கொஞ்சம் கொஞ்சமாக மாணிக்கவல்லியிடமிருந்து முன் அத்தியாயத்தில் கூறிய விவரங்களையெல்லாம் மகாராஜா உலகநாதத்தேவர் கேட்டுத் தெரிந்து கொண்டார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து சும்மா இருந்த பிறகு இளவரசியை ஏறிட்டுப் பார்த்து, "உன் தந்தை என்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கிறார், என் பேரில் எவ்வளவு வன்மம் வைத்திருக்கிறார் என்று தெரிந்திருந்தும் என்னை இங்கே இருக்க வேண்டுமென்று சொல்லுகிறாயா" என்று கேட்டார்.
"முக்கியமாக அதனாலேதான் உங்களை இங்கேயே இருக்கச் சொல்லுகிறேன். இந்தக் கோட்டையில் இருந்தால்தான் நீங்கள் உயிர் தப்பிப் பிழைக்கலாம்"என்றாள் இளவரசி மாணிக்கவல்லி.
"எப்படியாவது உயிர் தப்பிப் பிழைத்தால் போதும் என்று ஆசைப்படுகிறவன் என்பதாக என்னை நீ நினைக்கிறாயா? மறவர் குலத்தில் இதற்குமுன் எத்தனையோ வீராதி வீரர்கள் இருந்திருக்கிறார்கள். மதுரைச் சிம்மாசனத்தில் அமர்ந்து குமரிமுனை முதல் இயமமலை வரையில் வீர பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்து மறவர் குலத்துக்கு என்றும் அழியாத புகழைத் தந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் போன்ற மகாவீரன் என்பதாக என்னை நான் சொல்லிக் கொள்ளவில்லை. ஆயினும் உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ளக்கூடிய அவ்வளவு கேவலமான கோழை அல்ல நான். வீர மறவர் குலத்துக்கும் புராதன மாறனேந்தல் வம்சத்துக்கும் அப்படிப்பட்ட களங்கத்தை நான் உண்டாக்கக்கூடியவன் அல்ல…"
உலகநாதத்தேவர் மேலே பேசிக்கொண்டு போவதற்கு முன்னால் சோலைமலை இளவரசி குறுக்கிட்டு, "ஐயா! அதோ குன்றின்மேல் தெரியும் சந்திரன் சாட்சியாகச் சொல்லுகிறேன்; தங்களை உயிருக்குப் பயந்தவர் என்றோ வீரமில்லாத கோழை என்றோ நான் ஒரு கணமும் நினைக்கவில்லை. எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள் என்றுதான் தங்களை வேண்டிக் கொள்கிறேன். தங்களுக்கு ஏதாவது அபாயம் நேர்ந்தது என்று தெரிந்தால் அதற்குப் பிறகு என்னால் ஒரு நிமிஷமும் உயிர் வைத்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி இன்றைக்கே நீங்கள் கட்டாயம் போகத்தான் வேண்டுமென்றால் என்னையும் தங்களுடன் அவசியம் அழைத்துக் கொண்டு போக வேண்டும். தங்களுக்கு ஆகிறது எனக்கும் ஆகட்டும்"என்றாள். அப்போது உலகநாதத் தேவருக்கும் பூமி தம்முடைய காலின் கீழிருந்து நழுவிச் சென்றுவிட்டது போலவும் தாம் அந்தரத்தில் மிதப்பது போலவும் தோன்றியது. தம்முடைய காதில் விழுந்த வார்த்தைகள் தாம் உண்மையாகக் கேட்டவைதானா அவற்றைச் சொன்னது இதோ தம் எதிரில் இருக்கும் திவ்ய சௌந்தரியவதியின் செவ்விதழ்தானா என்ற சந்தேகத்தினால் அவருடைய தலை சுழன்றது.
சற்றுப் பொறுத்து, "நீ சொன்னதை இன்னொரு தடவை சொல்லு! என் செவிகள் கேட்டதை என்னால் நம்ப முடிய வில்லை" என்றார் மாறனேந்தல் மன்னர்.
