தொடரும் கொலைகள்
ஆமாம்! இந்த முறை நடந்தது ஒரு கொலையல்ல – இரட்டைக் கொலைகள்! ஒரே இரவில்!
கொலை நடந்த பயங்கரமான அந்த இரவு, ‘இரட்டைச் சம்பவ இரவு’ என்று மக்களாலும் ஊடகங்களாலும் பெயரிடப்பட்டது. கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களும் அருகே 15 நிமிட நடை தூர இடைவெளியில் கிடந்தன. முதலில், அதிகாலை ஆறு மணிக்கு ஓர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது 30ஆம் தேதி செப்டம்பர் – ஞாயிற்றுக்கிழமை. பெர்னர்ஸ் தெருவில் ஒரு வீட்டுக் கதவின் வெளியே விழுந்து கிடந்த அந்த உடலை முதலில் பார்த்தது விலை மலிவான, பகட்டு நகைகளை விற்கும் ஒரு வியாபாரி. தன் போனி குதிரையில், தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்த அவன் ஒரு திருப்பத்தில் குதிரையைத் திருப்பியபோது அது ஓரிடத்தில் சட்டென்று நின்றது. அந்த இடத்தில் அவன் பார்த்தது ஒரு கருப்பான மூட்டை போலிருந்தது. அப்புறம்தான் அது மூட்டையல்ல – ஒரு பெண்ணின் சடலம் என்று புரிந்தது. அவன் ஒரு டார்ச் விளக்கை எடுத்து வர விரைந்து சென்றான். அவனுக்கு அப்போது தெரியாது ‘கொலைகாரன் தன் வேலையை முழுதுமாக முடிக்கவில்லை, கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறான்’ என்று! டார்ச் விளக்குடன் திரும்பியபோது அந்தப் பெண்ணின் கழுத்து வெட்டப்பட்டிருந்தது. ஆனால், உடல் உருக்குலைக்கப்படவில்லை. கொலைகாரனுக்கு அதற்கான நேரம் கிடைக்கவில்லை; அதற்குள் அந்த வியாபாரி வந்துவிட்டான். இறந்த பெண்ணின் கையில் இறுக்கமாகப் பிடித்திருந்த பை கூட அப்படியே பிடி விலகாமல் இருந்தது! அத்தனை விரைவாகக் கொலையாளி தன் வேலையை முடித்திருந்தான்.
போலிஸ் படை விரைவாக அந்த இடத்தை அடைந்தது. கொலை நடந்த அந்தத் தெருவே சற்று நேரத்தில் பரபரப்பாயிற்று. தெரு முழுவதையும் பக்கத்திலிருந்த வீடுகளையும் ஓர் இடம் விடாமல் சோதனை செய்தார்கள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சோதனை தொடர்ந்தது. அதற்குள் அடுத்த கொலை பற்றிய தகவல் வந்தது! இந்த முறை கொலைகாரன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதவனாக, படு துணிச்சலுடன் காரியத்தை முடித்திருந்தான். அவன் கொலை நடத்திய இடம் மிட்டர் சதுக்கம்! அது லண்டன் நகரத்தின் ஒரு சதுர மைல் தொலைவில்தான் இருந்தது. அப்போதும் சரி, இப்போதும் சரி அங்கு ஒரு போலிஸ் படை இயங்கிக்கொண்டே இருக்கும். அது இரு மருங்கிலும் கடைகள் நிறைந்த ஜனநெருக்கமான சாலை. கடைகளுக்கு எப்போதும் இரவுக் காவலர்கள் இருந்து கொண்டிருப்பார்கள். கொலை நடந்த இடத்திற்கு எதிரேயே ஒரு போலிஸ்காரரின் வீடு இருந்தது. மிட்டர் சதுக்கத்தைச் சுற்றிப் போலிஸ் இரவில் பதினைந்து நிமிஷத்துக்கு ஒருமுறை ரோந்து வந்து கொண்டிருக்கும். ரோந்து வரும் போலிஸ்காரர், அந்த எல்லையை விட்டு 15 நிமிஷத்தில் ஏழு நிமிஷங்கள்தான் வெளியிலிருப்பார். மீதி நேரத்தில் அவர் எங்கிருந்தாலும் சத்தம் கேட்டுவிடும்.
நள்ளிரவு ஒன்றரை மணிக்குத்தான் போலிஸ்காரர் தன் பிரகாசமான லாந்தர் விளக்குடன் அந்த இடத்தில் ரோந்து வந்திருக்கிறார். ஆனால் 1:45க்குத் திரும்பி வந்தபோது அவர் பார்த்த காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. ஒரு பெண்ணின் உடல் முழுதுமாகச் சிதைக்கப்பட்டுக் கை, கால்கள் விரிந்த நிலையில் இருந்த அந்தக் காட்சி அவரை அதிர்ச்சியடையச் செய்தது. கொலைகாரனின் நான்காவது பலி அந்தப் பெண்!
