நேற்று நடந்த சண்டை வழக்கத்தைவிட பயங்கரமானது. நடு இரவில் வீட்டிற்குள் நுழைந்த அவன், படுக்கை அறைக்குச் சென்ற சிறிது நேரத்திற்குள் பூகம்பம் வெடித்தது. கண்ணாடி, பீங்கான் அழகுப் பொருள்களும் கோப்பைகளும் நொறுங்கி விழுந்தன. சாமான்களைப் பாழாக்குவதைவிட அவளை இரண்டு மொத்து மொத்தியிருக்கலாம் என்று அலமேலு நினைத்துக்கொண்டாள். அது அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும் ஆறுமுகம் அண்ணாச்சி செய்த மாதிரி.
பப்புவும் சுமியும் விழித்துக்கொண்டு எழுந்து கதவோரம் நின்று பார்ப்பதை அலமேலுவால் தடுக்க முடியவில்லை. மனசு ஐயோ ஐயோ என்று பதைத்தது. யாருடைய நினைப்பும் இல்லாதவர்கள்போல் அவளும் அவனும் வாக்குவாதத்தில் ஈடுபட, கடைசியில் அவள், "இனிமே சேர்ந்து வாழறதிலே அர்த்தமில்லே, பிரியத்தான் வேணும்" என்று தமிழில் நிதானமாக, மூர்க்கமான தீவிரத்துடன் சொன்னபோது, அலமேலு நடுங்கிப் போனாள்.
"போயேன்! போ!" என்று அவன் உரக்கச் சொன்னான். "நாய் ஜன்மம் போல வாழணும்னா போ. உனக்கும் எனக்கும் இனிமே சம்பந்தமிருக்கும்னு நினைச்சியா? போ!"
"நா எதுக்குப் போகணும்? இது எங்கப்பா எனக்குக் கொடுத்த வீடு. நீ தான் போகணும்."
பாதங்களைத் தொட்டபடி நகர்ந்த நீரை உணர்ந்த அலமேலு, திடுக்கிட்டுக் குனிந்தாள். அவள் புடவைக் கொசுவத்தைப் பிடித்தபடி நின்றிருந்த பப்பு சிறுநீர் கழித்திருந்தான். அவளை நிமிர்ந்து பார்த்த வட்ட விழிகளில் பீதியும் சங்கடமும் தெரிந்தன. அதரங்கள் அவமானத்தில் மடிந்துகொண்டன. அவனது நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவள்போல் சுமி அவனையும் அலமேலுவையும் மாறி மாறிப் பார்த்தாள்.
"பரவாயில்ல வா. வேற ஜட்டி போட்டு விடறேன்" என்று அலமேலு ரகசியக் குரலில் சொன்னாள். ஈரமாகியிருந்ததை அவிழ்த்து, உடம்பைத் துடைத்து வேறு ஜட்டி போட்டு, அவனைப் படுக்கவைத்தாள். தரையைத் துடைத்துத் துணியைக் கழிவறையில் அலசி உலர்த்திவிட்டு வரும்போது வீடு கப்சிப்பென்று இருந்தது. சண்டை போட்டவர்கள், வேறு வேறு இடத்தில் படுத்திருந்தார்கள். பப்புவும் சுமியும் கொட்டு கொட்டு என்று உத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
யார் தூங்கினார்களோ என்னவோ அலமேலுவுக்குத் தூக்கம் வரவில்லை. இந்த மாதிரி ஒரு நாள் நடக்கப்போகிறது என்று அவளுக்குத் தெரியும். ‘சேர்ந்து வாழறதிலே அர்த்தமில்லே.’ இவர்கள் எப்படிச் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது அவளுக்கு இந்தப் பத்து வருஷங்களாக ஆச்சரியமானதாக இருந்தாலும், இப்பொழுது அவர்கள் வாயிலிருந்து அது வெளிப்பட்டபோது, சுள்ளென்று கோபம் வந்தது. இரண்டு பேரும் கண்ணை இறுகப் பொத்திக்கிட்டுப் சின்னப் புள்ளைங்களாட்டம் பந்தாடினா எப்படி இருக்கும் அர்த்தம்? இலக்கு புரியாம ஆடற ஆட்டமில்லே அது?
