தண்டனை எனக்கே!

அந்தத் தனியார் பள்ளியை ஒட்டி அமைந்திருக்கும் புதிய குடியிருப்பே பாரதியார் குடியிருப்பு. அதில் முதலாவது வீதி நல்ல அகலமாகவும், ஒரு புறம் பள்ளியின் சுற்றுச்சுவரும், அடர்த்தியான மரங்களும், மறு புறம் வரிசையான அடுக்கு மாடி கட்டடங்களும் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கின்ற நிலையில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்திருந்தது. சில வீடுகளின் முன்னே அவ்வப்போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டு வந்தன.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலை சுமார் பத்து மணியிருக்கும். பிரவின் தன் கிரிக்கெட் மட்டையுடன் வந்தான். அவனுடன் நன்பர்கள் தினெஷ், ரமெஷ் மற்றும் ரகுவும் உடனிருந்தனர். "எங்கே பள்ளி மைதானத்திற்கு செல்வோமா? அல்லது இங்கேயே விளையாடுவோமா?" என்று ரமெஷ் கேட்க, "இல்லை.. இல்லை.. இங்கேயே விளையாடுவோம்!" என்று பிரவின் சொல்ல, "அப்படியானால் தரைவழியாக மட்டும் பந்தினை அடிக்க வேண்டும், மேலெழுப்பி அடிக்கக்கூடாது!" என்று ரமெஷ் மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்ய, அனைவரும் ஒப்புக்கொண்டு விளையாடத் தயாரானார்கள்.

இந்நால்வரும் வேறுவேறு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள். பூவா தலையா போட்டதில் பிரவின் முதலில் மட்டை பிடிக்கவும், தினெஷ் பந்து வீசவும் தீர்மானிக்கப்பட்டது. இருவரும் ஆயத்தமாக, மற்ற இருவரும் எதிரெதிர் திசையில் தூரமாகச் சென்று நின்றனர். பிரவின் மிகச் சிறந்த மட்டையாளன்! அவனது பள்ளியில் ‘சேவாக்’ என்றே அழைக்கப்படுபவன்! இங்கே முதல் மூன்று பந்துகளை தரையோடு பலமாக அடித்துக்கொண்டு இருந்தான், அடுத்த பந்து சற்று அளவு குறைவாக மட்டைப்புறமாக வர, அதனை முன் காலில் சென்று ஓங்கி மட்டையை சுழற்றி எழுப்பி அடிக்க, பந்து காற்றில் விர்ரென்று எழும்பிச் செல்ல அது நிச்சயமாக ஆறு ஓட்டங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது! ஆனால் அங்கே ‘டஷ்.. ஜல.. ஜல.. ஜல!’ என்ற ஒலியுடன் பக்கத்து மாடி வீட்டின் முன் பகுதியில் புதிதாய் போடப்பட்ட ஒரு பெரிய அலங்கார மின் விளக்கு சுக்கு நூறாக உடைந்தது! "இப்படிச் செய்து விட்டேனே!" என்பதைப் போல பிரவின் தன் மட்டையை தரையில் அடித்தான். மற்ற மூவரும் தலையில் கை வைத்து பிரவினையே வெறித்துப் பார்த்தனர். அதே நேரம் அந்த வீட்டிலிருந்து வனஜா மாமி கடும் கோபத்துடன் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு, உரக்கச் சத்தம் போட்டுக்கொண்டே வேகமாக கீழே இறங்கி வந்தாள். அந்த மாமியின் கோபத்திற்கு பாரதியார் குடியிருப்பே நடுநடுங்கும்! அந்த மாமியைப்பார்த்ததும் நால்வரும் அவரவர் வீட்டிற்கு ஓடத் தொடங்கினர். பிரவினும் மாடியில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றவன், அப்பா முன் அறையிலேயே புத்தகம் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு தன் மட்டையை சுவற்றோரமாக வைத்துவிட்டு வேகமாக மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான். அதே நேரம் மாமி தன் வீட்டைநோக்கித்தான் வருகிறாள் என்பதை அவளது சத்தத்தை வைத்தே அறிந்துகொண்டான்.