இந்தக் கொலை நிகழ்ந்திருக்கக்கூடாது! கொலை செய்யப்படுவதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன்னால்தான், கேட் கெல்லி அல்லது கேதரின் எட்டோஸ் என்று அறியப்பட்ட அந்தப் பெண் குடித்துவிட்டு போதையில் தன்னிலை அறியாது தள்ளாடிய நிலையில் போலீசால் கைது செய்யப்பட்டு, பிஷப்ஸ் கேட் காவல் நிலையத்தில் போதை தெளியும் வரை காவலில் வைக்கப்பட்டிருந்தாள். நள்ளிரவு நேரத்தில் அவள் போதை தெளிந்ததும் போலீஸார் அவளை வெளியே விட்டுவிட்டார்கள். செல்லுமுன்னால் அங்குள்ள காவலரிடம் அவள் சொன்ன வார்த்தை – ‘குட் நைட்’ என்பதுதான். ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு தள்ளாடியவாறே தனது தங்கும் விடுதியை நோக்கி அவள் வெளியேறினாள்.
இந்தக் கொலை லண்டனில் நடைபெற்றதால் இதைப் பற்றிய புலன் விசாரணையைப் போலிஸ் உதவி கமிஷனர் லெப்டினன்ட் சர் ஹென்ரி ஸ்மித் மேற்கொண்டார். அவர் எப்படியாவது இந்தத் தொடர்க் கொலைகாரனைப் பிடித்து விடவேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். ஸ்மித்திற்கும் நகரப் போலிஸ் கமிஷனராக இருந்த சர் சார்லஸ் வாரனுக்கும் இடையே எப்போதுமே ஒரு கடுமையான மோதல் இருந்தது. சார்லஸ் வாரன் நடந்த மற்ற கொலைகளுக்குப் புலன் விசாரணை செய்யும் அதிகாரியாக இருந்தாலும் இந்தக் கொலை அவரது எல்லைக்கு உட்பட்டதாக இல்லை.
ஸ்மித்துக்கு எப்படியாவது அந்தக் கொலைகாரனைப் பிடித்து விடவேண்டும் என்ற வெறி. தன்னிடமிருந்த காவல்படையில் மூன்றில் ஒரு பங்கை இந்தக் கொலைகாரனைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தினார். காவல் படையினரைச் சாதாரண உடையில் கண்காணிக்க வைத்து, "இரவில் நகரத்தில் எந்தப் பெண்ணும் தனியாகச் செல்லவிடாமல் பாதுகாக்க வேண்டும். அது அந்தப் பெண்ணையோ அல்லது அவளைக் கூட்டிச் செல்பவரையோ சங்கடப்படுத்துவதாக இருந்தால் கூடப் பரவாயில்லை" என்று கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், நான்காவதாகக் கொல்லப்பட்ட எட்டோஸ் எப்படியோ அவர்கள் கவனத்திலிருந்து தப்பிவிட்டாள். ஆராய்ந்து பார்த்தபோது, அவள் ஏன் ஸ்மித் கட்டளையிட்டது போலப் பின்தொடரப்படவில்லை, பெர்னர்ஸ் தெருவில் சற்று முன்னால் ஒரு கொலையைச் செய்து அந்தத் தாகம் தீராத வெறி பிடித்த கொலைகாரனை, காவலில் இருந்து வெளியான பல நிமிடங்களுக்குப் பிறகு எப்படி எட்டோஸ் சந்தித்தாள் என்பவை பற்றிக் கடைசி வரை குழப்பம் தீரவில்லை. மூன்றாவது கொலையைப் பார்த்த அந்த வியாபாரி விளக்கை எடுத்து வரச் சென்ற நேரத்திற்குள் கொலைகாரன் தப்பியிருக்க வேண்டும்.
பிணவறையில் சோதனையின்போது எட்டோசின் மேலங்கியில் ஒரு பகுதி மட்டும் காணவில்லை. காணாமல் போன அந்த அங்கியின் பகுதி ரோந்துப் பாதுகாவலர் ஒருவரால் கவுல்சன் தெருவில் கண்டுபிடிக்கப்பட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் வாயிலில் காணப்பட்ட அதில் ரத்தக்கறையுடனான கத்தி துடைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரிந்தது. குடியிருப்பின் வாசலில் ஒரு கதவில், பெயர் தெரியாத அந்தக் கொலைகாரன் கிறுக்கி வைத்திருந்த செய்தி
‘The Juwes are the men that will not be blamed for nothing.’
–தொடர்வான்…
“