி, கண்டாரவம், நீலாம்பரி, பியாகடம், புன்னாகவராளி. துக்கம் உள்ளவை: மேற்கூறிய இரக்க இராகங்களும் வராளி இராகமும். மகிழ்ச்சியுள்ளவை: காம்போதி, சாவேரி, தன்னியாசி. யுத்த இராகம்: நாட்டை.
4. காலம்: காலம் பற்றிய இராகங்கள். வசந்த கால இராகம்: காம்போதி, அசாவேரி, தன்னியாசி.
மாலைவேளை இராகம்: கலியாணி, காபி, கன்னடம், காம்போதி.
யாமவேளை இராகம்: ஆகரி.
விடியற்காலை இராகம்: இந்தோளம், இராமகவி, தேசாட்சரி, நாட்டை, பூபாளம்.
உச்சிவேளை இராகம்: சாரங்கம், தேசாட்சரி.
எக்காலத்துக்கும் பொதுவான இராகங்கள்: ஆகரி, இந்தோளம், இராமகவி, சாரங்கம், பூபாளம் இவை நீக்கி மற்ற இராகங்கள் எல்லாம் கொள்க.
இராகங்கள்: பைரவி, தேவகிரியை, மேகவிரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், வேளாவளி, மலகரி, பௌளி, சீராகம், இந்தோளம், பல்லதி, சாவேரி, படமஞ்சரி, தேசி, இலலிதை, தோடி, வசந்தம், இராமக்கிரியை, வராளி, கைசிகம், மாளவி, நாராயணி குண்டக்கிரியை, கூர்ச்சரி, பங்காளம், தன்னியாசி, காம்போதி, கௌளி, நாட்டை, தேசாட்சரி, காந்தாரி, சாரங்கம் முதலியன.
இவற்றுள், பைரவி என்பது ஆண் இராகம். தேவக்கிரியை, மேகவிரஞ்சி, குறிஞ்சி இவை பெண் இராகங்கள். இப்பெண் இராகங்கள் பைரவியின் மனைவிகள் எனப்படும். இந்த இராகங்களுக்கு அதிதேவதை ஈசன்.
பூபாளம் என்பது ஆண் இராகம். வேளாவளி, மலகரி, பௌளி ஆகிய இவை பூபாளத்தின் மனைவியரான பெண் இராகங்கள். இவற்றிற்கு அதிதேவதை திருமால்.
சீராகம் என்பது ஆண் இராகம். இந்தோளம், பல்லதி, சாவேரி என்பவை சீராகத்தின் மனைவியரான பெண் இராகங்கள். இவற்றிற்கு அதிதேவதை சரசுவதி.
படமஞ்சரி என்பது ஆண் இராகம். தேசி, இலலிதை, தோடி என்பவை இதன் மனைவியரான பெண் இராகங்கள். இவற்றிற்கு அதிதேவதை இலக்குமி.
பங்காளம் என்பது ஆண் இராகம். தன்னியாசி, காம்போதி, கௌளி என்பன இதன் மனைவியரான பெண் இராகங்கள். இவற்றின் தேவதை விநாயகன்.
நாட்டை ராகம் என்பது ஆண் இராகம். தேசாட்சரி, காந்தாரி, சாரங்கம் என்பன இதன் மனைவியரான பெண் இராகங்கள். இவற்றின் தேவதை தும்புருவன்.
–கலை வளரும்…