தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (27)

சில இசையாசிரியர்

அண்மைக் காலத்தில் தமிழிலே கீர்த்தனைகளையும் இசைப்பாடல்களையும் இயற்றி அழியாப் புகழ் பெற்ற சிலருடைய பெயரைக் கூறுவோம்.

அருணாசலக் கவிராயர், அநந்த பாரதிகள், கவிகுஞ்சர பாரதியார், கனம் கிருஷ்ணையர், இராமலிங்க அடிகள், கோபாலகிருஷ்ண பாரதியார், கோடீசுவர ஐயர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், மாரிமுத்துப் பிள்ளை, மாயவரம் வேதநாயகம் பிள்ளை, முத்துத் தாண்டவராயர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், அண்ணாமலை ரெட்டியார் முதலியோர்.

அந்நியர் ஆட்சியில் இசைக் கலை

கி.பி 17, 18ஆம் நூற்றாண்டுகளிலே தமிழ் நாட்டில் அரசியல் நிலையற்றதாகி, அந்நியர் ஆட்சியில் பட்டு, நாட்டில் குழப்பமும் கலகமும் ஏற்பட்டிருந்தன. தெலுங்கர்களான நாயக்கச் சிற்றரசர்களும், மகாராஷ்டிரர்களும், முகம்மதியர்களும், பாளையக்காரர்களும் தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதியைப் பிடித்துக் கொண்டு அரசாண்டனர். அந்நியராகிய இவர்கள் தமிழர் கலைகளையும் தமிழர் பண்பையும் அறியாதவர்கள் ஆகையால், இவர்கள் மற்ற கலையைப் போற்றாதது போலவே, இசைக்கலையையும் போற்றவில்லை. அக்காலத்தில் தமிழ் இசைவாணர் ஆதரிப்பாரற்றுத் தவித்தனர். தெலுங்குப் பாடல்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டது. தமிழ் நாட்டிலே தெலுங்குப் பாடல்களுக்கு ஆதிக்கம் உண்டாயிற்று. இந்தப் பழக்கம் 19, 20ஆம் நூற்றாண்டிலேயும் தொடர்ந்து வந்தது.

கி.பி 19, 20ஆம் நூற்றாண்டுகளில் அரசியற் குழப்பங்கள் அடக்கப்பட்டு, நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்து அமைதியும் ஒழுங்கும் நாட்டில் நிலைபெற்ற பிறகும், மராட்டிய மன்னர், தெலுங்கு மன்னர், முகம்மதிய மன்னர்களின் அதிகாரங்கள் அடங்கி ஒழிந்தபின்பும், தமிழ்நாட்டிலே தெலுங்குப் பாடல்கள் பாடும் நிலை இருந்து வந்தது. இதன் காரணம், பரம்பரையாக, இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகத் தெலுங்குப் பாட்டையே பயின்று பாடி வந்த பாடகர், குருட்டுத்தனமாக அப்பாடல்களையே பாடி வந்ததுதான்.

இன்னொரு காரணம், இசையைக் கொண்டு வயிறு வளர்ப்பதற்காக ஒரு சூழலை உண்டாக்கிக் கொண்ட ஒரு சிறு கூட்டம், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தும் தமிழ்ப் பற்று இல்லாமல், தமிழ்ப்பாடல்களைப் பாடாமல் தெலுங்குப் பாடல்களைப் பாடி வந்ததாகும்.

தமிழிசையின் மறுமலர்ச்சி

இவ்வாறு தமிழ் இசைப் பாடல்கள் போற்றப்படாமல் இருந்த நிலையை மாற்றித் தமிழ் இசைக்கு மறுமலர்ச்சி உண்டாக்கிக் கொடுத்தவர் கலைவள்ளல் சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்கள். இம்முயற்சியில் இப்பெரியாருக்குப் பேருதவியாக இருந்தவர் டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள்.

இப்பெரிய அரசியல் மேதைகளின் சிறந்த உயர்ந்த முயற்சியை எதிர்த்தவர்கள் தெலுங்கரும், மராட்டியரும், முகம்மதியரும் அல்லர். பின்னர் யார் என்றால், தமிழர் என்று சொல்லிக்கொண்டு, ஆனால், தமிழ்ப் பற்றுச் சிறிதும் இல்லாமல், எந்த வழியிலாவது வாழவேண்டும் என்னும் கீழ்த்தரமான கொள்கையையுடைய ஒரு சிறு கூட்டந்தான் தமிழ் இசை இயக்கத்தை எதிர்த்துப் பின்னர் அடங்கிவிட்டது.

ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழிசைச் சங்கம் அமைத்தும், தமிழிசைக் கல்லூரி நிறுவியும், இசைத்தமிழ் நூல்களை வெளிப்படுத்தியும் பெருந்தொண்டு செய்தார்கள். இச்சமயத்தில் இன்னொரு வகைக் கருத்தைக் கவனிப்போம்.

சமணரும் இசைக் கலையும்

இசைக் கலையை அழித்தவர் ஜைனராகிய சமணர் என்று ஓர் அபவாதம் கூறப்படுகிறது. சமண சமயத்தவர் மீது பகைச் சமயத்தார் கற்பித்த பல அபவாதங்களில் இதுவும் ஒன்று. இது வீண் பழியாகும். உண்மையை ஆராயும்போது, சமணர் இசைக்கலையை நன்கு போற்றி வளர்த்தனர் என்பது விளங்குகிறது. இதற்குச் சமண சமயத்தவர் நூல்களே சான்றாகும்.

திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் காவியத்திலே இசைக்கலைச் செய்திகளும், ஆடல்பாடல் செய்திகளும், யாழ் என்னும் இசைக்கருவியின் செய்திகளும் பல இடங்களில் கூறப்படுகின்றன. அவற்றில் காந்தருவதத்தையார் இலம்பகம் என்பது சிறப்பானது. காந்தருவதத்தை என்பவள் இசைக்கலையில் சிறந்தவள்.1

காந்தருவதத்தை, தன்னை யார் இசையில் வெல்கிறானோ அவனையே திருமணம் செய்துகொள்வதாகக் கூறுகிறாள். அதன் பொருட்டு இசையரங்கு அமைக்கப்படுகிறது. பல அரசகுமாரர்கள் வந்து இசைபாடித் தோற்றுப் போனார்கள். கடைசியாக சீவக குமாரன் வந்து இசைபாடி, காந்தருவதத்தையை வென்று அவளை மணஞ் செய்து கொள்கிறான்.

ஆடவரின் காற்றும் படக்கூடாது என்று விரதம் பூண்ட சுரமஞ்சரி என்னும் கன்னிகை தனியே கன்னிமாடத்தில் இருந்தபோது, சீவகன் தொண்டு கிழவன் போலக் கிழவேடம் பூண்டு, கன்னி மாடத்தில் சென்று இசைப்பாடல் பாடுகிறான். அவ்விசைப் பாடலைக் கேட்ட சுரமஞ்சரி, தனது விரதத்தை நீக்கிச் சீவகனை மணஞ் செய்து கொள்கிறாள். இச்செய்தியைச் சீவக சிந்தாமணி, சுரமஞ்சரியார் இலம்பகத்தில் காணலாம்.

இவ் இசைச் செய்திகளை ஜைன சமயக் காவியமான சீவக சிந்தாமணியில் ஜைன சமயத்தவரான திருத்தக்க தேவர் கூறுகிறார்.

பெருங்கதை
என்னும் உதயணன் கதையும் ஜைன சமயக் காவியம். இதனை இயற்றிய புலவர் கொங்கு வேளிர் என்னும் சமணப் பெரியார். இக் காவியத்திலும் இசைக்கலையைப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.

இக்காவியத் தலைவனாகிய உதயணன் என்னும் அரசகுமரன், இளமை வயதில் பிரமசுந்தர முனிவரிடத்தில் இசைக்கலையைப் பயில்கிறான். மேலும், கோடபதி என்னும் யாழ் வாசிப்பதில் வல்லவனாக விளங்குகிறான். அவனுடைய யாழின் இசையைக் கேட்டு யானைகளும் அவன் வசமாகின்றன.

பிறகு உதயணன் அவந்தி நாட்டரசன் மகள் வாசவதத்தை என்பவளுக்கு யாழ் வாசிக்கக் கற்பிக்கிறான். பிறகு பதுமாபதி என்னும் அரசகுமாரிக்கும் யாழ் கற்பிக்கிறான். இச்செய்திகளைப் பெருங்கதை கூறுகிறது. சிறப்பாக யாழைப் பற்றிப் பெருங்கதை, மகத காண்டம், 14 நலனாராய்ச்சி, 15 யாழ்நலம் தெரிந்தது என்னும் பகுதிகளும், வத்தவ காண்டம், யாழ் பெற்றது என்னும் பகுதியும் யாழ்ச் செய்திகளைக் கூறுகின்றன.

மற்றொரு ஜைன சமய நூலாகிய ஸ்ரீபுராணம் 23ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதசுவாமி புராணத்தில் வசுதேவன் வரலாற்றைக் கூறுமிடத்தில் இசைக்கலையைப் போற்றிக் கூறுகிறது. சம்பாபுரத்து அரசன் மகளும் ஒரு காந்தருவதத்தை. அதாவது, கந்தர்வ வித்தையாகிய இசைக்கலையில் தேர்ந்தவள். அவளை இசையில் வெற்றி பெறுகிறவர்கள் அவளை மணஞ் செய்யலாம் என்று அரசன் பறையறைந்து, அதன் பொருட்டு இசையரங்கு ஏற்படுத்துகிறான். பல அரச குமாரர்கள் வந்து அரசகுமாரியுடன் பாடித் தோற்றுப் போகின்றனர். கடைசியில் வசுதேவர் வந்து இசை பாடியும் யாழ் வாசித்தும் வெற்றிபெற்றுக் காந்தர்வதத்தையை மணஞ்செய்கிறார்.

இச்செய்திகள், ஜைன சமயத்தவரால் எழுதப்பட்ட ஜைன சமய நூல்களிலே காணப்படுகின்றன. உண்மை இப்படி இருக்க, ஜைனர் இசைக்கலையை அழித்தனர் என்று கூறுவது அறியாதார் கூற்றாகும்; அல்லது, வீண்பழி சுமத்துகிற சமயப் பகைவர் கட்டிய கதையாகும். தமிழில் இலக்கண இலக்கியங்களை எழுதித் தமிழ் மொழியை வளர்த்ததுபோலவே, இசைக்கலையையும் சமணர் வளர்த்தார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

–கலை வளரும்…

________________________________________
1. காந்தருவதத்தை என்பதற்கு இசைக்கலையில் வல்லவள் என்பது பொருள். காந்தருவம் என்பது இசைக்கலை.

About The Author