பொதுவாக டாக்டர்கள் என்றாலே எனக்கு அலர்ஜி.
"அலர்ஜியா? அதற்குக்கூட டாக்டர் இருக்கிறார், கவலைப்படாதே" என்கிறான் என் நண்பன்.
ஆம், இப்போதெல்லாம் பாதாதி கேசம் ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனி டாக்டர்கள். முகத்துக்குள்ளேயே தலை, காது, மூக்கு, வாய், தொண்டை, பல், கண் என்று அக்கு அக்காகப் பிரித்துக்கொண்டு விடுகிறார்கள் தங்களுக்குள். போகப் போக முழங்கையில் வலி என்று போனால் வலதா இடதா? என்று கேட்பர்களோ என்னவோ! இதைப்பற்றிக் கொஞ்சம் கழித்துப் பேசுவோம்.
அந்தக் காலத்தில் – அந்தக் காலம் என்றால் ஏதோ ஆதெள கீர்த்தனாரம்பத்திலே என்று நினைக்க வேண்டாம்! நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்த காலங்களில் எந்த வியாதியானாலும் பொது மருத்துவரிடம்தான் முதலில் போவோம்.
எங்கள் தெருவில் ‘சாரி’ என்று ஒரு ராசியான டாக்டர். கோட்டு, தார் பாய்ச்சு வேஷ்டி கட்டிக் கொண்டு நாமத்துடன் ஸ்கூல் ஹெட் மாஸ்டர் மாதிரி இருப்பார். பெஞ்ச்சில் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் வந்தால் எங்கே பென்ச் மேல் ஏறச் சொல்வாரோ என்று கொஞ்சம் பயமாகாகக் கூட இருக்கும். தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி என்று என்ன வியாதியாயிருந்தாலும் இஞ்செக்ஷன்தான். எல்லா வியாதிக்கும் அதே இஞ்செக்ஷன்தானா என்று தெரியாது!! அவரிடம் வைத்தியத்திற்குப் போனவர்கள் மறுபடியும் திரும்பி வருவதில்லை (தேவலையாகிவிடும் என்ற நல்ல அர்த்தத்தில்தான் சொல்கிறேன்!).
அப்புறம் ஒரு தரம் எனக்குக் கையில் என்னவோ சிரங்கு மாதிரி சிவப்பாக வந்திருந்தது. ஆயுர்வேத டாக்டர் ராம சர்மாவிடம் போனால் சரியாகிவிடும் என்றார்கள். (ஆயுர்வேத டாக்டர்கள் என்றாலே பெரும்பாலும் சர்மாவாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது!) அவர் பார்த்துவிட்டு, ‘குக்குலிதித்த கிருதம்’ என்று ஒரு கிரதம் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் என்று கொடுத்தார். அதைச் சாப்பிடுபவர்கள் மட்டுமில்லை – அந்தப் பிராந்தியத்தில் ஒரு கிலோமீட்டர் விஸ்தீரணத்தில் இருப்பவர்கள் கூட மூக்கைப் பொத்திக் கொள்ளும்படியான அப்படி ஒரு அதீத வாசனை!! (இப்போது நினைத்துப் பார்க்கும்போது என் மனைவி போடும் காஃபியே தேவலை என்று சொல்லுமளவிற்கு!!) அதோடு சூரணப் பொட்டலங்கள் – தேனுடன் குழைத்துச் சாப்பிட- கிருதம் கொடுத்ததிற்குப் பிராயச்சித்தம் செய்வது போல!
அதே திருச்சியில் ஸ்ரீனிவாசன் என்றொரு டாக்டர். அவர் எம்.பி.பி.எஸ். படித்துத்தான் டாக்டர் பட்டம் வாங்கினாரா என்று தெரியாது. ஆனால் உடம்பு சரியில்லாதவர்கள் ‘ஏதோ அந்தப் பக்கம் போனால் பாவம்’ போல ஒதுங்கி வேறொரு டாக்டரிடம் போவார்களே தவிர, இவரைத் தவிர்ப்பார்கள். பேஷன்ட் யாராவது தப்பித் தவறி வந்து விட்டால் அவர் உடனே அவரை மாடிக்கு தனது கன்சல்டேஷன் அறைக்கு அனுப்பிவிட்டு டாக்டருக்கான பந்தாவுடன் வேஷ்டியை மாற்றி பேன்ட் போட்டுக் கொண்டு ஸ்டெதாஸ்கோப்பைத் தேடிக் கண்டுபிடித்து வந்துதான் கவனிப்பார் – யாரும் அடுத்ததாக இல்லாவிட்டாலும் ‘நெக்ஸ்ட்’ என்று சொல்லாமல் இருக்க மாட்டார்.
டாக்டர்கள் மற்றும் சர்ஜன்கள் பற்றிய ஜோக்குகள்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலாவதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக நர்ஸ்கள். எந்த டாக்டரும் ஆபரேஷன் செய்து பேஷண்ட் பிழைத்தாக ஜோக்குகளில் சரித்திரமே கிடையாது!!