"ஏன் நம்பமுடியவில்லை? – நிஜந்தான்; நம்ப முடியாதுதான். என் தகப்பனாரைப் பற்றி நானே அவ்வளவு சொன்ன பிறகு அவருடைய மகளை நம்புங்கள் என்றால் எப்படி நம்ப முடியும்? என் வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கை உண்டாகாதுதான். எந்தச் சமயத்தில் என்ன துரோகம் செய்துவிடுவேனோ என்று சந்தேகப்படுவதும் இயல்புதான். அப்படியானால் உங்கள் இடுப்பில் செருகியிருக்கும் கத்தியை எடுத்து என் நெஞ்சில் செலுத்தி ஒரேயடியாக என்னைக் கொன்றுவிட்டுப் போய்விடுங்கள்! அதன் பிறகாவது என்னிடம் உங்களுக்கு நம்பிக்கை பிறக்குமல்லவா? அதுவே எனக்குப் போதும்." அடிக்கடித் தேம்பிக்கொண்டே மேற்கண்டவாறு பேசிவந்த மாணிக்கவல்லியை இடையில் தடுத்து நிறுத்த உலகநாதத்தேவரால் முடியவில்லை. அவளாகப் பேச்சை நிறுத்தி விட்டுக் கண்ணீரை மறைப்பதற்காக வேறுபக்கம் பார்த்த பிறகுதான் அவரால் பேச முடிந்தது.
"இளவரசி! என்ன வார்த்தை பேசுகிறாய்! உன்னிடம் எனக்கு நம்பிக்கையில்லையென்று நான் சொல்லவேயில்லையே! நீ கூறிய விஷயம் அவ்வளவு அதிசயமாக இருந்தபடியால் என்னுடைய காதை என்னால் நம்ப முடியவில்லை" என்றுதானே சொன்னேன்? "என் கண்ணே இதோ பார்!"என்று கூறியவண்ணம் பூஜைக்குரிய புஷ்பத்தை ஒரு பக்தன் பூச்செடியிலிருந்து எவ்வளவு மென்மையாகத் தொட்டுப் பறிப்பானோ அவ்வளவு மென்மையாக உலகநாதத்தேவர் இளவரசியின் மோவாயைப் பற்றி அவள் முகத்தைத் தம்பக்கம் திருப்பிக் கொண்டார். "இன்னொரு தடவை சொல்! உன்னைப் பெற்று வளர்த்து எவ்வளவோ அருமையாகக் காப்பாற்றி வரும் தகப்பனாரையும் இந்தப் பெரிய அரண்மனையையும் இதிலுள்ள சகல சம்பத்துக்களையும் சுகபோகங்களையும் விட்டுவிட்டு இன்று காலையிலேதான் முதன் முதலாகப் பார்த்த ஓர் அநாதையோடு புறப்பட்டு வருகிறேன் என்றா சொல்கிறாய்!" என்றார்.
"ஆமாம்; அப்படித்தான் சொல்கிறேன். ஒரு வேளை எனக்குப் பைத்தியந்தான் பிடித்துவிட்டதோ என்னமோ! இன்று காலையிலேதான் உங்களை நான் முதன் முதலாகப் பார்த்திருந்தாலும் எத்தனையோ காலமாக உங்களைப் பார்த்துப் பேசிப் பழகியது போலிருக்கிறது. உங்களை விட்டு ஒரு நிமிஷமும் என்னால் பிரிறிந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. உங்களுக்கு வேண்டியவர்கள் எல்லோரும் எனக்கும் வேண்டியவர்கள்; உங்களுடைய விரோதிகள் எல்லாரும் எனக்கும் விரோதிகள் என்பதாகவும் தோன்றுகிறது. இன்று சாயங்காலத்திலிருந்து என்னுடைய தகப்பனாரின் மேலேயே கோபமாயிருக்கிறது."
"இளவரசி, வேண்டாம்! இந்த மாதிரி தெய்வீகமான அன்பைப் பெறுவதற்கு நான் எந்த விதத்திலும் தகுதியுடையவனல்ல. எவ்வளவோ கஷ்டப்பட வேண்டியவன் நான்.; துன்பமும் துயரமும் அநுபவிப்பதற்காகவே பிறந்திருக்கும் துரதிருஷ்டசாலி. கட்டத் துணியில்லாத ஆண்டிப் பரதேசியைப் பார்த்து "உனக்குச் சாம்ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறேன்" என்று சொன்னால் அது தகுதியாயிருக்குமா கடவுளுக்குத்தான் பொறுக்குமா?"
"கடவுளுக்குப் பொறுக்காது என்று ஏன் சொல்லுகிறீர்கள்? ஆண்டவனுடைய சித்தம் நம் இருவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று இருந்திராவிட்டால் இந்த மாதிரியெல்லாம் நடந்திருக்குமா? உங்களுக்கு ஏன் எதிரியின் கோட்டைக்குள்ளே ஒளிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது? நான் எதற்காக இராத்திரியெல்லாம் தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்து விட்டு அதிகாலை நேரத்தில் தோட்டத்தில் பூப்பறிப்பதற்காக வருகிறேன்? சோலைமலை முருகனுடைய சித்தத்தினாலேயே இவ்விதமெல்லாம் நடந்திருக்க வேண்டும். ஆண்டவனுடைய சித்தத்துக்கு விரோதமாகத் தாங்கள் தான் பேசுகிறீர்கள்."
