மேதாவித்தனமான தலைப்புடன் சிவா கதாநாயனாக நடிக்கும் படம். இசை யதீஷ் மஹாதேவ். இயக்கம் கிருஷ்ணன் ஜெயராஜ். மொத்தம் ஐந்து பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். விரிவாகப் பார்ப்போம்.
கேளு மகனே கேளு!
கல்யாணத்துக்கு முன்னும் பின்னுமான மொத்த வாழ்க்கையை ஓர் ஐந்து நிமிடப் பாடலில் அடக்கி விட முடியுமா? முடியும் என்று எழுதிக் காட்டியிருக்கிறார் மதன் கார்க்கி. இதைச் சிறுகதை என்றே சொல்லலாம். அதற்காக ஏதோ சீரியசான பாடல் என நினைத்து விடாதீர்கள்! உண்மையில் ஒரு ஜாலியான பாடல். இடையிடையில் வரும் சிவாவின் குரல் கிச்சுக் கிச்சு மூட்டுகிறது. சிரிக்க வைக்கும் இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் ஜெகதீஸ்.
கண்ணைக் கட்டி ரோட்டில் விட்டாலும் புள்ளைங்கள சைட் அடிப்பானே
பொண்ணு ஒண்ணு பெத்துக்கிட்டானே பொத்திப் பொத்தி வெச்சுக்கிட்டானே! – சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வரிகள்.
காலியான சாலையில்
எஸ்.பி.பி.சரண் – சின்மயி குரல்களில் மனதை வருடும் ஒரு மெல்லிசைப் பாடல். இதுவும் கார்க்கியின் கை வண்ணமே! இடையில் சுருதி சேர்க்க ஒலிக்கும் டிரம்பட் நல்ல ரசனை! பாடல் நெடுகிலும் தவழும் டிரம்ஸ் இசை, வரிகளைப் பதமாகத் தாங்கிப் பிடிக்கிறது. இருவரது குரல்களும் பாடலுக்குக் கச்சிதப் பொருத்தம். அதுவும் சரணின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இதை எழுதுவதற்கே எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கு நினைவில்லை!
எனை – உனது மடியில் கிடத்திக் கடத்து உலகை வலம்வர
உனை – அணைக்கும் நொடியில் துடிக்க மறந்து இதயம் அதிர்வுற – மலைப்பூட்டும் இயைபு (Rhyming).
தேவதையே ராட்சஸியே
"ஐ அம் வெரி ஹேப்பி" என்ற கவுண்டமணியின் குரலுடன் தொடங்கும்போதே இதுவும் கலாட்டாவான பாடல்தான் என்று புரிந்து விடுகிறது. பாடலின் மெட்டு என்னவோ பழக்கப்பட்டதுதான் என்றாலும் ரஞ்சித்தின் குரலும் நா.முத்துக்குமாரின் விரலும் பாடலைக் கேட்க வைக்கின்றன. இடையிடையே பிரபலமான வசனங்களைச் சேர்த்திருக்கிறார்கள். ஏனென்றுதான் தெரியவில்லை. ஒருவேளை, காட்சியமைப்பில் காரணம் பொதிந்திருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!
மூன்றே வரியுள்ள ஹைக்கூ இவள்தானோ
முடிவின் வரியோடு
புதுத் திருப்பம்! – அசரடிக்கும் வர்ணனை!
உன் தோளில் சாய்ந்து
இது சோகம் பாடும் பாடல். எம்.கே.பாலாஜி பாடியிருக்கும் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். பாடல் தொடங்கும்போதே இது வலி சொல்லும் பாடல்தான் என யூகிக்க முடிகிறது. உயிர்ப்புடன் ஒலிப்பது பாடலுக்குக் கூடுதல் பலம்.
புரியாமல் சண்டைகள் போட்டோம் அன்று நாமடி
புரிந்தாலும் தள்ளி நிற்கிறோம் இன்று ஏனடி? – மனதில் இலேசான பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறது.
ஐயையோ போச்சே
நக்கலான வர்ணனையுடன் ஆரம்பிக்கும் பாடல். பிரிந்த காதலை, மேற்கத்திய இசையில் கொஞ்சம் பழக்கப்பட்ட வார்த்தைகளுடன் பாடலாக்கியிருக்கிறார்கள். படத்தின் இசையமைப்பாளரே இதை எழுதியிருக்கிறார். இசை புதிது இல்லை என்றாலும் கவனிக்க வைக்கிறது.
எல்லாமே போச்சே! மாயமாய் ஆச்சே! என் காதல் டேஷ் ஆச்சே!
அது ஃபில் இன் த பிளாங்கஸ் ஆச்சே! – புதுமை வரிகள்!
தீம் மியூசிக்
பேஸ் கிதாரின் (Bass Guitar) ஆதிக்கம் முற்பாதியிலும் வயலினின் ஆதிக்கம் பிற்பாதியிலும் என நீளும் இசைக் கோவை. இரண்டுக்குமே டிரம்ஸ் பக்க பலமாக ஒலிக்கிறது. கேட்கும்போது நம் கண்முன்னே ஏதோ ஒன்றைக் காட்சிப்படுத்துகிறது.
சொன்னாப் புரியாது – கேட்டால் புரியும்.
“