ஆம்! ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கி, கடந்த 2012-உடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன!
ஆங்கிலேய எழுத்தாளர் இயன் பிளெமிங்கின் பிரபலமான புதினங்களை அசாத்தியமான முறையில் திரைப்படங்களாக்கி ஜேம்ஸ் பாண்டு கதாப்பாத்திரத்தை உலகப்புகழ் பெற வைத்து விட்டார்கள் ஆங்கிலத் திரையுலகினர்! இதில் வரும் மிஸ்.மணி பென்னி, எம் (M) போன்ற பாத்திரங்களும் உலகறிந்தவை! மது, மாது, நவீன மின்னியல் சாதனங்கள் ஆகியவற்றைக் கொண்டு கற்பனையின் உச்சத்துக்குக் கொண்டு செல்பவை இந்த ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் என்பதை எவருமே ஒப்புக் கொள்வர்.
ஒரே வகையான தொடர்த் திரைப்படங்களை 50 ஆண்டுகளாகத் தருவது என்பது இமாலயச் சாதனைதான்! நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், காலத்திற்குக் காலம் படங்களுக்கு மெருகூட்டி, உயிரோட்டமாகத் திரையிட்டுக் கொண்டே இருப்பது மெச்சத்தக்க சாதனைதான்! தனது 56ஆவது வயதில் மரணமடைந்த இயான் பிளெமிங் இன்று உயிரோடு இருந்தால் தன் கதாப்பாத்திரங்கள் வெள்ளித்திரையிலும் அடைந்திருக்கும் இந்த மாபெரும் வெற்றியைக் கண்டு பிரமித்துப் போய்விடுவார்.
ஜேம்ஸ் பாண்டுகள்:
முதல் ஜேம்ஸ் பாண்டு திரைப்படம் 1962இல் வெளியான ‘டாக்டர்.நோ’ (Dr.No). 1971ஆம் ஆண்டு வரையிலான இந்தக் காலக்கட்டத்தில் மொத்தம் ஆறு திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார் ஷான் கானரி. அவருக்கு அப்போது வயது 41. 1973இல் இவரைவிட ஒரு படம் அதிகமாக -அதாவது 7 படங்களில்- பாண்டாகத் தோன்றினார் ரோஜர் மூர் (Roger Moore). மொத்தம் 4 திரைப்படங்களில் பாண்டாகக் கலக்கினார் பியர்ஸ் பிரான்சன் (Pierce Bronson). 1995இல் முதல் தடவையாக ‘கோல்டன் ஐ’ (Golden Eye) படத்தில் பாண்டாக அறிமுகமான இவர் 2002இல் தனது இறுதிப் படத்தில் நடித்தார். திமோதி டால்டன் (Timothy Dalton) முதன்முறையாக 1987இல் ‘தி லிவிங் டேலைட்ஸ்’ (The living Daylights) படத்தில் பாண்டு வேடம் ஏற்றார். 1989இல் வெளிவந்த ‘லைசென்ஸ் டு கில்’ (Licence to Kill) இவரது இரண்டாவதும் இறுதியுமான படமாக அமைந்தது. எல்லோரையும் விட எண்ணிக்கையில் மிகக் குறைவாக, ஒரேயொரு படத்தில் நடித்தவர் ஜார்ஜ் லேசன்பை (George Lazenby). 1969இல் இவர் பாண்டாக நடித்த ஒரே படம் ‘ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரெட் சர்வீஸ்’ (On Her Majesty’s Secret Service).
தற்போது ஜேம்ஸ் பாண்டாக உலகை வலம் வந்துகொண்டிருப்பவர் டேனியல் கிரெய்க் (Daniel Craig). இவர் நடித்த ‘ஸ்கை ஃபால்’ (Skyfall) படம்தான் ஜேம்ஸ் பாண்டின் பொன்விழா ஆண்டுத் திரைப்படம் எனும் பெருமையைப் பெறுகிறது. இது 23ஆவது ஜேம்ஸ் பாண்டு திரைப்படம் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய தகவல்.
டேனியல் கிரெய்க்குக்கு இப்போது வயது 44. நவம்பர் 2006இல் ‘கேசினோ ராய’லில் (Casino Royale) தன் ஆட்டத்தைத் தொடங்கிய இவருக்கு ஸ்கை பால் மூன்றாவது திரைப்படம்.
77 வயதைப் பிடிக்கும் நடிகை ஜூடி டென்ச் (Judi Dench) வழமைபோலவே ஜேம்ஸ் பாண்டின் பெண் மேலதிகாரி எம் ஆக நடிக்கின்றார்.
தங்கள் தயாரிப்புகள் பாண்டு திரைப்படங்களில் இடம்பெற்றால் பிரபலம் கூடும் என்பதால், பல பிரபல நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை இந்தப் படங்களின் காட்சிகளில் கொண்டு வரப் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வாரிக் கொட்டுகின்றன. ஸ்கை ஃபாலில் கூட, மிகப் பிரபலமான ஹெய்ன்கென் (Heineken) பியரை அருந்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இதற்காக மாத்திரம் இந்த நிறுவனம் 28 மில்லியன் பவுண்டுகள் தொகையை அள்ளிக் கொடுத்துள்ளது! ஏறத்தாழ 9 கோடியே 37 இலட்சம் பவுண்டுகள் (150 மில்லியன் டாலர்) தொகையை விழுங்கிய இத்திரைப்படச் செலவின் மூன்றிலொரு பகுதித் தொகையை இந்த பியர் நிறுவனம் தன் விளம்பரத்திற்காகக் கொடுத்துள்ளது! 2008இல் வெளியிடப்பட்ட ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’ (Quantum of Solace) திரைப்படம் 12 கோடியே 50 இலட்சம் பவுண்டுகள் தொகையை விழுங்கியதால், இந்தத் தடவை பல கோடிகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் விழாவின் இறுதி நாள் விழாவின்போது, ஜேம்ஸ் பாண்டு இராணியாரின் மாளிகைக்குள் வந்து, அவரது மெய்க்காப்பாளன் போல விழா நடக்கும் அரங்கம் வரை அழைத்துச் செல்வதைப் பார்வையாளர்கள் உற்சாகத்தோடு வரவேற்றிருக்கின்றார்கள். .
இந்த ஜேம்ஸ் பாண்டு 007-ஐ அறிமுகப்படுத்திய எழுத்தாளர் இயன் பிளெமிங் பற்றி இங்கே கொஞ்சம் சொல்லியாக வேண்டும். 1964ஆம் ஆண்டே இந்த புகழ்பெற்ற எழுத்தாளர் மாரடைப்பால் மரணித்து விட்டாலும், அவரது கதாப்பாத்திரங்கள் இன்றும் உயிரோடு நம்மிடையே உலாவுகின்றன! எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான இவர், இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனின் கடற்படைப் புலனாய்வு அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கின்றார். இந்தப் போர்க்கால அனுபவங்கள் உளவுத்துறையும், அரசியலும் ஒன்று கலந்த இந்தப் புதினங்களை எழுத இவருக்குப் பேருதவியாக இருந்துள்ளன. இவரின் குடிப் பழக்கமே இவருக்கு எமனாக வந்து வாய்த்தது என்பது சோக வரலாறு!
ஆனால், காலத்தால் சாகாத கதாப்பாத்திரங்களைப் படைப்பவர்கள் ஞாலத்தால் என்றுமே மறக்க முடியாதவர்கள்!