மாலையில் குமார் வீடு திரும்பும்போது செந்தில் தொலைபேசிக்கு அருகில் உட்கார்ந்திருந்தான். அவனின் மனநிலை சரியாக இல்லை என்று தெரிந்தது அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே. இவன் ஏன் இன்னும் நைட் ஷிப்டுக்குக் கிளம்பாமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறான். அவன் முகத்தை பார்த்தபடியே தன் காலணிகளைக் கழற்றினான்.
"வேலைக்கிக் கெளம்பல்ல?", என்று கேட்டான் குமார். "ப்ச, என்ன வெலையோ என்னவோ போ. மனசே சரியில்லடா. இன்னிக்கி போன இண்டர்வ்யூவும் வழக்கம் போல புஸ்ஸாயிடுச்சு. இன்னிக்கி மெடிக்கல் லீவு போட்டுட்டேன்", என்றான் மிகுந்த சலிப்புடன்.
"அருண் அண்ணன் கம்பெனி வேலை தானே? கெடச்சமாதிரிதான்னு சொன்னியே", என்று கேட்டான் குமார்.
"ம், அப்டிதான் நம்பினேன். சொல்லியிருக்கேன் உங்களப் பத்தினு அவரு திரும்பத்திரும்ப சொன்னத வச்சி ரொம்பவே நம்பினேன்."பிடித்த மாதிரி எஸ் பாஸ¤டன் ஒரு வேலை கிடைக்கவில்லையே என்ற ஒரே கலை அழுத்த ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்துவிட்டான்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஈஸ்ட் கோஸ்டில் ஒரு காபி ஷாப்பில் காபி குடித்துக்கொண்டிருந்தார்கள். செந்தில் அருணுடன் பேசும்போது குமாரும் உடன் இருந்தான். வேலை முடிந்து நேராக அவனை அங்கே வரச்சொல்லியிருந்தான் செந்தில். கொஞ்சம் தாமதமாகத்தான் குமார் அங்குபோய்ச் சேர்ந்தான். இருவரும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து வந்தேயிருக்க வேண்டாமோ என்று கூட நினைத்துக்கொண்டான் அன்று குமார்.
மஞ்சள் வெயில் கண்களைக்கூசியது. தூரத்தே கண்ணில் பட்ட கடலும் உப்புகலந்து வீசியகாற்றும் அவனுக்கு செம்போடையை நினைவு படுத்தியது. அந்தக்கடையில் இருந்த குப்பைத்தொட்டியை இடுக்கியின் உதவியோடு தோண்டிக்கொண்டிருந்தார் ஒரு சீன மாது. இரண்டு கோக் கேன்கள் கிடைத்தன. அவற்றை எடுத்துக் காலடியில் போட்டு ‘பட்டக்’ என்று ஒரு மிதி, இடுக்கியால் எடுத்து கையிலிருந்த பையில் போட்டுக்கொண்டு அடுத்த கடையிலிருந்து குப்பைத் தொட்டிக்குப் போனார். கடற்கடையோரக் கடைகளில் இருந்த குப்பைத் தொட்டிகளை ஒவ்வொன்றாக மிகவும் பழக்கப்பட்ட லயத்துடன் சென்றடைந்து அவர் சேகரித்ததில் கிடைக்கூடிய காசு ஒன்றும் பெரியதாக இராது. அம்மூதாட்டியின் அன்றாட உணவுக்குக் கிடைக்கலாம். இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு தான் ஆற்றும் பங்கைப்பற்றி அறிவாரா அவர். ‘குமார், டேய் குமார்’, என்று செந்தில் அரைகுறைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த அவனை உலுக்கினான் அன்று. செந்திலின் விவரங்களை எழுதி வாங்கிக்கொண்டு விண்ணப்பப் படிவத்தையும் சரிபார்த்துத் தன்னுடன் எடுத்துச் சென்று விட்டிருந்தார் அருண்.
"ஏண்டா பின்ன ?"
"ப்ச, புதுசா என்ன? சம்பளத்த மட்டும் ஏத்தமாட்டானுவளாம்."
"விடுடா. நீயும் எவ்ளவோ ட்ரை பண்ற. கிடைக்காமயா போகும்? அததக்கு வேள வரணும்."
