கவிஞர் காசி ஆனந்தன் உருவாக்கிய ‘தமிங்கலம்’ என்ற பதம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். தமிழுக்குள் ஆங்கிலத்தைக் கலந்து பேசும் முறைக்குத்தான் இப்படியொரு பெயர் சூட்டியிருக்கின்றார் கவிஞர். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இந்தக் கலப்படம் மோசமான நிலையில் இருக்கின்றது என்பது கசப்பான உண்மை!
சரி, நாம் ஐரோப்பாவிற்குள் நுழைவோமா?
இங்குள்ள நமது பிள்ளைகள் பலரையும் இந்தத் ‘தமிங்கலம் என்னும் திமிங்கலம்’ மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பித்திருக்கின்றது.
தமிழுக்குள் ஆங்கிலம் நுழைந்தால் தமிங்கலம் என்கிறோம். ஆனால், வெவ்வேறு நாடுகளில் வாழும் நமது பிள்ளைகளிடம் ஆங்கிலம் மட்டுந்தானா நுழைந்திருக்கின்றது?
ஜெர்மன் மொழியைப் பேசும் பிள்ளைகள், தமிழை ஜெர்மன் மொழியோடு கலந்து உரையாடுகின்றார்கள். டென்மார்க்கிலுள்ள பிள்ளை தமிழோடு தன் நாட்டு மொழியைக் கலக்கின்றது. தாய்மொழி அறிவு குறைவு என்பதால், தான் சொல்ல வந்ததைத் தாய்மொழியோடு இரவல் மொழி கலந்து அந்தப் பிள்ளை எப்படியோ சொல்லி விடுகின்றது. தாம் வாழும் நாட்டில் பேசப்படும் மொழியை ஓரளவுக்கு அறிந்திருப்பதால், பிள்ளை கலப்பு மொழியில் சொல்ல வந்ததைச் சம்பந்தப்பட்டவர் சரியாக ஊகித்துக் கொள்கிறார்.
ஆனால் ஜெர்மனியில் வாழும் பிள்ளை, லண்டனிலிருந்து வரும் மாமாவுக்குச் சில விடயங்களைச் சொல்ல முற்படும்போதுதான் சிக்கல் உருவாகின்றது. தன் தமிழோடு, அடிக்கடி கலந்து பேசப்படும் ஜெர்மன் மொழிச் சொற்களின் அர்த்தம் புரியாது மாமா திருதிருவென விழிக்க வேண்டியுள்ளது. வெவ்வெறு நாடுகளிலிருந்து வருபவர்கள் கலந்துரையாடும்போது இச்சிக்கல் மோசமாகின்றது.
எனவே, இந்த விடயத்தில் பெற்றோர்கள் தம் கவனத்தை முழுமையாகத் திருப்ப வேண்டியது மிக மிக அவசியமாகும்! பிள்ளை தமிழ்ப்பதம் தெரியாமல் வேற்று மொழியை இடையில் புகுத்தும்போது, என்ன சொல்லை அந்தப் பிள்ளை அங்கு உபயோகிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பது மிக அவசியமாகின்றது. கலப்படமற்ற தமிழை, பிள்ளை பேசக் கற்றுக் கொண்டால், அது பெற்றோருக்குப் பெருமையையே தரும். சுத்தத் தமிழில் பேசுவது சற்றுச் சிரமமாகப் பிள்ளைக்கு இருந்தாலும், முடிந்த அளவு இன்னொரு மொழியைக் கலக்காது பேசுவது, பெற்றார்க்கும், சுற்றார்க்கும், மற்றோர்க்கும் பெருமை தேடித் தரும் நிச்சயம்! காலத்திற்குக் காலம் புதிய தமிழ்ச் சொற்களைச் சொல்லிக் கொடுத்தால், பிள்ளைக்குத் தான் நினைப்பதைத் தமிழில் சொல்வது சுலபமாகும்.
தமிழை வளர்ப்போம்! தரணியில் சிறப்போம்!