"இளவரசி! நீ என்னதான் சொன்னாலும் சரி; எப்படித்தான் வாதாடினாலும் சரி; பயங்கரமான அபாயங்கள் நிறைந்த மகாசமுத்திரத்தில் குதிக்கப்போகும் நான் கள்ளங் கபடமற்ற ஒரு பெண்ணையும் என்னோடு இழுத்துக் கொண்டு குதிக்க மாட்டேன். அத்தகைய கல் நெஞ்சமுடைய கிராதகன் அல்ல நான்."
"அப்படியானால் நான் சொல்வதைக் கேளுங்கள்!. இங்கேயே இன்னும் சில நாள் தங்கியிருங்கள். உங்களுக்கும் அபாயம் ஏற்படாது; எனக்கும் கஷ்டம் இல்லை."
"அது எப்படி மாணிக்கவல்லி? உன் தகப்பனார் என்னை அவ்வளவு கொடுமையாகத் தண்டிக்க எண்ணி இருக்கும்போது இந்தக் கோட்டைக்குள்ளே நான் தங்கியிருப்பது எப்படிப் பத்திரமாகும்? இங்கே இருப்பதுதான் எனக்கு ரொம்பவும் அபாயம் என்பது உனக்குத் தெரியவில்லையா?" இதைக் கேட்ட மாணிக்கவல்லி உலகநாதத் தேவரைக் கம்பீரமாக ஏறிட்டுப் பார்த்துக் கூறினாள்: "ஐயா! என் தகப்பனார் மிகவும் பொல்லாதவர்தான்; மூர்க்க குணம் உள்ளவர்தான். உங்களிடம் அவர் அளவில்லாத கோபம் கொண்டிருப்பது உண்மையே. ஆனாலும் அவருக்கு என்னிடம் மிக்க அன்பு உண்டு. அவருடைய ஏக புதல்வி நான். தாயில்லாப் பெண். என்னை அவருடைய கண்ணுக்குள் இருக்கும் மணி என்று கருதிக் காப்பாற்றி வருகிறார். அவர் கோப வெறியில் இருக்கும்போது அவருடன் பேசுவதில் பிரயோஜனம் ஒன்றும் இல்லை. ஆனால் கொஞ்சம் சாந்தம் அடைந்திருக்கும் சமயம் பார்த்துப் பேசி அவருடைய மனத்தை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இத்தனை காலமும் நான் கேட்டதை அவர் "இல்லை"என்று சொன்னதில்லை. உங்கள் விஷயத்திலும் அவருடைய மனத்தை மாற்ற என்னால் முடியும். நிச்சயமாக முடியும் என்ற தைரியம் எனக்கு இருக்கிறது. அதற்கு நீங்கள் மட்டும் உதவி செய்ய வேண்டும். நான் சொல்கிற வரையில் இங்கேயே இருக்க வேண்டும்."