அடுத்த இரண்டு நிமிடம் அந்த வீடே இடிந்து விழுவதைப்போல மாமி கத்திப் பேசினாள். அப்பா பேசியது பிரவினுக்கு கேட்கவேயில்லை. மாமி அவ்விடத்தைவிட்டு சென்றதும், அவனது அப்பா "பிரவீன்!" என்று கத்துவது அவனது காதில் விழ, அவனுக்கு அடி வயிறு கலக்கியது. அப்பா மொட்டை மாடிக்கு வருவதுபோலத் தோன்றியது அவனுக்கு. அவசரமாக சுற்றி சுற்றி பார்த்தவன் அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியை எட்டிப் பார்த்தான். சற்று முன்தான் அதைக்கழுவி அதுவும் நன்றாகக் காய்ந்திருந்தது. அப்போதைக்கு மின்சாரம் இல்லாததால் மோட்டார் போடப்படவில்லை. உள்ளே தொப்பென்று குதித்து உட்புறமாய் சென்று அமர்ந்து கொண்டான். அவனது தந்தை மேலோட்டமாக மாடியில் எட்டிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டார். "எப்போது வெளியே செல்வது? மத்தியானம் அப்பா வெளியே சென்று விடுவார். அதுவரை இங்கேயே இருப்போம்!" என்று தீர்மானித்தவன் "அடடா! செல்போனைக் கொண்டு வந்திருந்தால் விளையாடிக் கொண்டிருந்திருக்கலாமே!" என்று நினைத்தான். பின் மெதுவாக படுத்துக்கொண்டு அப்படியும் இப்படியுமாய் உருண்டு கொண்டிருந்தான்.

அவன் வீட்டிற்குள் செல்லும்போது முன் அறையில் அப்பாவுடன் இன்னும் பலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அதில் அவனது வகுப்பு ஆசிரியரும் இருந்தார்! ஆனால் யாரும் இவனைக் கண்டுகொள்ளவேயில்லை! பிரவின் வேகமாக சமையல் அறைக்குச் சென்றான். அங்கே அவனது பெங்களூரு அத்தை ஸ்ரீஜாவும் அவனது பள்ளித் தலைமை ஆசிரியரும் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

"ஹோம் வொர்க்கெல்லாம் முடிச்சிட்டியா?" என்று தலைமை ஆசிரியர் கேட்க, "முடிச்சிட்டேன் மேடம்!" என்று ஒருவித குற்றவுணர்ச்சியுடன் சொன்னான். "எப்படிடாயிருக்க?" என்று அத்தையும் அவனிடம் பேசினார்கள். "வசுதா பிரவினுக்கு ஸ்வீட்டெல்லாம் குடுமா!" என்று தன் மகளிடம் சொல்ல, அவளும் ஒரு தட்டில் வகைக்கு ஒன்றாக ஐந்தாறு ஸ்வீட் போட்டு அவனிடம் நீட்டினாள். ஆஹா! எல்லாம் அவனுக்கு பிடித்த பால்கோவா, முந்திரி கேக்கு, இன்னமும் புதிய வகையிலும். அவனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆசையாய் எடுத்து சாப்பிட்டான். என்ன ஆச்சரியம்! அதில் எந்த சுவையும் இல்லை! அவனது முகம் கொஞ்சம் சுருங்கியது! "இதில் இனிப்பேயில்லையே!" என்று அவன் சொன்னதும் எல்லோரும் சிரித்துவிட்டனர். "எங்களுக்கெல்லாம் இனிப்பு அதிகமாகயிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்! உனக்கு இனிப்பேயில்லையா!" என்று அத்தை கேட்டார்கள். அவன் அப்படியே கஷ்டப்பட்டு சாப்பிடத்தொடங்கினான்.

