ஞான ஆலயம் அகிலாண்ட கோடி நாயகி (1)

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே சரணம்!

அண்டங்களைக் காக்கும் பராசக்தி

மீனாட்சி அம்மன் கோவிலிலோ அல்லது வேறெந்த அம்பிகை கோவிலிலோ நமக்கு முன்னர் அம்பாளின் முன் நின்று அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே, தாயே என்னை காப்பாற்றம்மா என்று பலரும் வேண்டிக் கொள்வதை நாம் எத்தனை முறை பார்த்திருக்கிறோம்?

அப்போதெல்லாம் அந்த வேண்டுதலில், இன்றைய மிகப் பெரும் விஞ்ஞானிகளெல்லாம் வியக்கும் மாபெரும் உண்மை போகிற போக்கில் சில வார்த்தைகளில் காட்டப்படுகிறது என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்பார்கள்?

அறிவியல் விஞ்ஞானிகள் அனைவரும் பிரபஞ்சத்தின் அகல, நீள, ஆழத்திற்கு ஒரு முடிவே இல்லை என்ற உண்மைக்கு வந்து விட்டார்கள். அண்டங்கள் கோடி, அதற்கும் மேலே கோடானு கோடி இருக்கக்கூடும் என்பது அவர்களது முடிவு!

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான சக்தியின் தத்துவம் எல்லையற்ற துல்லியத்துடன் அனைத்தையும் இயக்கி வருகிறது!

மாக்ஸ் டெக்மார்க்கின் இணை பிரபஞ்ச தத்துவம்

2003-ம் ஆண்டு மே மாத ஸயின்டிபிக் அமெரிக்கன் இதழில் பாரலல் யுனிவர்ஸ் என்ற தனது கட்டுரையில் மாக்ஸ் டெக்மார்க் என்ற விஞ்ஞானி "இதே கட்டுரையை உங்கள் ஜெராக்ஸ் காப்பியான இன்னொரு "நீங்களே" வாசித்துக் கொண்டிருப்பீர்கள் என்பதை நம்ப முடிகிறதா?

ஒருவேளை அவர் நீங்கள் படிக்கும் இதே சமயம் இந்தக் கட்டுரையைப் படித்து முடித்து விட்டுக் கீழே இதழை வைத்திருப்பார்." என்ற வரிகளோடு தன் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.

நமது பூமியைப் போல இன்னொரு பூமி 10 to the 10 power 8 என்ற கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருப்பதையும் விளக்குகிறார்.

விஞ்ஞானிகள் நமது பிரபஞ்சம் போலவே இணையான "பாரலல் பிரபஞ்சம்" (Parallel universe) இருக்கிறது என்பதை கணிதப் பூர்வமாக நிரூபித்துவிட்டதன் வெளிப்பாடே மாக்ஸ் டெக்மார்க்கின் கட்டுரை வடிவமாக உலகின் பிரபல விஞ்ஞான பத்திரிக்கையில் வந்துள்ளது!

ஹ்யூ எவரெட்டின் பல்பிரபஞ்சக் கொள்கை

இதைவிட ஒரு படி மேலே போய் தீவிர பகுத்தறிவு விஞ்ஞானியான ஹ்யூ எவரெட்டின் பல் பிரபஞ்சங்கள் கொள்கையை ஸயின்டிபிக் அமெரிக்கன் டிசம்பர் 2007 இதழில் தனது கட்டுரையில் விளக்கி எழுதி பீட்டர் பைர்ன் என்ற எழுத்தாளார் விஞ்ஞானிகளையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறார்!

ஹ்யூ எவரெட் (Hugh Everett) அபூர்வமான கணித நிபுணர். 1954-ம் ஆண்டு ஒரு நாள் நள்ளிரவில் பல பிரபஞ்சங்கள் உள்ளன என்ற கொள்கையைக் கண்டு பிடித்து அதை ஒரு கட்டுரையாக எழுத அவரை விஞ்ஞான உலகம் எள்ளி நகையாடியது. இதனால் வெறுத்துப் போன அவர் இயற்பியலையே விட்டுவிட்டு ராணுவ ரகசிய ஆராய்ச்சியில் இணைந்து சாரமில்லாத ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து 1982, ஜூலை மாதம் 19ம் தேதி தனது 51-ம் வயதில் மரணமடைந்தார்.