அவன் தினமுமே இரவு பதினோரு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருவான். சில நாட்கள் நடுச்சாமத்துக்கு மேல் ஆகவும் ஆகும். குடிக்காத நாள் கிடையாது என்பது வாடையில் தெரியும். ஆனால் தரக்குறைவாக நடந்து கொண்டதில்லை. அதனால்தான் அலமேலு அவன் எப்பொழுது வந்தாலும் எழுந்து சாப்பாட்டை மேஜைமேல் வைப்பாள் ‘நீ எதுக்கு சாப்பாடு கொடுக்கறே’ என்று மறுநாளைக்கு அவள் கோபித்துக் கொண்டாலும்.
நேற்று அவன் வரும்போதே மகாக் கோபத்துடன் வந்தான்.அவளும் ஒன்றும் படிதாண்டாப் பத்தினி இல்லை. உற்சாகமானவள். வித விதமாக அலங்கரித்துக்கொண்டு அலுவலகத்துக்குச் செல்பவள். வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள அலமேலு இருக்கும் தைரியத்தில் சினேகிதர்களுடன் ஊர் சுற்றிவிட்டு இரவு எட்டு மணிக்கு மேல் வருவாள்.
தில்லிக்கு வந்த புதிதில் இதெல்லாம் அலமேலுவுக்கு விசித்திரமாக இருக்கும். ஆண்பிள்ளைதான் நேரங்கழிச்சு வரான்னா பொம்பளையுமா இப்படி என்று நினைப்பாள். பிறகுதான், அவர்களது தாட்பூட் சண்டைகளிலிருந்து புரிந்தது ‘இதெல்லாம் போட்டா போட்டியிலே செய்ற வேலையாக இருக்கும்’ என்று.
கிட்டத்தட்ட ரஞ்சிதத்தின் சுபாவம்தான் இவளுக்கும் என்று அலமேலுவுக்குத் தோன்றும். ‘ரஞ்சிதம், நீ எம்மாங் அழகு’ என்று ஆறுமுகம் சொல்லாததைச் சொல்லும் வட்டத்தினால் ரஞ்சிதம் ஈர்க்கப்பட்டதுபோல், இவளும் எந்தப் புகழ்ச்சி மழையைத் தேடியோ ஓடுகிறாள் என்று அலமேலு நினைத்துக் கொள்வாள். அதனால்தான் அத்தனை நண்பர்கள். ‘ஓ, நீ இப்படி. ஓ நீ அப்படி நைஸ் நைஸ் வெரி நைஸ்.’ நைஸ் என்பது ஒரு போதை என்று அலமேலுவுக்குத் தெரியும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அவள் ஒரு புதிய ஆணுடன் வந்து நடுக்கூடத்தில் அமர்ந்து "அலமேலு, சாயா கொண்டா" என்றபோது அவளிடம் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்ததை அலமேலு கவனித்தாள். முகம் பிரகாசமாக இருந்தது. கண்களில் பதினாறு வயதுப் பெண்ணின் துள்ளல் தெரிந்தது.
இன்னிக்கு என்ன புதுசா சந்தோஷம் என்ற வியப்புடன் அலமேலு சாயாவுடன் சென்றபோது அவளும் அந்த ஆளும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததில் தெரிந்த நெருக்கம் சொரேல் என்று அடி வயிற்றில் சங்கடத்தை ஏற்படுத்திற்று. சமையலறைக்குத் திரும்பியதும் ஊர் ஞாபகத்தில் ‘அடியே இது நல்லதுக்கில்லே’ என்று சொல்லிக் கொண்டாள். யார் என்ன சொல்லக்கிடக்கு என்கிற அலட்சியத்துடன் அவள் தினமும் நேரம் கெட்ட நேரம் அந்த ஆசாமியுடன் வெளியில் போய் வந்துகொண்டிருந்தாள்.
(மீதி அடுத்த இதழில்)
“