"சாய்ங்காலம் சினிமாக்குப் போகலாமாங்க?" என்றாள் ஆர்வத்துடன்.
"ஏன், இன்னிக்கி ட்யூஷன் இல்லியா?" என்று நான் ஒரு எதிர்க் கேள்வி வைத்ததற்கு, "இன்னிக்யா? ட்யூஷனா?" என்றொரு புதிர்க் கேள்வியை வைத்து விட்டு பாத்ரூமுக்குள் மறைந்து விட்டாள்.
இவள் சென்னையில் ஒரு ஸ்கூல் டீச்சராய், பகலில் பள்ளிக்கூடம், சாயங்காலம் ட்யூஷன் என்று அல்லல் பட்டுக் கொண்டிருக்க, ஐயாவுக்குத் திருச்சியில் ஜாலியான அரசாங்க உத்யோகம்.
மாசத்துக்கொருதரம் எம்முடைய தலைநகர் விஜயத்தின் போதுதான் நம்ம ஆளுக்குக் கொஞ்சம் ஆனந்தம்.
நான் கோரிக்கை வைத்ததற்கிணங்க பல ட்யூஷன்களைத் தியாகம் செய்துவிட்டாலும், லலிதா என்கிற ஃபஸ்ட் ராங்க் பெண்ணை மட்டும் கழட்டி விட மனசில்லாமலிருந்தாள். ஃபஸ்ட் ராங்க்காரி என்பது மட்டுமல்லாமல், லலிதா டபுள் ஃபீஸ் தருகிற பணக்காரி என்பதும் ஒரு காரணம்.
சத்யம் த்யேட்டரை நோக்கி சாயங்காலம் ஆட்டோவில் போகிற போது, ட்யூஷன்ப் புதிரைத் திரையவிழ்க்குமுகமாய்க் கேட்டேன் இவளிடம்.
"ஒன் லலிதா நேத்து வந்தாளே, இன்னிக்கி வர மாட்டாளா?"
"என் லலிதாவா, அது யாரது என் லலிதா?"
புதிர் பெரிசாகிக் கொண்டே போனது எனக்குப் பொறுக்கவில்லை.
மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
கொஞ்சம் பொறுத்துப் பார்த்து விட்டு, “என்னமோ கேட்டீங்களே?” என்று இடித்தாள்.
"ஒண்ணுமில்லியே" என்றேன்.
"அட, கோவத்தப் பாரு!" என்று என் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினாள்.
"அந்த லலிதாவ நேத்தே டிஸ்மிஸ் பண்ணிட்டேன்."
"டிஸ்மிஸ்ஸா! ஃபஸ்ட் ராங்க்காரின்னு சொன்ன?"
"பஸ்ட் ராங்கிக்காரி."
"டபுள் வேஜஸ் குடுக்கற பெருத்த பணக்காரின்னு சொன்ன?"
"பழுத்த பணக்காரி. பிஞ்சுல பழுத்தது."
"புரியல."
"நீங்க நேத்து ஈவ்னிங் வீட்டுக்குள்ள நொழஞ்சப்ப அவளுக்கு நா ட்யூஷன் எடுத்துட்டிருந்தேன்ல?"
"ஆமா. நா வந்தவொடன ட்யூஷன அம்போன்னு விட்டுட்டு பெட்ரூமுக்குள்ள ஓடிவந்துட்ட. வந்தது மட்டுமில்லாம…"
"சீ. நம்ம அந்தரங்கத்த ஆட்டோல ஏத்தாதிங்க. நா வந்த வேலய முடிச்சிட்டுத் திரும்ப அவளுக்குப் பாடம் சொல்லிக்குடுக்கப் போனேனா?"
"போனே."
"அது யார் மிஸ், ஒங்க ஹஸ்பண்டான்னு கேட்டா."
"அதெப்டி, கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டா!"
"சொல்றதக் கேளுங்க. ஆமா என் ஹஸ்பண்ட்தான். அதப்பத்தி ஒனக்கென்ன, நீ பாடத்தப் படிடீன்னேன். அப்ப ஒங்களப்பத்தி அவ ஒரு காமென்ட் அடிச்சா பாருங்க…."
"என்னப்பத்திக் காமென்ட் அடிச்சாளா? அவள நீ சும்மாவா விட்ட?"
"அதான் சொன்னேனே, ஒடனே டிஸ்மிஸ் பண்ணிட்டேன்னு. நீங்க இப்டித்தான் கொதிச்சுப் போவீங்கன்னு எனக்குத் தெரியும். ஸாரி மிஸ், ஸாரி மிஸ்னு கெஞ்சினா, அழுதா. நோன்னா நோதான். யூ ப்ளீஸ் கெட் அவுட்னு வெரட்டி விட்டுட்டேன்."
"குட். ஆமா… வந்து… அவ என்னப்பத்தி என்ன காமென்ட் அடிச்சா?"
"கொஞ்சங்கூட வெக்கமில்லாம, விவஸ்தையில்லாம, சங்கோஜப்படாம, ஒங்க ஹஸ்பண்டா மிஸ்?, ஹெள ஹாண்ஸம்! ங்கறாங்க."
"ஹா, என்னப்பாத்து ஹாண்ஸம்னு சொன்னாளா! அதுக்காக டிஸ்மிஸ்ஸா? உண்மையச் சொன்னதுக்கு இவ்ளவு பெரிய தண்டனையா? லோகத்ல சத்தியத்துக்கு இடமேயில்லியா?"
(மீதி அடுத்த வாரம்)