சூர்யா நடித்த ஆதவன் வெளிவந்து சில நாட்களே ஆன நிலையில், கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த திரைப்படம் தயாராகிவிட்டது. ஆயிரத்தியெட்டாவது முறையாக (பதற வேண்டாம், ‘பத்தாவது முறைதான்!’) சரத்குமார் ரவிகுமாருடன் இணைகிறார். கதாநாயகியாக ஸ்ரேயா. இப்படத்தில் சரத்குமாரும் ஸ்ரேயாவும் தந்தை-மகளாக நடிக்கின்றார்கள். சரத்குமார்-ராதிகா இருவரும் தயாரிக்கும் இத்திரைப்படம் சீக்கிரமே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ரஃபியின் இசையமைப்பில் அமைந்த பாடல்களைக் கேட்டோம். தந்தை-மகள் உறவைப் பற்றிய கதை என்பதால் அநேகத்திற்கு காதல் டூயட் எல்லாம் இருக்கக் கூடாதே! ஏதாவது புதிதாக செய்ய வேண்டுமே! ரஃபி என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்போம் – அதாவது கேட்போம்!
ஆப்பிள் லாப்டாப்
இசைத்தட்டின் முதல் பாடலென்றால் துள்ளலும் துடிப்புமாக இருக்க வேண்டாமோ! எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கின்றார் ரஃபி. சங்கர் மஹாதேவனும் சின்மயியும் இணைந்து அழகாய்ப் பாடியிருக்கின்றார்கள். கபிலனின் வரிகளில் சுந்தரத் தமிழ் இனிக்கின்றது. நாயகியின் அழகையும், இளமையின் குதூகலத்தையும் போற்றும் பாடல். மிக மிக நீளமான பாடல் – தியேட்டரில் அமர்ந்து பார்ப்பதற்கு ரொம்பவும் பொறுமை வேண்டியிருக்கும்.
துறு துறு
வயலினும் கிடாரும் சேர்ந்து துறுதுறுவென்று ஆரம்பிக்கின்றது இப்பாடல். கதாநாயகிக்கு இன்னும் ஒரு பாடல் போல! காதல் மதியின் வரிகளை மஹேஸ்வரி ராணி பாடியிருக்கின்றார். அம்மணி! உச்சரிப்பைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளவும். தாளம் போட வைக்கும் பாடல். எலெக்ட்ரிக் கிடாரும் ட்ரம்ஸும் சக்கை போடு போடுகின்றன. பாட்டைக் கேட்கும் பொழுதே, ஸ்ரேயாவுக்கு ஆடைக்குறைப்பு நடனம் இருக்குமென்று தெரிகிறது. எப்பொழுதாவது நிஜமாகவே நடிக்கக் கற்றுக் கொள்வாரா?
ஏழு வண்ணத்தில்
கபிலனின் அழகான தமிழ் வரிகளில் ஒரு அருமையான மெலடியைத் தர முயன்றிருக்கிறார் ரஃபி. ஆங்காங்கே எலெக்ட்ரிக் கிடாரையும் வயலினையும் சேர்த்து மெருகேற்றுகின்றார். ஹரிஹரனின் குரல் பாடலுக்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. தன் மகளைப் பற்றி சரத்குமார் பாடுகின்றார் போலும்! பாடலின் நடுவே வரும் கார்ட்ஸ் மாற்றங்கள் கேட்போரை ரசிக்க வைக்கும். இப்பாடல் நல்லதொரு முயற்சி!
வா தினம் தினம்
இளமை ததும்பும் துள்ளலில் இன்னொரு பாடல். நண்பர்கள் தினத்தன்று எல்லோரும் அடிக்கும் கூத்தைப் பற்றி நா.முத்துகுமார் எழுத, சுனிதா சாரதி பாடலைப் பாடியிருக்கின்றார். வழக்கமான டப்பாங்குத்து டைப் பீட்ஸ், கிடார் என்று பாடலில் புதிதாக ஏதுமில்லை. சரி சரி, அடுத்த பாடல் ப்ளீஸ்!
துறு துறு (Slow)
முன்பு கேட்ட அதே பாடல் – கொஞ்சம் மென்மையைச் சேர்த்திருக்கின்றார் போல! சுனிதா சாரதியின் குரலோடு கலந்த வயலினும் பியானோவும் பாடலின் ஆரம்பத்திற்கு இதம் தருகின்றன. பாடலின் பின்னணியில் வெறும் கிடாரும் ட்ரம்ஸும் கேட்கின்றன. கேட்பதற்கு நன்றாகவே இருக்கின்றது. சுனிதா சாரதியின் உச்சரிப்புதான் கொஞ்சம் மோசம். பாடுவது சில இடங்களில்தான் புரிகிறது!
அன்புள்ள மான்விழியே
"குழந்தையும் தெய்வமும்" திரைப்படத்தில் சௌந்தரராஜன் – சுசீலா பாடிய மறக்க முடியாத பாடலின் மறு பிம்பம். நல்ல வேளை! ரீ-மிக்ஸ் என்று கொலை செய்யவில்லை. கொஞ்சம் பீட்ஸுடன் கலந்து ரஃபியும் மஹேஸ்வரி ராணியும் அதே பாடலை அப்படியே பாடியிருக்கிறார்கள். என்ன, இத்தனை நாட்களுக்குப் பிறகும் பழைய பாடலே இனிதாகத் தெரிகிறது! டி.எம். எஸ்ஸின் உச்ச ஸ்தாயியை கஷ்டப்பட்டு இவர் எட்ட முயற்சிப்பது எடுபடவில்லை. ரஃபி – உங்கள் சொந்த முயற்சிகள் நன்றாகவே இருக்கின்றன, அதனையே தொடர்ந்து செய்யுங்களேன்!
அச்சம் மடம் நாணம்
கல்யாண்ஜியின் வரிகளில், சுசித்ராவின் குரலில் இன்னும் ஒரு க்ளப்-டான்ஸ் டைப் பாடல். வாத்தியங்களை இறைக்காமல் இருக்க பாடுபட்டு இருக்கிறார்கள். இருந்தும், தியேட்டரிலிருந்து எழுந்து மக்கள் வெளியே செல்வது உறுதி!! ஸ்ரேயாவின் ஆட்டத்தைப் பார்க்க விரும்புவோர் மட்டும் மிஞ்சலாம்.
செண்டிமெண்ட் – ஆக்ஷன் என்று கலந்து தருவது கே.எஸ்.ரவிகுமாரின் வழக்கம். அவரது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது போலவே இப்பாடல்களும் அமைந்துள்ளன. என்ன, இன்னும் ஓரிரண்டு மெலடிகளையும் சேர்த்திருக்கலாம். பரவாயில்லை, இனி வரும் நாட்களில் ரஃபியிடமிருந்து இன்னும் பல நல்ல பாடல்கள் வரும் என்று எதிர்பார்ப்போம்.
“
வேட்டைக்காரன் இசை விமர்சனம் போட மாட்டீங்களா