ஆனால் அவரது விஞ்ஞான கொள்கையை இப்போது ஆராயும் பல்வேறு விஞ்ஞானிகள் அதில் உள்ள உண்மையைப் புரிந்து கொண்டு விளக்கி வருகின்றனர்; அவரைப் போற்றிப் புகழ்கின்றனர்!.

பி.பி.சி. நிகழ்ச்சி

2002ம் ஆண்டு பி.பி.சி. ஒளிபரப்பிய பாரலல் யுனிவர்ஸஸ் என்ற தொடரில் விஞ்ஞானிகளின் இந்த கொள்கை விரிவாக விளக்கப்பட்டது. அத்தோடு இந்த எல்லையற்ற பிரபஞ்சங்கள் ஒரு மிலி மீட்டர் தூரத்திலேயே இருக்கின்றன என்ற சுவையான செய்தியையும் அது தந்தது!

மாறுபட்ட பிரக்ஞை நிலையில் நாம் காணும் உலகங்கள்

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக உள்ள பிரபஞ்சங்கள் பிரக்ஞையின் மாறுபட்ட நிலைகளில் எளிதில் அடைய முடியும் என்று இந்த நிகழ்ச்சியில் தெளிவாக விளக்கப்பட்டது!

மிக உயரிய (மூன்று டைமன்ஷனுக்கு அப்பாற்பட்ட) வேறுபட்ட பரிமாணங்களில் இதை உணருவது சாத்தியமே என்கிறது பி.பி.சி.யின் விஞ்ஞான நிகழ்ச்சி!

இந்த சூட்சும உலகங்களை யோக வாசிஷ்டம் மிகத் தெளிவாக விளக்குகிறது.

கிருஷ்ணர் அர்ஜுனனுடன் பிரபஞ்ச யாத்திரை செல்லும்போது அர்ஜுனன் பல்வேறு உலகங்களைப் பார்த்து வியந்து கிருஷ்ணரிடம் அது பற்றிக் கேட்க அவர் தக்கவாறு கூறும் பதிலை மஹாபாரதத்தில் வேத வியாசர் விளக்குகிறார்.

(இறந்தவர்கள் தங்களது செயல்களுக்குத் தக்கபடி வெவ்வேறு உலகங்களுக்குச் செல்வதை அர்ஜுனன் பார்க்கிறான். அன்னத்தை தானமாகத் தந்தவருக்கு அவரை அழைத்து செல்ல அன்ன ரதம் வருவதை அர்ஜுனன் பார்த்து வியக்கிறான்!)

கிருஷ்ணர் பதினாயிரம் கோபிகளுடன் ஒரே சமயத்தில் இருந்தார் என்பதும், மஹரிஷி தௌம்யர் ஒரே சமயத்தில் தன் மனைவிமார் அனைவருடனும் தனித்தனியே இருந்தார் என்பதும் இந்த விஞ்ஞான யுகத்தில் புதிய கோணத்தில் பார்க்க முடிகிறது.

(மீதி அடுத்த இதழில்)”

About The Author

2 Comments

  1. rajesh

    அன்புள்ள நாகராஜன், தஙள் பதிவுகள் பாராட்ட தக்கவை. ஆர்குடில் தாஙகள் உருப்பினரா! இன்டெர் பைத் டயலாக் என்னும் இழையில் இசுலாமியர்களின் இம்சை தாங்க முடியவில்லை! அதுபோல் தமிழ் இந்து என்ற இழைலும் பொறுக்க முடியவில்லை. தாங்கள் விரும்பினால் நான் அழைப்பிதழ் அனுப்புகிறேன்.

  2. Balaji.G.R

    ஈ நேட் அ ளக்ஷ்மி கட்யம் இன் ந்ரிட்டென் fஒர்மட்.

Comments are closed.