தனியே தன்னந்தனியே..!

நீங்கள் இளகிய மனம் உடையவராகவோ அல்லது வீட்டில் தனியே அமர்ந்து நிலாச்சாரலைப் படிப்பதாகவோ இருந்தால் தயவு செய்து இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். உங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நான் பொறுப்பில்லை!!

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் சென்னையில் இருந்தாலோ அல்லது நீங்கள் சென்னைவாசியாக இருந்தாலோ, நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டிய விஷயம் இது. முக்கியமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே வசிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது!!

சில நாட்களுக்கு முன் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு என் வீடு இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பஸ் ஸ்டாப்பில் நான் இறங்கியபோது மணி நள்ளிரவு 12.

பஸ் ஸ்டாப்பிலிருந்து என் வீட்டிற்கு சுமார் அரை மைல் நடக்க வேண்டி இருந்தது. திகில் படத்தில் இருப்பது போல மிரட்டும் இரவில், வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே, பயத்துடன் நடக்க ஆரம்பித்தேன். சிறிது தூரம் போனதும் ஒரு வயதான முதியவர் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பல நாள் தாடியுடனும் பெரிய சிவந்த விழிகளுடனும் பயங்கரத் தோற்றத்தில் இருந்த அவரைப் பார்த்ததும் பயம் மேலும் அதிகரித்தது.

பாட்டி சொன்ன பேய்க் கதைகளும், படித்துத் தெரிந்து கொண்ட பிசாசுகளும் நேரங்கெட்ட நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைத்தன. முதியவர் என்னைப் பார்க்கும் முன் எதிர் சந்தில் ஓடிவிடலாம் என நினைக்கையில், அந்த முதியவர் என்னை அழைத்தார்.

“ஏலே பேராண்டி, ஒரு புத்தகம் வாங்கிட்டுப் போலாம் வாடா! “

பயத்தை மறைத்துக் கொண்டு, அவர் வைத்திருக்கும் புத்தகங்களின் மேல் பார்வை பதித்தால் எல்லாம் அமானுஷ்ய கதைகளாய் இருந்தன. அவற்றில் ஒன்று மட்டும் என் கவனத்தைக் கவர்ந்தது.

“இந்த புக்கோட விலை என்ன?” எனக் கேட்டேன்.

”இருநூத்தம்பது ரூபாய் பேராண்டி”

“என்ன? இருநூத்தம்பது ரூபாயா?” என நான் சொன்னதும், சிவந்த விழிகளை மேலும் சிவக்க வைத்து முறைத்தார். எப்படியாவது இவரைக் கடந்தால் போதுமென, கையில் இருந்த 200 ரூபாயைக் கொடுத்து விட்டு, விட்டால் போதுமென வீட்டிற்குக் கிளம்பினேன்.

என்னை மீண்டும் அழைத்த முதியவர், "என்ன நடந்தாலும் புத்தகத்தோட கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காதே! மீறிப் படித்தால் உன் உயிருக்கு நான் உத்தரவாதம் இல்லை" என கூறிச் சென்றார்.

வீட்டிற்கு வந்ததும் வாசலிலேயே காத்திருந்த அம்மாவிடம், "புதுசா யாராவது புத்தகம் விற்கிற தாத்தாவை யுனிவர்சிட்டி ரோட்ல பார்த்திருக்கிறீங்களா?" எனக் கேட்டேன்.

"நான் பார்க்கலை. ஆனா ஒவ்வொரு பெளர்ணமிக்கும் ஒரு தாத்தா தவறாம யுனிவர்சிட்டி ரோட்ல நடு ராத்திரியில புத்தகம் விற்கிறதா பக்கத்து வீட்டிலச் சொன்னாங்க. யுனிவர்சிட்டியில நடந்த ராகிங்ல இறந்து போன பையனோட ஆவின்னு சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் கேட்கிறே?"

"ஒண்ணுமில்லை. சும்மாதான் கேட்டேன்" என அம்மாவைச் சமாளித்தேன். முதியவரிடம் வாங்கிய நூலைப் படிக்க ஆரம்பித்தேன். மணி இரண்டை நெருங்கும் போது, கடைசிப் பக்கத்திற்கு வந்தேன். பக்கத்தைத் திருப்பிப் படிக்கலாமா வேண்டாமா என மனதிற்குள் ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தி பின் என்ன ஆனாலும் படிப்பது என முடிவு செய்தேன்.

கடைசிப் பக்கத்தில்… ….

Original price:– Rs. 20/-

Promotion price:– Rs. 10/-

சரி, சரி யாரும் என்னை அடிக்க வராதீங்க! பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்!!

About The Author

15 Comments

  1. kalayarassy G

    நல்ல நகைச்சுவை. அதென்ன ஒரு வயதான முதியவர்? இளவயது முதியவரும் உளரோ?

  2. S.Gnanasambandan

    ஆவியிடம் புத்தகம் வாங்கிப்படித்த முதல் ஆள் (கடைசி ஆளும் தான்) நீங்களாகத் தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
    சொ..ஞானசம்பந்தன்

  3. Dr. S. Subramanian

    பேயான பேயல்லவோ
    பேய் தந்த நூல் அல்லவோ
    மாயமான கதை அல்லவோ
    ஏய்த்துவிட்ட கதை அல்லவோ!!!!!!!

  4. param

    முதலில் திக் திக். கடைசியில் சிரிப்பு நல்ல ஏமாற்றம்.

  5. kavitha

    இளநரையின்றி வயதான காரணத்தால் முதியத் தோற்றத்தைப் பெற்றதால் வயதான முதியவர்.

  6. kavitha

    ஆவியிடம் புத்தகம் வாங்கிப்படித்த முதல் ஆள் (கடைசி ஆளும் தான்) நானாக மட்டுமே இருக்கத்தான் நினைக்கிறேன்.

  7. latha

    உண்மையாகவே இன்ட்ரஸ்டிங்கா படிச்சுட்டு இருந்தேன் கடைசியில் நல்ல ஜோக்
    சூப்பர்

  8. V.Ramprakaash

    சூப்பர். வாய் விட்டுச் சிரித்த சிரந்த கதை.
    ஒக்கந்து யோசிப்பிங்கலொ

  9. kavitha

    ராம்,

    நான் அண்ணா யூனிவர்சிட்டி சாலையில நடந்து கொண்டே யோசிச்சது

  10. Mani

    கவித எதமட்ரி யொசிக உஙலல மடும் தன் முடியும்

Comments are closed.