"க்கும்,. நூத்துக்கிழவன் மாதிரி பேசுடா. சில சமயம் தோணுது, உன்ன மாதிரி இருக்கற வேலையில இருக்கற வொர்க் பெர்மிட்ல எனக்கு மட்டும் ஏண்டா திருப்தியில்ல? "
"முன்னேறணும்னு ஆசையிருக்கறதுல தப்பொண்ணுமில்லடா."
வீட்டுத் தொலைபேசி அடித்ததும் குமார் எடுத்தான். எடுக்கும்போதே செந்தில் அவன் தோளைத்தட்டி சத்தம் வராமல், "அப்பாவா இருந்தா நா இல்லன்ன சொல்லு", என்றான். சிரித்துக்கொண்டே, "ஹலோ, ம், ஆமா. நா குமார் தாம்பேசறேன். செந்திலா? ரூம்பல இருக்கானான்னு பாக்கறேன். நா இப்பதான் உள்ள நுழையிறேன்."
செந்தில் கையசைத்து வேண்டாம் என்று சொல்லிக் கெஞ்சும் பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டான். "ஹலோ, இப்பதான் வெளிய கிளம்பினான்னு ஸ்டீபன் சொல்றான். நீங்க விஷயம் என்னன்னு சொல்லுங்க. நான் அவங்கிட்ட சொல்லிடறேன்."
மறுமுனையில் செந்திலின் அப்பா, "வேற என்னப்பா? அவன் ஊருக்கும் வரமாட்டேங்கறான். கல்யாணத்தை பண்ணி வச்சிடணும்னு பாக்கறேன். ஒத்தப்பிள்ளைய தனியா நா வளக்கப்பட்ட பாடு. தாயில்லாப்பிள்ளன்னு கொஞ்சம் ஓவரா செல்லம் கொடுத்துட்டேன்னு நெனக்கிறேன்,.."தொடங்கி ஒரு பாட்டம் புலம்பித்தீர்த்தார்.
அவருக்குச் சமாதானம் சொல்லிப்போனை வைத்தான் குமார். "டேய் முட்டாள் ! அவரு பாவம் நொந்து போய் பேசிட்டிருக்காரு. நீ போனக் கூட வாங்க மாட்டேன்ற. அவருக்காகவாவது ஒரு தடவ ஊருக்குப் போயிட்டுத்தான் வாயேன். என்னோடையே கெளம்பு இல்லேன்னா."
"ஒரு வாரத்துல லீவு கேட்டுக் கெடைக்குமா?"
"ஆமா, கெடைச்சுட்ட கிளம்பிடுவயாக்கும். இப்டியே போனா உங்கப்பா கெளம்பி வந்துடுவாரு உன்னப்பாக்க. எப்பிடியோ போ."
இவ்வளவு அக்கறையாக இருக்கும் அப்பாவை ஏன் உதாசீனப் படுத்துகிறான்? செந்திலின் போக்கு குமாருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
****
திவ்யாவின் கடிதம் வந்திருந்தது. செந்தில் தான் குமாரிடம் கொடுத்தான். "என்னடா? ஊருக்குப் போறதச் சொல்லியாச்சா முன்னாடியே? ம்,, ம் நடத்து", என்ற போது குமார் கையை ஓங்கிக் கொண்டு, "போட்டேன்னா,. எப்டித் தெரிஞ்சுதுன்னே தெரியல்ல. கொழம்பிட்டு இருக்கேன். இவன் வேற,. ஏதோ நண்பன்னு குடும்பத்துல எல்லாருக்கும் அறிமுகம் செஞ்சு வைக்க நினைக்கறா,.. அதுக்குள்ள கற்பன,..", என்றான் குரலை உயர்த்தி.
கையில் வைத்திருந்த கடிதத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் குமார். அந்தக் கடிதத்தில் ஒன்றும் பெரிதாக இல்லை என்று அவன் மூளைக்குத் தெரிந்தாலும் கிறுக்குப் பிடித்த மனம் திவ்யா எழுதியிருந்த, ‘ அவசியம் வீட்டுக்கு வாங்க’ போன்ற மிகச் சாதாரணமான வரிகளைக்கூட பெரிதாக நினைத்துக் குறுகுறுப்பு கொண்டது ஏனென்று தான் புரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குக் கிளம்பும் போது நேர்ந்த சற்றும் எதிர்பாராத ஒரு நட்பு.
-தொடரும்-
(நெய்தல் -மின்னூலில் இருந்து)
To buy the EBook, Please click here
“