டயாபடீஸா – செக்ஸ் பற்றிக் கவலை வேண்டாம்!

சமீபத்திய டைம்ஸ் ஆஃப் இந்தியா (6-10-2009 இதழ்) பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் வந்துள்ள செய்தி – 44 சதவிகித டயாபடீஸ் நோயாளிகள் செக்ஸ் பிரச்சினைகளைக் கொண்டுள்ளார்கள் என்றும் இதில் தலையாய பிரச்சினையாகத் திகழ்வது ஈ.டி. எனப்படும் எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (Ereticle disfunction) என்றும் தெரிவிக்கிறது.

உலகெங்கும் கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை இருந்து வந்ததை விட ஆறு மடங்கு அதிகம் நோயாளிகள் டயாபடீஸால் அவதிப்படுகிறார்கள் என்றும் இவர்களுக்கு முக்கிய பிரச்சினை தாம்பத்ய உறவே என்றும் மருத்துவர்கள் அறிவிக்கின்றனர்.

டெரிக் சி. போலோன்ஸ்கி தனது ‘Talking about sex’ என்ற புத்தகத்தில் ஆண்கள் பெண்கள் இரு பாலாரிலும் 20 சதவிகிதம் பேர் செக்ஸ் உறவில் பிரச்சினை என்று தெரிவிப்பதாகக் கூறுகிறார். ஆனால் இது இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து விட்டதால் உலகெங்கும் கேட்கப்படும் மருத்துவ சம்பந்தமான கேள்விகளில் டயாபடீஸ் நோயாளிகளின் இல்லற செக்ஸ் வாழ்க்கை பற்றிய கேள்வி முன்னணியில் நிற்கிறது.

போலோன்ஸ்கி முதலில் உடல் வியாதி என்ற நிலையில் இது ஆரம்பித்து உணர்ச்சி பூர்வமான வியாதியாகிறது என்கிறார்.

ஆண்களில் ஜனன உறுப்பின் விறைப்பு இன்மை விவாகரத்தில் கொண்டு போய் விடுகிறது. சென்னை ஆய்வானது 40 வயதிற்கும் கீழே உள்ளோர் இதில் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கும் போது பிரச்சினையின் தீவிரம் தெரிகிறது!

பெண்களுக்கு டயாபடீஸ் என்றால் இன்னும் அதிகமான பிரச்சினை ஆகிறது. ஆர்காஸம் இன்மை, செக்ஸில் திருப்திக் குறைவு, செக்ஸ் உறவே வேண்டாம் என்று ஒதுங்கிப் போதல், கர்ப்பிணி என்றால் அதிக பயம் என்று பல்வேறு ரூபங்களில் டயாபடீஸ் கொடுமைப்படுத்துகிறது. இதனால் மனச்சோர்வு, கவலை முதலியவற்றால் எழும் வியாதிகள் தனி நபர் பிரச்சினையிலிருந்து குடும்ப பிரச்சினையாக மாறி விடுகிறது! பெண்களுக்கு ஜனன உறுப்பில் இன்பெக்ஷன் பிரச்சினை அதிகமாக இருக்கிறது.

பெண்கள் டைப் 1 டயாபடிக் நோயாளிகளைப் பற்றிய ஆய்வு டைப் 2 நோயாளிகளை விட அதிகமாக நடைபெற்றுள்ளது. ஆனால் டைப் 2 டயாபடிக் நோயாளிகளே அதிகமாக செக்ஸ் குறைபாடு உள்ளவர்களாகத் திகழ்கிறார்கள். இல்லற உறவின் போது ஜனன உறுப்பில் உயவுத் தன்மையின்மை என்ற பிரச்சினை இவர்களுக்கு ஏற்படுகிறது. இவர்கள் தாங்கள் டயாபடிக் டைப் 1 பெண்மணிகளை விடக் குறைந்த கவர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறோம் என்ற உளவியல் ரீதியான பிரச்சினையால் வேறு அவதிப்படுகிறார்கள்!

சரி இவர்களுக்குத் தீர்வுகள் உண்டா?

