ஞான ஸ்நானம்

மணிகர்ணிகை கட்டத்தில்
மண்டியெழும் புகைச்சுருள்
மனக்கண்ணைத் திறக்கிறது;

பணமும் பதக்கமும்
பரபரத்துத் தேடியவை
படர்ந்துஎழும் தீநடுவில்

சிதைக்கின்ற உடலருகே
சிறிதளவும் காணவில்லை;
சிற்றெறும்பாய் அலைந்தோடி

விதைத்திருந்த வினைப்பயன் தான்
விட்டகலா துடன்செல்லும்;
விசிறியெழும் செந்தழலில்

உருக்குலையும் அந்தஉடல்
உயிர்மூச்சு விடுபடுமுன்
உமிழ்ந்துவிட்ட எச்சில்
—வேறு
கருவரையுள் புகுவதற்காய்
காமத்தைத்தேடி உயிர்
காற்றுவெளி அலைகிறது.

கங்கையின்மேல் மிதந்துவரும்
கரித்தூளும் பூவும்பொய்க்
கனவுகளைக் கலைத்தனவால்

முங்கி குளிக்குமுன்னே
மூலக் கருப்பொருளின்
மூர்ச்சையில்நான் வயமானேன்

About The Author