"நீ சொல்லுகிறபடி இங்கேயே இருப்பதற்கு நான் இஷ்டப்பட்டாலும் அது எப்படிச் சாத்தியம்? இந்த அரண்மனைத் தோட்டத்தில் நான் ஒருவர் கண்ணிலும் படாமல் காலங்கழிக்க முடியுமா? தோட்டக்காரர்கள் வேலைக்காரர்கள் வரமாட்டார்களா? வேளைக்கு வேளை நீ எனக்குச் சாப்பாடு கொண்டுவந்து போட்டுக் கொண்டிருக்க முடியுமா? திடீரென்று என்றாவது ஒருநாள் உன் தகப்பனார் இங்கே வந்து என்னைப் பார்த்து விட்டால் அல்லது நீயும் நானும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டால் எவ்வளவு விபரீதமாக முடியும்? இளவரசி கொஞ்சம் யோசித்துப் பார்! உனக்கும் கஷ்டத்தை உண்டாக்கிக் கொண்டு என்னையும் வீணான ஆபத்துக்கு உள்ளாக்காதே…"என்று உலகநாதத்தேவர் சொல்லி வந்தபோது இளவரசி குறுக்கிட்டுப் பேசினாள்:
"நான் எல்லாவற்றையும் மிக நன்றாக யோசித்து விட்டுத்தான் சொல்லுகிறேன். தங்களுடைய பத்திரத்தைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தப் பெரிய அரண்மனைக்குப் பின்னால் "சின்ன நாச்சியார் அரண்மனை" என்று ஒரு கட்டிடம் இருக்கிறது. அது வெகு காலமாகப் பூட்டிக் கிடக்கிறது. எங்கள் வம்சத்தில் நூறு வருஷத்துக்கு முன்னால் அரசாண்ட மகாராஜா – என் பாபட்டனாருக்குப் பாட்டனார் – தம்முடைய சின்ன ராணியின் பேரில் ஏதோ சந்தேகப்பட்டு அந்த அரண்மனையில் அவளைத் தனியாகப் பூட்டி வைத்திருந்தாராம். அதற்குப் பிறகு அங்கே யாரும் வசித்தது கிடையாதாம். அந்த அரண்மனையின் சாவி என்னிடம் இருக்கிறது. தாங்கள் அங்கே பத்திரமாக இருக்கலாம். அப்பா கோட்டையில் இல்லாத நாட்களில் இருட்டிய பிறகு நாம் சந்திக்கலாம். என்னுடைய செவிலித் தாய் வீரம்மா எனக்காக உயிரைக் கொடுக்கக்கூடியவள்; உங்களிடமும் அவளுக்கு ரொம்ப மரியாதை உண்டு. உங்களைப் பற்றி இந்திரன் சந்திரன் என்றெல்லாம் என்னிடம் புகழ்ந்து பேசியிருக்கிறாள். அவள் மூலமாகத் தங்களுக்குச் சாப்பாடு அனுப்புகிறேன். அந்த ஏற்பாட்டையெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள். நான் சொல்லுகிறபடிக் கொஞ்ச காலம் இங்கே இருப்பதாக மட்டும் தாங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்.."
இப்படி இளவரசி சொல்லிக் கொண்டிருந்தபோது கோட்டை மதிலுக்கு அப்பால் வேட்டை நாய்கள் உறுமுகின்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து நாய்கள் குரைக்கும் சத்தமும் கேட்டது. இளவரசி சட்டென்று உலகநாதத் தேவரின் இரண்டு கரங்களையும் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். அவளுடைய உடம்பெல்லாம் அப்போது நடுங்கியதை உலகநாதத்தேவர் உணர்ந்தார். அவளுடைய மார்பு "படபட"வென்று அடித்துக்கொண்ட சத்தங்கூடத் தேவரின் காதில் இலேசாகக் கேட்டது.
"அதோ நாய் குரைக்கிறதே,; அந்த இடத்திற்குச் சமீபமாகத்தானே தாங்கள் கோட்டை மதிலைத் தாண்டிக் குதித்தீர்கள்?" என்று மாணிக்கவல்லி நடுக்கத்துடன் கேட்டதற்கு உலகநாதத்தேவர்"ஆமாம்" என்று கம்மிய குரலில் விடையளித்தார். வேட்டை நாய்கள் மேலும் குரைத்தன. அவற்றை யாரோ அதட்டி உசுப்பிய சத்தமும் அவர்களுக்குக் கேட்டது.
மாணிக்கவல்லி முன்னைவிடக் கெட்டியாக உலகநாதத்தேவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் ததும்பிய கண்களால் அவரைப் பார்த்து, "ஐயா! தங்களை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தங்களுடைய ஜன்ம விரோதியின் மகளாயிருந்தாலும் இன்றைக்கு ஒருநாள் மட்டுமாவது என்னை நம்புங்கள்!. இன்று இராத்திரி நீங்கள் வெளியே போகவேண்டாம்" என்று கல்லும் கரையும் குரலில் கேட்டுக் கொண்டாள். ஏற்கனவே உள்ளம் கனிந்து ஊனும் உருகிப் போயிருந்த மாறனேந்தல் மகாராஜா மேற்படி வேண்டுகோளைக் கேட்டதும், "இன்று ஒருநாள் மட்டுமல்ல; இனி என்றைக்குமே உன் விருப்பந்தான் எனக்குக் கட்டளை. நீ என் ஜன்ம விரோதியின் மகள் அல்ல; அன்பினால் என்னை அடிமை கொண்ட அரசி;. "போகலாம்" என்று நீ சொல்லுகிற வரையில் நான் இங்கிருந்து போகவில்லை" என்றார். இதைக் கேட்ட மாணிக்கவல்லி உணர்ச்சி மிகுதியால் நினைவை இழந்து மாறனேந்தல் அரசரின் மடியில் சாய்ந்தாள்.
—தொடர்வாள்…