நல்ல நியூஸ் – உண்டு!

முதலில் ஒரு நல்ல டாக்டரை, அவர் அன்போடு நண்பராகப் பழகும் விதத்தில் அமைபவரை நாடுதல் வேண்டும். சில ஹைபர் டென்ஷனுக்கான மருந்துகள் பக்க விளைவாக விறைப்பின்மையை ஏற்படுத்தி விடும். நல்ல டாக்டரே இதில் உதவி புரிய முடியும்.

இரண்டாவதாக, உணவில் நல்ல கட்டுப்பாடு வேண்டும்.

மூன்றாவதாக, நல்ல உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நான்காவதாக, எடையை அவ்வப்பொழுது கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எடையைக் கட்டுப்படுத்தி விட்டால் தன்னம்பிக்கை பிரகாசிக்கும்.உடல் அழகை மெருகூட்டிக் காண்பிக்கும். எடையைக் குறைக்க சிறிது அளவு செறிவூட்டமுள்ள உணவை அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

ஐந்தாவதாக, வயது ஆக ஆக செக்ஸ் உணர்வுகள் இயல்பாகவே குறைவாகும். மேலும் செக்ஸ் உணர்ச்சி உந்தி எழுந்து உடல் உறுப்பில் அதன் தாக்கம் தெரியவும் கூடுதல் நேரம் ஆகும். ஆகவே தம்பதிகள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதோடு தேவையென்றால் மருத்துவர் ஆலோசனையையும் நாட வேண்டும். ஒரு நல்ல நியூராலஜிஸ்டை அணுகலாம்.

டயாபடிக் நியூரோபதி என்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் செக்ஸ் உறவுப் பிரச்சினை மிக மெதுவாக இருப்பதில் ஆரம்பித்து ஆண்மைக் குறைவு வரை அதிகரிக்கும். முன்பு போல உடனடி விறைப்பு இல்லையே என்ற ஏக்கம் எழலாம். ஆனால் இதற்கெல்லாம் இப்போது தகுந்த மருந்துகள் வந்து விட்டன என்பதால் கவலை வேண்டாம் என்ற நல்ல செய்தியே முன்னால் வருகிறது!

எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுகுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக வியாதி போய் நார்மல் நிலைக்குத் திரும்பலாம். ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி அவதிப்படுவோர் ‘கண்டு அறியப்படாத டயாபடீஸால்’ அவதிப்படுபவராகவும் இருக்கலாம். தனக்கு டயாபடீஸ் என்று அறிந்து கொண்டாலே பாதி வெற்றி அவருக்கு. மீதியை வியாதியைக் குணப்படுத்துவதன் மூலம் பூரண குணம் அடையலாம்.

இன்றைய வாழ்க்கையில் மன அழுத்தம் மல்டி நேஷனல் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனங்களில் ஏற்படும் கடும் வேலையின் தாக்கமும் கூட டயாபடீஸ்காரர்களிடம் செக்ஸ் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே ஓய்வான நிலையைத் தேடிப் பெற்று வாழ்க்கையை அனுபவிக்க இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் ஜனன உறுப்பில் அதிக ரத்தம் பாய்வதற்கான வழிகளை நவீன மருத்துவம் கண்டுபிடித்து செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. மிராகிள் க்யூர் என்று எதுவுமே டயாபடீஸில் கிடையாது. அதே சமயம் குணப்படுத்த முடியாதது என்று இதை ஒதுக்கி விடும் அளவு அபாயமும் இல்லை.

மேலே கொடுத்துள்ள டிப்ஸ் 90 சதவிகிதம் நோயைப் போக்கி விடும் – மீதி உள்ள பத்து சதவிகிதமான உங்கள் முயற்சியை முன்னுக்கு கொண்டு வந்தால்!

வாழ்க வளமுடன் ஆரோக்கியமான இல்லற உறவைப் பெற்று!

About The Author

3 Comments

  1. Mannai Pasanthy

    டயாபடிக் உள்ளவர்களூக்கு சரியான டிப்ஸ். நன்றி

Comments are closed.