திடீரென்று அவனது தலையில் யாரோ வாளி நிரைய தண்ணீரை எடுத்து ஊற்றியதைப்போல உணர்ந்தான்! தடதடவென எழுந்து உட்கார்ந்தான். அப்போதுதான் தான் தொட்டிக்குள் உறங்கிவிட்டதை உணர்ந்தான். மின்சாரம் வந்ததும் மோட்டாரை போட்டுவிட்டார்கள். அவசரமாக தொட்டியிலிருந்து வெளியே ஏறிக் குதித்தான். அவனது தலை, முகம், தோள்பட்டை எல்லாம் தொப்பலாக நனைந்து விட்டிருந்தது. "ஐயையோ! அம்மாவிடம் என்ன சொல்வது!" என்று அவன் யோசிக்கும்போதே யாரோ அவனது காதைத் திருகுவதை உணர்ந்து தலை நிமிர்ந்து பார்க்க அப்பா நின்றிருந்தார்! அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவரது முகம் கோபத்தால் சிவந்திருந்தது. அவன் முதுகில் ரப்பென்று ஒரு அடி விழுந்ததும் அவனையறியாமல் கண்களில் நீர் வந்துவிட்டது. அவனது தோளைப் பிடித்தவாறே தொட்டியில் சில வினாடிகள் எட்டிப் பார்த்துவிட்டு அவனைத் தரதரவென்று இழுத்துச் சென்றார். வீட்டிற்குள் சென்றதும் டப் டப்பென்று முதுகிலும் தோளிலும் இரண்டுஅடிகள் கொடுத்துவிட்டு அவனது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு தான் மீண்டும் போய் புத்தகம் படிக்கத் தொடங்கிவிட்டார்.

பிரவின் சுவற்றோரமாய் நின்று அழுது கொண்டிருக்க, "ஏற்கனவே வீட்டில் கடன் தொல்லை, தீபாவளி வேறு வருகிறது. இந்நேரத்தில் ஒரே நிமிடத்தில் 1800 ரூபாய்க்கு தண்டம் வைத்துவிட்டாயே! எப்படிடா சமாளிப்பது?" என்று கேட்டபடியே அவனது அம்மா பக்கத்தில் வந்து ஒரு துண்டினால் அவனது தலையைத் துவட்டத்தொடங்கினாள். "இந்த தீபாவளிக்கு உனக்கு ட்ரெஸ் எதுவும் எடுக்கப்போறதில்ல! அப்பத்தான் உனக்கு புத்தி வரும்!" என்று அம்மா சொல்ல, அவனது உள்ளத்தில் கவலை முழுவதுமாக தொற்றிக்கொண்டது. "என்ன இருந்தாலும் தான் செய்தது தவறுதான்!" என்ற எண்ணத்தில் மௌனமாக இருந்தான். அதன் பின் அடுத்த பதினைந்து நாட்களும் செயற்கையான மகிழ்ச்சியை முகத்தில் வரவழைத்துக் கொண்டான்.

தீபாவளி நெருங்க நெருங்க அவனது வயிற்றில் ஒருவித சங்கடம் அதிகமாகிக்கொண்டே வந்தது. தீபாவளியன்று அதிகாலை அம்மா எழுப்ப, "எனக்குத்தான் தீபாவளியே இல்லையே!" என்று மனதுக்குள் எண்ணியவனாய் சுறுசுறுப்பேயில்லாமல் எழுந்துகொண்டு மெதுவாக பல் துலக்கச் செல்லும்போது, தற்செயலாய், பூஜையறையில் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த ட்ரெஸைக் கவனித்தான்! அவசரமாக அதனை எடுத்துப்பார்த்தவன் உற்சாக மிகுதியால் துள்ளிக் குதித்தான்! "அம்மா.. எப்ப ட்ரெஸ் எடுத்தீங்க! யாருடைய செலக்ஷன்!" என்று கேட்டவன் அவரது பதிலை கேட்பதற்கு கூட பொறுமையில்லாதவனாய் "சூப்பர் செலக்ஷன்மா!" என்று சொல்லியவனாய் அவசரமாகக் குளிக்கச் சென்றான். பின் வந்து ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஒரு பத்து நிமிடம் கண்ணாடி முன் நின்று அப்படியும் இப்படியுமாய் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தவன், ஆ! ஊ! என்று ஆக்ஷனெல்லாம் செய்யத் தொடங்கிவிட்டான்!