திரைப்படங்களில் வரும் டாக்டர்களில் ஓமக்குச்சி நரசிம்மனைப் போல ஒல்லியாக இருமிக் கொண்டே வந்து வீட்டில் வைத்தியம் பார்ப்பது ஒரு ரகம். இன்னொரு ரகம் திரைக்கதைகளுக்கு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதுவரை சிரித்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த கதாநாயகி அல்லது நாயகனுக்கு ரத்தப் புற்று நோய் – அதாவது ‘ப்ளட் கான்சர்’ என்பார்கள். அல்லது, இன்னும் பன்னிரண்டு மணி முப்பது நிமிஷம் கழித்துத்தான் நிச்சயமாகச் சொல்ல முடியும்; இனிமேல் எல்லாம் அவன் கையில்தான் இருக்கிறது என்று மேல் நோக்கிக் கை விரிப்பார்கள். அந்த இடைவெளியில் கதாநாயகி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வேப்பிலையுடன் புலு புலு என்று குலவை கொட்டி, கோஷ்டி நடனமாடி, தீச்சட்டி ஏந்தி, மண் சோறு சாப்பிட்டு, அங்கப்பிரதட்சிணம் செய்ய நேரம் ஆகிவிடும். கதாநாயகனும் சரியாக பன்னிரண்டு மணி முப்பது நிமிஷத்தில் கண் இமைகளைத் திறந்து, "நான் எங்கிருக்கிறேன்?" என்று கேட்பான்!!
டாக்டர்களைப் பற்றி ஜோக் சொல்பவர்கள், பேஷண்டுகள் டாக்டர்களைப் படுத்தும் பாட்டையும் உணர வேண்டும். அவர்கள் படுத்துவதில் சில சமயங்களில் டாக்டரே பேஷண்ட் ஆகிவிடுவார்.
என் தந்தைக்கு டாக்டர்களிடம் போவதென்றால் தனி குஷி. மருந்து மாத்திரைகளையெல்லாம் ஒழுங்காக அடுக்கி அதற்கென்று ஒரு பெட்டியில் ஒரு குட்டி பார்மசி போல வைத்திருப்பார். பல டாக்டர்களைச் சந்தித்ததில் அவரே ஒரு அரை டாக்டராகி விட்டார். ஏதாவது தலைவலிக்கு அல்லது உடம்பு வலிக்குப் புதிதாக மாத்திரை வந்தால், ஏதோ புது டிசைன் சட்டை அல்லது செருப்பு மார்க்கெட்டில் அறிமுகமானால் வாங்குவதைப் போல, அதை வாங்கி விடுவார்.
டாக்டரிடம் தன் மருத்துவ அறிவை வெளிக்காட்டுவதில் அவருக்குத் தனி மகிழ்ச்சி! யாராவது டாக்டரிடம் அழைத்துச் செல்லும்போது அங்கு கூட்டமில்லாமல் இருந்தால் "இவர் தேங்காய் மூடி டாக்டராக இருப்பார் போலிருக்கு; வேறு டாக்டரிடம் போகலாம்" என்பார்.
என் மனைவி ஒரு முறை அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் என் அப்பா கேட்ட கேள்விகளில் திணறிப் போய், என் மனைவியிடம் தனியாக "அடுத்த முறை தயவுசெய்து அவரை இங்கு அழைத்து வராதீர்கள்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்!
முன்னெல்லாம் மனநோய் வைத்தியம் பார்க்கும் டாக்டரிடம் போகத் தயங்குவார்கள். அவரையே ‘பைத்தியக்கார டாக்டர்’ என்பார்கள். இப்போது குடும்ப வாழ்க்கையில், வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தங்களுக்காக டாக்டரைப் பார்ப்பதை யாரும் கேலியாக நினைப்பதில்லை. எல்லா டாக்டர்களிடமும் போவதுபோல அந்த டாக்டரையும் சகஜமாக சந்திக்கிறார்கள் என்பது வரவேற்க வேண்டிய ஒரு விஷயம். ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கும் பயித்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சா’ என்று முடியைப் பிய்த்துக் கொள்ளும் விசுவின் வசனம் ஞாபகத்திற்கு வருகிறது!
பொதுவாக டாக்டர்களைப் பற்றி ஒரு குறை உண்டு. அவசியமில்லாமல் எல்லா பரிசோதனைகளுக்கும் எழுதிக் கொடுத்து விடுகிறார்கள் என்று. ஆனால் நாளுக்கு நாள் புதுப் புது வியாதிகள் வர வர டாக்டர்களும் தனித்தனி வியாதிகளுக்கான ஸ்பெஷலிஸ்டுகளும் அதிகமாகிக் கொண்டுதான் போகிறார்கள். கோவிலில்லா ஊரில் குடியிருக்கலாமோ என்னவோ, டாக்டரில்லாத ஊரில் நிச்சயமாக வாழ முடியாது!