ஜாக் என்ற மனித மிருகம் (1)

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொலைகளைச் செய்யும் தொடர் கொலைகாரர்களை நாம் பல திரைப்படங்களில் சந்தித்திருக்கிறோம். அப்படிப்பட்ட மனித மிருகம்தான் ஜாக்!

ஜாக்! – இவனது உண்மைப் பெயரல்ல. கடைசி வரை, இவன் யாரென்று கண்டறியப்படாததால் பெயர் தெரியாத இவனுக்கு இப்படி ஒரு நாமகரணத்தைச் சூட்டி வைத்தார்கள். இறுதி வரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியவன். தனியாகச் செயல்படும் துப்பறியும் நிபுணர் ஒருவர் இப்போதுதான் அவன் யாரென்று மரபணுக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டதாகக் கூறுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இங்கிலாந்தின் ஒதுக்கப்பட்ட நகரமான ‘ஒய்ட் சாப்பல்’ (Whitechappel) என்ற இடத்தில் வாழ்ந்தவன் ஜாக். இவன் கொலை செய்த அனைவரும் பெண்கள். தங்கள் உடலை விற்றுப் பிழைத்தவர்கள். வெறுமே கொன்றதோடு அவனது ஆவேசம் அடங்கியதில்லை. இருதயம், கல்லீரல் என்று பல பாகங்களைக் கைதேர்ந்த மருத்துவரைப் போலத் தனித் தனியாகப் பிரித்தெடுப்பான். இதனாலேயே ‘ஜாக் – உடலைக் கிழித்துக் கொலை செய்பவன்’ (ஜாக் தி ரிப்பர்) என்று அழைக்கப்பட்டான்.

லண்டனின் கிழக்குப் பகுதி ஒதுக்கப்பட்ட ஒன்று. இருண்ட ஆப்பிரிக்காவிற்கு இணையாகக் கருதப்பட்ட இது, ரஷ்யாவின் ஜார் ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பி வந்த அகதிகளும் வறுமைக்கோட்டுக்குக் கீழே ‘இனி வாழவே வழியில்லை’ என்ற நிலையிலிருப்பவர்களும் தஞ்சம் புகுந்த பகுதி. வறுமையில் வாடும் இந்த ஏழைகளால் கிழக்குப் பகுதி நிரம்பி வழிந்தது. அங்கு பிறக்கும் குழந்தைகளில் பல ஐந்து வயதுக்குள்ளேயே இறந்துவிடும் பரிதாபம்! ஒரு பகுதியினர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஓர் அறையில் சர்வ சாதாரணமாக ஏழு பேர் படுப்பார்கள். படுப்பதெற்கென்று படுக்கையோ தலையணையோ கிடையாது. சுருட்டி வைக்கப்பட்ட வைக்கோலும் அவர்களுக்குத் தலையணைதான். கரையான்களால் செல்லரித்துப்போன கதவுகளோடு கூடிய இடிந்த வீடுகளில்தான் அவர்கள் வாசம். அவர்களுக்குச் சரியான வேலை கிடையாது. பெண்கள் ஒருநாளைக்கு இருபத்துநாலு மணி நேரம் அடிமைகளாக வேலை செய்தார்கள். இந்தப் பெண்கள், கதைகளில் வருவதுபோல இளம் குமரிகள் அல்ல. 40 வயதுக்கு மேல் ஆன, ஒட்டிய மார்பகங்களும் உலர்ந்த வயிறும் கொண்ட பெண்கள். மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். கணவன்மார்களிடம் அடி உதைபட்டு உடல் புண்ணானவர்கள். ஜாக் கொலை செய்த ஒரு பெண் மிகவும் குறைந்த மலிவான ஆடைகளுடன் இருந்த பரம ஏழை. அவளுடைய பையில் இருந்தவை ஐந்து சின்னத் துண்டுகளான சோப்புக் கட்டிகள், தீக்குச்சிகள், ஒரு சின்ன மேஜைக் கத்தி, பஞ்சு, இரண்டு களிமண் குழாய்கள் மற்றும் சிறிது டீத்தூளும் சர்க்கரையும் வைத்திருந்த ஒரு சின்னப் பெட்டி அவ்வளவுதான்.

ஒயிட் சாப்பல் என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியில், 1888ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1200 விலை மாதர்களும், இத்தொழிலை நடத்தும் அறுபது விடுதிகளும் இருந்தன என்று சொல்லப்படுகிறது. தங்கள் உடலை ஒரு சின்ன ரொட்டித்துண்டிற்காகக் கூட விற்கத் தயாராகப் பல பெண்கள் இருந்தார்கள். மாடிப்படியோ வராந்தாவோ, எந்த இடம் கிடைத்தாலும் அதில் தொழில் நடத்தத் தயாராக இருந்த மிகப் பரிதாபமான நிலை. வறுமையின் விளிம்பிலே வாழ்ந்து வந்தனர்.

ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி – வெள்ளிக்கிழமை – 1888ஆம் ஆண்டு. பக்ஸ்ரோ எனும் இடத்தில் அதிகாலையில் நடந்து வந்த ஒரு சுமைக்கூலியின் கண்களில் அந்த கோரக் காட்சி தென்பட்டது. ஒரு வீட்டின் வாசல்கதவின் அருகில் விழுந்து கிடந்த ஒரு பெண். அந்த இடத்தில், தொலைதூரத்தில் மினுக்கிக் கொண்டிருந்த சின்ன விளக்கு – அவ்வளவுதான் வெளிச்சம் அங்கே. அவளுடைய பாவாடை இடுப்பு வரை தூக்கப்பட்டிருந்தது. அந்தச் சுமைக்கூலி முதலில் அந்தப் பெண்ணை யாரோ பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்று நினைத்தான். இல்லை, ஒருவேளை குடி மயக்கத்தில் சுருண்டிருக்கிறாளோ என்ற ஐயமும் எழுந்தது. அந்தச் சமயத்தில் இன்னொரு சுமைக்கூலியும் அங்கு வந்து சேர்ந்தான். அவனுக்கும் இதுபோலவே சந்தேகம் எழ, அந்த வீதியில் காவல் காக்கும் போலிசிடம் செல்லலாம் என்று தேடிச் சென்றார்கள். ஆனால், அதற்குள் போலிஸ்காரரே சம்பவ இடத்திற்கு வந்து, விழுந்து கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டார். அவரது டார்ச் வெளிச்சத்தில், அந்த இரண்டு சுமைக்கூலிகளாலும் கண்டுபிடிக்க முடியாத உண்மையை அவர் காண முடிந்தது. அந்தப் பெண்ணின் கழுந்து இந்தக் காதிலிருந்து அந்தக் காது வரை கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது. பின்பக்கம் முதுகெலும்பு வரை கத்தி பாய்ந்திருந்தது.

அங்கு ஒரு டாக்டர் வந்து பிணப் பரிசோதனைக்கு முன்னால் செய்ய வேண்டிய வழக்கமான சோதனைகள் செய்தார். பிறகு, அவள் விழுந்து கிடந்த இடத்தைத் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்கள். பிணவறைக்குச் சென்று சோதனை செய்வதற்காக ஆடைகளை நீக்கியபோதுதான் அந்தப் பெண் எவ்வாறு கிழிக்கப்பட்டு, உடல் அவயவங்கள் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தது. இடுப்புக் கீழே ஓர் ஆழமான கத்திக் குத்து! அவள் யார் என்று அடையாளம் காண்பதற்கு இருந்த தடயம் அவள் உடையிலிருந்த சில குறிகள்தான். அவள் மாதிரியே அங்க அடையாளமுள்ள ஒரு பெண் அங்குள்ள ஒரு பொது விடுதியிலிருந்து காணாமல் போனதும், அவள் பெயர் பாலி நிகோலஸ் என்பதும் தெரிய வந்தது. முன் ஐந்து பற்கள் விழுந்த 42 வயதான பெண் அவர். தன் தொடர் குடிப்பழக்கத்தினால் கணவரிடமிருந்து பிரிந்தவர். அந்தக் கணவனின் பாதுகாப்பில்தான் அவர்களது ஐந்து குழந்தைகளும் இருந்தன. அவள் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அவளைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் விடுதி அறைக்கான வாடகையைக் கொடுக்க முடியாததால் துரத்தி அடிக்கப்பட்டவர்.

இறக்கும்போது அவர் தலையில் ஒரு புதிய தொப்பி இருந்தது. நன்றாகக் குடித்திருந்தார். விடுதியிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டபோது, "நான் சீக்கிரமே உங்கள் பணத்தைத் தூக்கி எறிவேன்" என்று சொல்லியவாறே கைகளை ஆட்டியபடி தெருவில் நடந்து சென்றாராம். அப்போது அவருக்குத் தெரியாது – ‘இன்னும் 60 நிமிஷத்திற்குள் நம் விதி முடியப்போகிறது’ என்று. பாலி நிகோலசின் கொலைக்கான காரணம் எதுவாக இருக்கும் என்று தெரியவில்லை. விலைமாதர்களை ஒழிக்க வேண்டும் என்று குரலெழுப்பும் ஒரு குழுவினால் அவர் கொல்லப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஏற்கெனவே அந்தப் பகுதியில் நிகோலசின் கொலை நடந்த இடத்திற்குச் சற்றே தொலைவில் இரண்டு விலைமாதர்கள் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். ஏப்ரல் மாதத்தில் கொலை செய்யப்பட்ட எம்மா ஸ்மித் என்ற பெண், இறப்பதற்கு முன், ‘தன்னை நாலுபேர் சூழ்ந்து குத்தினார்கள்’ என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார். பலியான இன்னொருவர் மார்தா டாப்ரம். அவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஜார்ஜ் யார்ட்ஸ் என்ற கட்டடத்தில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 39 கத்திக் குத்துக்கள் இருந்தன.

இந்த இரண்டு கொலைகளிலுமே கொலையாளி யார் என்று கண்டுபிடிக்காத நிலையில் இப்போது புதிதாக பாலி நிகோலசின் கொலை போலிசுக்குப் புதுத் தலைவலியை ஏற்படுத்தியது. கொலை நடந்தபொழுது கொலையுண்டவரின் கதறலோ ஓலமோ யாருக்கும் கேட்டதாகத் தெரியவில்லை. யாராவது கொலையாளியை ரத்தக்கறையோடு பார்த்திருந்தால் கூட சந்தேகப்பட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்த இடத்தில் பல கசாப்புக் கடைகள் இருந்தன.
இந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு அடுத்த கொலை நிகழ்ந்தது!…

–தொடர்வான்…

About The Author