"வா! வந்து பட்டாசெல்லாம் விடவேணுமில்லையா!" என்று அப்பா கேட்க "இதோ வந்திட்டேன்!" என்று சொல்லியபடியே நடனமாடிக்கொண்டே வெளியே அப்பாவுடன் சென்றான். கீழே வீட்டு முன் "ரொம்பவும் குனியாதே! பட்டாசையும் ஊதுபத்தியையும் ஒரே கையில் வைத்துப் பிடித்துக் கொள்ளாதே! ஊதுபத்தியை தள்ளிப் பிடித்துக்கொள்!" என்று அவன் அப்பா அறிவுரைகளைச்சொல்லிக்கொண்டேயிருக்க, "சரிப்பா! சரிப்பா!" என்று சொல்லிக்கொண்டே உற்சாகமாய் வெடித்துக்கொண்டிருந்தான். "போதும் மேல வாங்க; கோவிலுக்குப் போயிட்டு வந்து மீதிப் பட்டாசு விடலாம்." என்று அம்மா சொன்னதைக் கேட்டு பட்டாசு நிறைந்த பையை எடுத்துக்கொண்டு அப்பா உடனே "பிரவின் மேல வா!" என்று சொல்லியபடியே வேகமாகச்செல்ல.. கொஞ்சம் சலிப்புடன் பிரவினும் சென்றான்.

சிறிது நேரத்தில் மூவரும் புறப்பட்டு வெளியில் வரும்போது பிரவின் அவனது பெற்றோரைக் கவனித்தான். அப்பா பழைய பழுப்பு வெள்ளை நிறச்சட்டையும் வேட்டியும் அணிந்திருக்க, அம்மாவோ சென்ற தீபாவளிக்கு எடுத்த குங்கும நிற புடவை கட்டியிருந்தார்! "உங்க ரெண்டுபேர்க்கும் புது ட்ரெஸ் எடுக்கலையாம்மா?" என்று அவன் கேட்க, "இல்லடா.. எங்களுக்கு ட்ரெஸ் எடுத்துக்கல!" என்று அம்மா சொன்னதும் அவனுக்கு என்னவோ போலிருந்தது. அந்த இரண்டு மணி நேரம் அவனது மனதிலிருந்த மகிழ்ச்சியெல்லாம் நொடியில் மறைந்து ஒருவித கவலையும், வெட்கமும் பீடித்துக்கொண்டது.

"தவறு செய்தவன் நான்! தண்டனையில் எனக்கும் பங்குண்டு! நான் மட்டும் எப்படி சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்!" என்று எண்ணியவன் "ஒரு நிமிஷத்தில வரேம்மா!" சொல்லிக்கொண்டே வேகமாக உள்ளே சென்றவன், இரண்டு நிமிடத்தில் சென்ற தீபாவளி ட்ரெஸை அணிந்து வந்தான்! "ஏண்டா ட்ரெஸ் மாத்தின?" என்று அம்மா கேட்க, "நான்தான் தவறு செய்தேன்! நீங்க எப்போ புது ட்ரெஸ் போடறீங்களோ அப்பத்தான் நானும் போடுவேன்!" என்று சொல்லியபடியே முன்னே படிக்கட்டில் இறங்கத்தொடங்கினான்!

அவனது பெற்றோருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! அவன் அம்மா, அப்பாவைப் பார்த்து பெருமையாக புன்னகை புரிந்தார். அவரும் மெல்லியதாய் சிரித்தார்.

About The Author

2 Comments

  1. suhanya

    Childrens are so smart,they just asking for a small gidance,thats it,this story is a good example for that.Nice one sir.

Comments are closed.