ஜனனி

கடத்திய ஒரு பேருந்தில் வந்திறங்கிய பத்து தீவிரவாதிகளும் ஊர்ப் பஞ்சாயத்தில் கூடியிருந்தவர்களை முற்றுகையிட்டார்கள். அந்த ஊரில் தஞ்சம் புகுந்திருக்கும் தங்களது முன்னாள் கூட்டாளியை தங்களிடம் ஒப்படைக்கக் கேட்டார்கள். தண்டனை கொடுக்கவா அல்லது மீண்டும் கூட்டுச் சேர்த்துக் கொள்ளவா என்பதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை..

ஊர்ப் பெரியவர்கள் தங்களை நம்பியிருக்கும் அந்தத் திருந்திய வாலிபனை திரும்ப ஒப்படைப்பதா அல்லது தாங்களே அவனுக்காகக் குடும்பத்தோடு பலியாவதா என்பதை முடிவு செய்ய அவர்களுக்குள்ளேயே கலந்து பேசிக் கொண்டார்கள்.

"சொந்தமா? பந்தமா..? அப்படியொண்ணும் இல்லியே..? பொழப்புக்காக நம்ம ஊருக்குள்ள வந்தவன்தானே..? அவனை ஒப்படைத்துவிடலாம்" என்று ஒரு சிலர் சொல்ல.. அப்படி ஒப்படைத்துவிட்டால் அவன் தானாக தற்போது ஊர்க்கார மக்கள் பலருக்கும் செய்து வரும் இலவச வேலைகளை அடுத்து யார் தொடர்வது என்று கவலையடைந்து சிலரும் வருத்தப்பட்டு தயங்கி நிற்க.. பஞ்சாயத்தாரால் ஒரு முடிவுக்கும் வரவில்லை

பிரச்சனைக்குக் காரணமான அவன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்தான் இந்த ஊருக்குள் காலடி எடுத்து வைத்தவன். எப்போதாவது ஊருக்குள் எட்டிப் பார்க்கும் பயணிகள் பேருந்தில் ஏழு வயதுச் சிறுமியுடனும் கிழிந்த உடைகளுடனும், அழுக்கு தோள்பையுடனும் வேலை தேடி வந்த அவன் சில நாட்களில் ஊர் மக்கள் அனைவருக்கும் அவசியமாகிப் போனான்.

அந்த ஊரின் பிரதானத் தொழிலான கல் உடைப்பது அவனது வெடி வைக்கும் திறமையால் வளர்ந்தது. செய்கின்ற வேலைக்குக் கூலியாக ஊரார்கள் போட்ட மீந்த சோற்றையும் பழைய துணிகளையுமே சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டான் அந்த முன்னாள் தீவிரவாதி. உடனிருந்த சிறுமி ஜனனியையும் தன்னால் இயன்ற அளவு நன்கு கவனித்துக் கொண்டான்.

தீவிரவாதிகள் விதித்த கெடு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் திருந்திய வாலிபனைக் காணவில்லை. வெளியூருக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் சொன்னார்கள் சிலர். கோபமடைந்த தீவிரவாதிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜனனியை பிணைக் கைதியாகப் பிடித்துக்கொண்டார்கள். சிரித்த முகத்துடன் மறுப்பேதும் சொல்லாத ஜனனி குடிசைக்குள் சென்று ஒரு தோள்பையை எடுத்துக் கொண்டு அவர்களுடன் கிளம்பினாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கி நின்ற ஊர்க்காரர்களைப் பார்த்து ஜனனி சிரித்தாள். கட்டை விரலை உயர்த்திக்காட்டி கையாட்டினாள்.

புரியாமலேயே ஊர்க்காரர்கள் கைகளை அசைத்து விடை கொடுக்க பேருந்து சீறிக் கொண்டு கிளம்புகிறது. ஜனனி உட்கார்ந்த நிலையிலேயே திரும்பி ஊர் மக்களை பார்த்தபடியே இருக்க அந்த நொடியில் திடீரென்று பேருந்து வெடித்துச் சிதறியது..

ஜனனி நினைத்ததை சாதித்துவிட்டாள்.

About The Author